உலகெங்கும் பரவி வாழும் தமிழர்கள் தங்கள் மண்ணையும் மொழியையும் எப்போதுமே விட்டுக்கொடுப்பதில்லை என்பதற்கு சான்றாக, தேர்தல் காலங்களில் அவர்கள் காட்டும் ஆர்வம் வியக்க வைக்கிறது. சமீபத்தில் ஸ்காட்லாந்தில் வசிக்கும் விஜய் ரசிகையான ஒரு தமிழ் இளம்பெண் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாட்டில் இருக்கும் பலரும் இந்தியாவுக்கு வாக்களிக்க கிளம்புவதாக வீடியோக்கள் பதிவிடுவதை பார்த்த அவரது நண்பர்களும் பின்தொடர்பவர்களும் “நீங்கள் எப்போது ஓட்டு போட தமிழ்நாட்டுக்கு வரப்போகிறீர்கள்?” என்று தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வந்தனர். இது அந்த பெண்ணிற்குத் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றியே தீர வேண்டும் என்கிற உத்வேகத்தை அளித்துள்ளது.
வெளிநாட்டிலிருந்து இந்தியா வருவதென்பது சாதாரணமான விஷயம் அல்ல; குறிப்பாக ஒரு வாக்கிற்காக இவ்வளவு தூரம் பயணம் செய்வது பெரும் பொருளாதார செலவையும் நேரத்தையும் உள்ளடக்கியது. ஸ்காட்லாந்திலிருந்து இந்தியா வர டிக்கெட் விலையை சோதித்து பார்த்தபோது அது சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் என காட்டியுள்ளது. ஒரு நடுத்தர வர்க்க பெண்ணாக இவ்வளவு பெரிய தொகையை ஒரு சில நாட்களுக்காக செலவு செய்ய வேண்டுமா என்று அவர் ஒரு நிமிடம் தயங்கியுள்ளார். எத்தனையோ பேர் இங்கே இருந்துகொண்டே ஓட்டு போட தவறும் நிலையில், ஒரு லட்சத்திற்கும் மேல் செலவு செய்து செல்வது அவசியமா என்கிற எண்ணம் இயல்பாகவே எவருக்கும் எழக்கூடியதுதான்.
ஆனால், அந்த தயக்கத்தை உடைத்தெறிந்தது தவெக தலைவர் விஜய்யின் ஒரே ஒரு குரல். சமூக வலைதளங்களில் உலாவந்த விஜய்யின் வீடியோவில், “உங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற தாய்நாட்டிற்கு வாருங்கள்” என்று உருக்கமாக பேசியுள்ளார். அந்த தலைவரின் குரலில் இருந்த நேர்மையும், மாற்றத்திற்கான அழைப்பும் அந்த பெண்ணின் மனதை ஆழமாக தைத்துள்ளது. “டிக்கெட் விலை ஒன்றரை லட்சமோ அல்லது அதற்கும் மேலோ, நாட்டின் எதிர்காலத்தை விட இது பெரிதல்ல” என்கிற தெளிவு அவருக்கு அந்த வீடியோவை பார்த்த மாத்திரத்திலேயே கிடைத்துவிட்டது. ஒரு தலைவன் என்பவன் சொல்லால் மட்டுமல்ல, செயலால் மக்களை எப்படி ஈர்க்கிறான் என்பதற்கு இதுவே சாட்சி.
இதன் விளைவாக, அடுத்த சில மணி நேரங்களிலேயே டிக்கெட்டை முன்பதிவு செய்துவிட்டு, தற்போது அந்தப் பெண் விமான நிலையத்தில் இருந்தபடியே வீடியோ வெளியிட்டுள்ளார். “எங்க இருக்கேன்னு தெரியுதா? ஏர்போர்ட்ல!” என்று அவர் உற்சாகமாக பேசும் அந்த குரலில், தனது மண்ணிற்காக ஏதோ ஒரு மாற்றத்தை செய்யப் போகிறோம் என்கிற பெருமிதம் தெரிகிறது. சமூக வலைதளங்கள் வெறும் கேளிக்கைக்காக மட்டுமல்லாமல், ஒரு தேசத்தின் அரசியலிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் கருவியாக எப்படி உருவெடுக்கிறது என்பதை இந்ச் சம்பவம் உணர்த்துகிறது. இவரை போன்ற ஆயிரக்கணக்கான தமிழர்கள் இன்று உலகம் முழுவதிலுமிருந்து தங்கள் சொந்த ஊரை நோக்கி பயணிக்க தொடங்கியுள்ளனர்.
இந்த வைரல் வீடியோ காட்டும் உண்மை என்னவென்றால், பணத்தை விட பாசம் மற்றும் கொள்கைக்கே தமிழர்கள் முன்னுரிமை அளிக்கிறார்கள் என்பதுதான். ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து இந்தியா வருவது என்பது வெறும் பயணம் மட்டுமல்ல; அது ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தின் மீதான நம்பிக்கை. “அரசியல் எனக்கு தெரியாது” என்று ஒதுங்கி நிற்காமல், தூர தேசத்தில் இருந்தாலும் தன் மாநிலத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்க ஒரு சாமானிய பெண் காட்டும் இந்த ஆர்வம், உள்ளூரில் இருக்கும் ஒவ்வொரு வாக்காளனுக்கும் ஒரு பாடமாகும். விஜய்யின் அன்பு அழைப்பிற்கு இணங்க அவர் மேற்கொண்ட இந்த பயணம், நிச்சயம் ஒரு பெரிய மாற்றத்திற்கான தொடக்கமாகவே பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
