தமிழக அரசியல் வரலாற்றில் சினிமா நட்சத்திரங்களின் தாக்கம் என்பது தாராளமாகவே இருந்து வந்துள்ளது. ஆனால், ஒரு நடிகராக இருந்து மக்கள் தலைவராக மாறுவது என்பது அனைவருக்கும் சாத்தியமான ஒன்றாக இருந்ததில்லை. 1996ஆம் ஆண்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஒரு பொற்கால வாய்ப்பு கிட்டியது; அப்போது மட்டும் அவர் கட்சி ஆரம்பித்து மூப்பனாருடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு இருந்தால் நிச்சயம் ஆட்சியை பிடித்திருப்பார். ஆனால் நேரடியாக அரசியலில் இறங்கும் துணிச்சலான முடிவை எடுக்காததால் அவர் அந்த வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பை தவறவிட்டார்.
ரஜினிகாந்தை தொடர்ந்து கேப்டன் விஜயகாந்த் அவர்கள் ‘தேமுதிக’ என்ற கட்சியை தொடங்கி தமிழக அரசியலில் ஒரு நம்பிக்கைக்குரிய மூன்றாவது சக்தியாக உருவெடுத்தார். 2006 மற்றும் 2011 தேர்தல்களில் அவர் காட்டிய எழுச்சி திராவிட கட்சிகளுக்கே சிம்ம சொப்பனமாக விளங்கியது. இருப்பினும், பிற்காலத்தில் அவர் எடுத்த சில தவறான கூட்டணி கணக்குகள், உடல்நலக்கோளாறு மற்றும் அரசியல் முடிவுகள் அவரது சரிவுக்குக் காரணமாக அமைந்தன. ஒரு கட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவராக உயர்ந்த போதிலும், அந்த வேகத்தைத் தக்கவைக்க முடியாமல் போனது அவரது அரசியல் பயணத்தின் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற கட்சியைத் தொடங்கி, ஒரு மாற்று அரசியலை முன்வைத்து முயற்சித்தார். நகர்ப்புற வாக்காளர்கள் மற்றும் இளைஞர்களிடையே அவருக்கு ஒரு தொடக்கக்கால வரவேற்பு இருந்தபோதிலும், அவரது கருத்துகளும் கொள்கைகளும் சாமானிய மக்களைச் சென்றடையவில்லை. “மக்கள் அவரை ஒரு கலைஞனாக நேசித்தார்களே தவிர, ஒரு முழுநேர அரசியல் தலைவராக நம்பத் தயாராக இல்லை” என்பது தேர்தல் முடிவுகளின் மூலம் வெளிப்பட்டது. இது அரசியலில் ஒரு நடிகருக்கான வெறும் ‘பயணம்’ மற்றும் ‘வெற்றி’ ஆகியவற்றுக்கு இடையேயான பெரும் இடைவெளியை உணர்த்தியது.
இத்தகைய ஒரு சூழலில்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் களத்தில் இறங்கினார். தனது திரைப்பயணத்தின் உச்சத்தில் இருந்தபோதே அரசியலில் அடியெடுத்து வைத்த விஜய், மற்ற நடிகர்களைப் போல வெறும் அறிக்கைகளோடு நின்றுவிடாமல், களப்பணிகளில் கவனம் செலுத்தினார். ஜாதி, மதப் பின்னணிகளைத் தாண்டி “தமிழன்” என்ற அடையாளத்தோடு அவர் முன்வைத்த முழக்கங்கள் அடித்தட்டு மக்களிடையே ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. திராவிடக் கட்சிகள் அவரை ஒரு பொருட்டாகவே கருதாத நிலையில், அவர் அமைதியாகத் தனது பலத்தை வளர்த்துக்கொண்டார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் அடைந்த வெற்றி என்பது ஒரு தற்செயலான நிகழ்வு அல்ல; அது மக்களின் நம்பிக்கையைப் பெற்றதற்கான அங்கீகாரம். 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருப்பதன் மூலம், திராவிடக் கட்சிகளின் கோட்டையை அவர் தகர்த்தெறிந்துள்ளார்.
விஜய்யின் இந்த வெற்றி எதிர்கால தலைமுறைக்கு ஒரு மிகப்பெரிய உத்வேகத்தை தந்துள்ளது. ரஜினி, விஜயகாந்த், கமல் போன்ற ஜாம்பவான்களால் எட்ட முடியாத அந்த அரசியல் இலக்கை, தனது சரியான திட்டமிடல் மற்றும் மக்கள் மீதான அன்பால் விஜய் எட்டி பிடித்துள்ளார். இதன் மூலம் தமிழகம் ஒரு புதிய அரசியல் அத்தியாயத்தை நோக்கித் திசை திரும்பியுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
