அரபிக்கடலில் அமெரிக்க கடற்படையினருக்கும் ஈரானிய சரக்கு கப்பலுக்கும் இடையே நடந்த அதிரடி மோதல் தொடர்பான புதிய வீடியோ காட்சிகள் வெளியாகி சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
அமெரிக்காவின் ‘சென்ட்காம்’ வெளியிட்டுள்ள இந்த வீடியோவில், ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்தை நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு கப்பலை அமெரிக்காவின் ‘யுஎஸ்எஸ் ஸ்ப்ரூயன்ஸ்’ போர்க்கப்பல் வழிமறிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அமெரிக்கா விதித்துள்ள கடல்சார் முற்றுகையை மீறி செல்ல முயன்ற அந்த கப்பலுக்கு, அமெரிக்க படைகள் மிகத்தெளிவான எச்சரிக்கைகளை வழங்கியதையே இந்த வீடியோ ஆதாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.
சுமார் ஆறு மணி நேரம் நீடித்த இந்த பதற்றமான சூழலில், அமெரிக்க படைகள் பலமுறை அந்த கப்பலை நிறுத்துமாறு உத்தரவிட்டன. ஆனால், ஈரானிய கப்பல் அந்த எச்சரிக்கைகளை தொடர்ந்து புறக்கணித்துவிட்டு முற்றுகையை தாண்டி செல்ல முயன்றது. நிலைமை கைமீறி போவதைக் கண்ட யுஎஸ்எஸ் ஸ்ப்ரூயன்ஸ் போர்க்கப்பலின் அதிகாரிகள், இறுதி கட்டமாக ஒரு எச்சரிக்கையை விடுத்தனர். “மோட்டார் வெசல் தூஸ்கா, உங்கள் எஞ்சின் அறையை உடனடியாக காலி செய்யுங்கள். உங்கள் கப்பலை முடக்குவதற்கான தாக்குதலை நடத்த நாங்கள் தயாராக உள்ளோம்” என்ற அதிகாரியின் குரல் அந்த வீடியோவில் தெளிவாக பதிவாகியுள்ளது.
எச்சரிக்கை விடுக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே, அமெரிக்காவின் வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்பு கப்பலான யுஎஸ்எஸ் ஸ்ப்ரூயன்ஸ், தனது துப்பாக்கியால் துல்லியமான தாக்குதலை நடத்தியது. இந்த குண்டுகள் நேரடியாகத் தூஸ்கா கப்பலின் எஞ்சின் அறையை துளைத்து சென்றன. இதனால் கப்பலின் எஞ்சின் செயலிழந்து, நடுக்கடலிலேயே கப்பல் நின்றது. உயிர்ப்பலிகளை தவிர்க்கும் பொருட்டே எஞ்சின் அறையை காலி செய்ய சொல்லிவிட்டு, கப்பலை முடக்கும் நோக்கில் மட்டும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
கப்பல் முடக்கப்பட்டதை தொடர்ந்து, அமெரிக்க மரைன் வீரர்கள் அதிரடியாக அந்த கப்பலுக்குள் புகுந்து அதை கைப்பற்றினர். பலமுறை எச்சரித்தும் முற்றுகையை தகர்க்க முயன்றதாலேயே இந்தத் தீவிரமான நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் மத்திய கிழக்குப் பகுதியில் ஏற்கனவே நிலவி வரும் போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. சர்வதேச கடல் வழி போக்குவரத்து விதிகளை ஈரான் மீறுவதை தங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது என்பதை அமெரிக்கா இந்த செயல் மூலம் நிரூபித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் நாட்டுப் பிரதிநிதிகள் இன்று பாகிஸ்தானில் முக்கியமான அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ள நிலையில், இந்த தாக்குதல் நடவடிக்கை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்த வெற்றிகரமான ராணுவ நடவடிக்கையைத் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பாராட்டியுள்ளார். பேச்சுவார்த்தைக்கு முன்னதாக ஈரானுக்கு ஒரு பலமான செய்தியை சொல்ல அமெரிக்கா இந்த தாக்குதலைப் பயன்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இந்த அதிரடி நடவடிக்கை ஈரானின் அடுத்தகட்ட நகர்வுகளை பெரிதும் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
