தமிழக சட்டமன்ற தேர்தல் 2026-ன் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், பல்வேறு ஊடகங்கள் மற்றும் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள எக்சிட் போல் முடிவுகள் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்த நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் தேர்தலிலேயே சுமார் 95 இடங்களை கைப்பற்றும் என்று வெளியாகியுள்ள தகவல், தசாப்தங்களாக நீடித்து வந்த திராவிட கட்சிகளின் இருமுனை போட்டிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்துள்ளது.
ஆளுங்கட்சியான திமுக 90 இடங்களை பிடிக்கும் என்றும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக 43 இடங்களுக்கு தள்ளப்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி 2 இடங்களை எட்டும் நிலையில், எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத ஒரு தொங்கு சட்டசபை உருவாகும் சூழல் நிலவுகிறது.
நேற்று வெளியான சில கருத்துக்கணிப்புகள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள உண்மையான எக்சிட் போல் முடிவுகள் மக்களின் மனமாற்றத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. பண பலம் மற்றும் அதிகார பலத்தை தாண்டி, புதிய மாற்றத்தை நோக்கி இளைஞர்களும் பெண்களும் வாக்களித்திருப்பதே தவெக-வின் இந்த அபார வளர்ச்சிக்கு காரணம் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
234 தொகுதிகளைக் கொண்ட தமிழகத்தில் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், 95 இடங்களை பிடித்துள்ள விஜய், கிங் மேக்கராக உருவெடுத்துள்ளார். அதே சமயம், அதிமுக தனது வாக்கு வங்கியை தக்கவைக்கத் தவறியதும், திமுக எதிர்ப்பு ஓட்டுகள் பிரிந்ததும் தவெகவிற்கு சாதகமாக முடிந்துள்ளதாக தெரிகிறது.
இந்த கணிப்புகளின்படி பார்த்தால், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைவதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகமாக உள்ளன. தவெக தலைவர் விஜய் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கைகோர்த்தால் மட்டுமே பெரும்பான்மையை எட்டி நிலையான ஆட்சியை வழங்க முடியும். அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை என்ற தத்துவத்தின் அடிப்படையில், இந்த இரண்டு கட்சிகளும் ஒரு பொதுவான உடன்பாட்டிற்கு வருமா என்பதே தற்போதுள்ள மிகப்பெரிய கேள்வி. ஒருவேளை விஜய் மற்றும் ஈபிஎஸ் இணைய மறுத்தால், தமிழகம் இதுவரை கண்டிராத ஒரு அரசியல் நெருக்கடியை சந்திக்க நேரிடும்.
தனிப்பெரும்பான்மை இல்லாத சூழலில், ஒரு கட்சி மற்றொன்றுக்கு ஆதரவு அளிக்க முன்வராவிட்டால், தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது. தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பிறகு, எந்தவொரு கட்சியும் ஆட்சி அமைக்க உரிமை கோராத பட்சத்தில், அரசியலமைப்பு சட்டப்படி ஆளுநர் தலையிட்டு அடுத்தகட்ட முடிவை எடுப்பார். இது தற்காலிகமாக நிர்வாகத்தை சீர்குலைக்கக்கூடும் என்பதால், அரசியல் கட்சிகள் கூட்டாட்சி தத்துவத்தின் கீழ் ஒன்றிணைய வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இல்லையெனில், மக்கள் மீண்டும் ஒரு பொதுத்தேர்தலை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகும், இது அரசு கஜானாவிற்கும் பொதுமக்களுக்கும் தேவையற்ற சுமையாக அமையும்.
தமிழக அரசியல் வரலாற்றில் இது ஒரு முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. திராவிட இயக்கங்களின் ஆளுமைக்கு மத்தியில் ஒரு புதிய கட்சி இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவது இதுவே முதல்முறை. இந்த எக்சிட் போல் முடிவுகள் உண்மையான முடிவுகளாக மாறும் பட்சத்தில், தமிழகத்தின் அதிகார மையம் அறிவாலயத்திலிருந்தும், ராயப்பேட்டையிலிருந்தும் பனையூருக்கு இடம்பெயரும் என்பதில் ஐயமில்லை. எடப்பாடி பழனிசாமியின் அனுபவமும், விஜய்யின் புதிய பார்வையும் இணைந்தால் தமிழகத்திற்கு ஒரு மாற்று கிடைக்குமா அல்லது முரண்பாடுகளால் மறுதேர்தல் வருமா என்பது மே 4-ம் தேதி வெளியாகும் அதிகாரப்பூர்வ முடிவுகளில் தெரிந்துவிடும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
