தமிழக அரசியல் களத்தில் தார்மீக செயல்கள் எந்த அளவுக்கு சரிந்துள்ளன என்பதை தற்போது நிலவும் தேர்தல் கலாச்சாரம் அப்பட்டமாக தோல் உரித்து காட்டுகிறது. முப்பத்தி ஒரு ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட அதிமுகவும், தமிழர் பெருமை பேசும் திமுகவும் ஒரு ஓட்டுக்கு ஐயாயிரம், நாலாயிரம் என்று பணம் கொடுப்பதை ஒரு வாடிக்கையாகவே மாற்றியுள்ளன. சிலப்பதிகாரத்தை பற்றியும் சங்க தமிழ் பெருமைகளை பற்றியும் மேடைகளில் முழங்கிய தலைவர்களின் வாரிசுகள், இன்று அதே மக்களின் வாக்குகளை பணம் கொடுத்து விலைக்கு வாங்கத் துணிந்திருப்பது மிகுந்த வெட்கக்கேடானது. தமிழ் பண்பாட்டின் அடையாளமாக கருதப்படும் கீழடி அகழ்வாராய்ச்சி பற்றியும், திராவிட பாரம்பரியம் பற்றியும் பேசும் இவர்கள், அதே மக்களின் கைகளில் லஞ்ச பணத்தை கொடுப்பது எந்த வகையான அறம் என்ற கேள்வி எழுகிறது.
ஆட்சியில் இருப்பவர்கள் கொடுக்கும் இந்த பணம் யாருடையது? இது மக்களிடமிருந்து வரி பணமாகவும், மற்ற வழிகளிலும் வசூலிக்கப்பட்ட மக்கள் சொத்து அல்லவா? மக்களின் பணத்தையே அவர்களிடம் கொடுத்து வாக்குகளை வாங்குவது என்பது ஜனநாயகத்திற்கு இழைக்கப்படும் மிகப்பெரிய துரோகம். ஒரு புதிய அரசியல் சக்தியாக வரும் விஜய் ரசிகர்களையும், தற்கால இளைஞர்களையும் ‘தற்குறிகள்’ என்று விமர்சிக்கும் பாரம்பரிய கட்சிகள், ஓட்டுக்கு தாராளமாக பணம் கொடுத்து மக்களை பிச்சைக்காரர்களாகவும், ஊழலுக்கு பழகியவர்களாகவும் மாற்றி வைத்திருப்பதை என்னவென்று சொல்வது? இந்த பழக்கத்தை உருவாக்கி, அதை ஒரு பெருமையாக கருதும் நிலை சமூகத்திற்கு விடப்பட்ட சாபக்கேடாகும்.
பக்கத்து மாநிலமான கேரளாவை ஒப்பிட்டு பார்க்கும்போது நமது நிலை இன்னும் மோசமாக தெரிகிறது. கேரளாவில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தல்களில் எங்கும் பண விநியோகம் பற்றிய புகார்கள் எழவில்லை. அங்குள்ள வேட்பாளர்கள் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை ஒரு அவமானமாக கருதுகின்றனர். பாலக்காடு வேட்பாளர் ஒரு முதியவருக்கு கை கொடுத்தபோது, அதில் பணம் இருந்ததா என்று ஒரு நாள் முழுவதும் விவாதிக்கும் அளவுக்கு அந்த ஊர் மக்கள் மத்தியில் அரசியல் நேர்மை இருக்கிறது. ஓட்டுக்கு பணம் வாங்குவதை ஒரு கேவலமான செயலாக கேரளா நினைக்கும்போது, ‘ஆஹா ஓஹோ’ என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் தமிழக தலைவர்கள் மட்டும் பண விநியோகத்தை ஒரு தேர்தல் வியூகமாக மாற்றியிருப்பது வேதனைக்குரியது.
திமுகவின் நிறுவனர்களான அண்ணாவும், கருணாநிதியும் மேடைகளில் வளர்த்தெடுத்த அந்த பேச்சுத்திறனும், கொள்கை பிடிப்பும் இன்று எங்கே போனது? “மக்களே நம் எஜமானர்கள்” என்று சொல்லிவிட்டு, அந்த எஜமானர்களுக்கே விலை பேசுவது என்ன நியாயம்? முதல்வர் ஸ்டாலினும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் இந்த விமர்சனங்களை தங்களின் மனசாட்சிப்படி யோசித்துப் பார்க்க வேண்டும். ஒரு ஓட்டுக்காக ஆயிரக்கணக்கில் பணத்தை கொட்டி தேர்தலை சந்திப்பது என்பது, தங்களின் கொள்கைகளின் மீதும் செய்த சாதனைகளின் மீதும் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதையே காட்டுகிறது. இந்த இழிவான நிலையை மாற்றாமல் தமிழர் பெருமை பேசுவது வெற்று முழக்கமாகவே எஞ்சும்.
இறுதியாக, மாற்றம் என்பது அரசியல் கட்சிகளிடம் இருந்து மட்டும் வரப்போவதில்லை; அது மக்களிடம் இருந்தும் வரவேண்டும். பணம் வாங்கிக்கொண்டு ஓட்டுப் போடும் பழக்கத்தைத் தலைவர்கள் ஊட்டி வளர்த்தாலும், அதை மறுக்கும் துணிச்சல் மக்களுக்கு வர வேண்டும். “வெட்கக்கேடு” என்று சொல்லப்படும் இந்த செயல் நீடிக்கும் வரை, நேர்மையான அரசியல் இங்கே ஒரு கனவாகவே இருக்கும். அரசியலில் நேர்மை மறைந்து, பணபலம் மட்டுமே பிரதானமாக மாறும் போது, அது ஜனநாயகத்தின் வீழ்ச்சிக்கு தான் வழிவகுக்கும். பாரம்பரிய பெருமைகளை பேசுவதை விடுத்து, தேர்தல்களில் பணத்தின் ஆதிக்கத்தை ஒழிப்பதே உண்மையான தமிழர் பெருமையாக இருக்க முடியும். மக்கள் விழிப்படைய வேண்டிய தருணம் இது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
