தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு மிகப்பெரிய தொங்கு சட்டசபையை உருவாக்கியுள்ள நிலையில், நிலவும் விசித்திரமான அரசியல் சூழல் மற்றும் ராகுல் காந்தியின் திடீர் முடிவுகள் திராவிடக் கட்சிகளுக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளன. 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ் தனது 5 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவை அளிக்க முன்வந்துள்ளது.
ராகுல் காந்தியின் இந்த அதிரடி முடிவு, திமுக-காங்கிரஸ் இடையிலான நீண்ட கால கூட்டணியை முறித்துள்ளது மட்டுமல்லாமல், திராவிடக் கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி அமைக்கும் கனவிலும் மண்ணள்ளிப் போட்டுள்ளது. “மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டும்” என்ற அடிப்படையில் காங்கிரஸ் தவெக-விற்கு ஆதரவு அளிப்பது, திமுக தரப்பை “துரோகம்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தும் அளவுக்குக் கோபப்படுத்தியுள்ளது.
தற்போதுள்ள தேர்தல் கணக்குகளின்படி, திமுக கு (59 இடங்கள்) மற்றும் அதிமுக (47 இடங்கள்) ஆகிய இரு கட்சிகளும் தங்களின் பரஸ்பர பகையை மறந்து ஒன்றிணைந்தால் மட்டுமே 106 இடங்களை எட்ட முடியும். இருதரப்பு கூட்டணி கட்சிகள் அனைவரையும் சேர்த்தால் மட்டுமே இந்த எண்ணிக்கை 126-ஐத் தொடும். ஆனால், ராகுல் காந்தி தனது 5 எம்.எல்.ஏ-க்களுடன் விஜய்யை ஆதரிக்க முடிவு செய்துள்ளதால், திராவிட மகா கூட்டணியின் பலம் 121 ஆகக் குறைகிறது. பாஜகவின் ஒரு இடத்தை திமுக ஒருபோதும் தனது கூட்டணியில் சேர்க்காது என்பதால், அந்த எண்ணிக்கையும் 120 ஆகச் சுருங்கிவிடும்.
இந்தச் சூழலில், கொள்கை ரீதியாகவும் சமூக ரீதியாகவும் எப்போதும் முரண்படும் பாமக (4 இடங்கள்) மற்றும் விசிக (2 இடங்கள்) ஆகிய இரு கட்சிகளும் ஒரே கூட்டணியில் நீடிப்பது என்பது நடைமுறைச் சாத்தியமற்றது. எனவே பாமக வெளியேறும் பட்சத்தில், திராவிட மகா கூட்டணியின் பலம் 116 ஆகக் குறையும். தமிழகச் சட்டமன்றத்தின் மொத்த இடங்களான 234-ல் பெரும்பான்மையை நிரூபிக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், 116 இடங்களை மட்டுமே வைத்துள்ள திராவிடக் கட்சிகளால் எப்படி ஆட்சி அமைக்க முடியும் என்ற கேள்வி தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகவும், திமுகவின் ஆதரவுடனும் ஆட்சி அமைக்கலாம் என்ற திட்டம் தீட்டப்பட்டாலும், அதற்குத் தேவையான ‘மேஜிக் எண்’ கைக்கெட்டும் தூரத்தில் இல்லை. 2029 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிறுத்தி ராகுல் காந்தி எடுத்துள்ள இந்தத் தொலைநோக்கு முடிவு, தமிழகத்தில் ஒரு புதிய அரசியல் மாற்றத்திற்கான விதையாகப் பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் விலகிய நிலையில், மீதமுள்ள சிறிய கட்சிகளைத் தக்கவைத்துக் கொள்வதே திமுக மற்றும் அதிமுகவிற்குப் பெரும் சவாலாக இருக்கும். குறிப்பாக, இடதுசாரி கட்சிகளும் விஜய்யின் பக்கம் சாயக்கூடும் என்ற அச்சம் திராவிடத் தலைவர்கள் மத்தியில் நிலவுகிறது.
இறுதியாக, தமிழக அரசியல் ஒரு மிகப்பெரிய முட்டுக்கட்டையைச் சந்தித்துள்ளது. ஒருபுறம் 113 இடங்களுடன் (108 + 5) பெரும்பான்மைக்கு மிக அருகில் இருக்கும் விஜய், மறுபுறம் கூட்டணிக் குழப்பங்களால் 116-ல் தவிக்கும் திராவிடக் கட்சிகள். இந்த எண்கணிதப் போரில் ஆளுநரின் முடிவே இறுதியானது. மக்களின் தீர்ப்பைத் தங்களுக்குச் சாதகமாக மாற்ற முயலும் திராவிடக் கட்சிகளின் முயற்சி தோல்வியில் முடிந்தால், அது விஜய்யின் அரசியல் வாழ்விற்கு ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும். கூட்டணிக் கணக்குகள் இடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தமிழகம் ஒரு புதிய ஆட்சியைச் சந்திக்குமா அல்லது ஆளுநர் ஆட்சியின் கீழ் செல்லுமா என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
