தமிழகச் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர் சந்திப்பில் அளித்துள்ள பதில் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் முடிவுகளில் எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காமல் ‘தொங்கு சட்டசபை’ அமையும் பட்சத்தில், ஆட்சி அதிகாரத்தில் தேமுதிக பங்கு கோருமா என்ற கேள்விக்கு, “மே 4-ஆம் தேதி வரை பொறுத்திருங்கள், முடிவுகள் வந்த பிறகு எங்கள் நிலப்பாட்டை தெரிவிப்போம்” என்று அவர் அதிரடியாக பதிலளித்துள்ளார். இந்த பதில், தேமுதிக தற்போதைய கூட்டணியில் இருந்தாலும், தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தனது பேரம் பேசும் சக்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதையே அப்பட்டமாக காட்டுகிறது.
தேமுதிகவின் இந்த நிலைப்பாடு, குறிப்பாக திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஒரு முன்கூட்டிய எச்சரிக்கையாகவோ அல்லது முதல் குடைச்சலாகவோ பார்க்கப்படுகிறது. ஒருவேளை திமுக கூட்டணி நூலிழையில் பெரும்பான்மையை தவறவிட்டால், தேமுதிக போன்ற சிறிய கட்சிகளின் ஆதரவு ஆட்சி அமைக்க தேவைப்படும். அந்த சூழலைப் பயன்படுத்திக்கொண்டு அமைச்சரவையில் இடம் அல்லது அதிகார பகிர்வு போன்ற கோரிக்கைகளை முன்வைக்கப் பிரேமலதா தயாராகி வருவதாகத் தெரிகிறது.
விஜயகாந்த் இருந்த காலத்தில் தேமுதிக ஒரு மாற்று சக்தியாக தனித்து நின்ற பிம்பம், தற்போது அதிகாரப் பங்கீட்டை நோக்கி நகர்வது அக்கட்சியின் அரசியல் உத்தியில் ஏற்பட்டுள்ள பெரிய மாற்றத்தை குறிக்கிறது.
“வேலியில் போன ஓணானை வேட்டியில் விட்ட கதை” என்பது போல திமுகவின் நிலைமை மாறிவிடுமோ என்ற அச்சம் உடன்பிறப்புகள் மத்தியில் எழுந்துள்ளது. கூட்டணி கட்சிகளைத் தங்களது வெற்றிக்கு துணையாக சேர்த்துக்கொண்ட திமுக, தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அந்த கட்சிகளே தங்களுக்கு முட்டுக்கட்டையாக மாறுவதை விரும்பாது. குறிப்பாத் தேமுதிக போன்ற கட்சிகள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்டால், அது திமுகவின் தனித்த ஆதிக்கத்திற்கு பெரும் சவாலாக அமையும்.
ஏற்கனவே எக்சிட் போல் கணிப்புகள் பலமுனை போட்டியை சுட்டிக்காட்டும் நிலையில், சிறிய கட்சிகளின் இத்தகைய ‘வெயிட் அண்ட் வாட்ச்’ தந்திரம் பெரிய கட்சிகளை பதற்றமடையச் செய்துள்ளது.
பிரேமலதாவின் இந்த மௌனமும், ‘மே 4-க்கு பிறகு சொல்கிறேன்’ என்ற பதிலும் ஒருவேளை அதிமுக அல்லது இதர மாற்று சக்திகளுடனும் கைகோர்ப்பதற்கான வாய்ப்புகளை திறந்து வைத்துள்ளதோ என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது. அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை என்பதற்கு இணங்க, ஆட்சி அமைக்க தேவையான இடங்கள் யாருக்கு குறைவாக இருக்கிறதோ, அங்கு தேமுதிக தனது நிபந்தனைகளை விதிக்க காத்திருக்கிறது. இது வெறும் அதிகார ஆசை மட்டுமல்லாமல், கடந்த சில தேர்தல்களில் இழந்த தனது செல்வாக்கை மீட்டெடுக்கவும், கட்சியை தக்கவைக்கவும் தேமுதிக எடுக்கும் ஒரு தற்காப்பு முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.
முடிவாக, மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போது, தமிழக அரசியல் களம் ஒரு மிகப்பெரிய சூதாட்டமாக மாற வாய்ப்புள்ளது. பிரேமலதா விஜயகாந்தின் கணக்கு பலிக்குமா அல்லது மக்கள் தெளிவான தீர்ப்பை வழங்கி இத்தகைய பேரம் பேசும் சூழலை தவிர்ப்பார்களா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.
ஒருவேளை தொங்கு சட்டசபை ஏற்பட்டு, தேமுதிக கிங் மேக்கராக உருவெடுத்தால், அது தமிழக அரசியலில் ஒரு புதிய அதிகார பகிர்வு கலாச்சாரத்தை தொடங்கி வைக்கும். எது எப்படியிருப்பினும், தேமுதிகவின் அடுத்தக்கட்ட நகர்வு என்பது திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு துருவங்களுக்கும் சவாலான ஒன்றாகவே இருக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
