மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்கனவே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரான் மீது கடுமையான எச்சரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார். ஹார்முஸ் நீரிணை பகுதியில் பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் நாட்டு கப்பல்களை நோக்கி ஈரான் கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ள ட்ரம்ப், இது ஏப்ரல் 8-ம் தேதி அறிவிக்கப்பட்ட இருவார கால போர்நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாக மீறும் செயல் என்று குறிப்பிட்டுள்ளார். ஈரானின் இந்த ஆக்ரோஷமான நடவடிக்கை சர்வதேச கடல்சார் பாதுகாப்பிற்கு விடப்பட்ட சவாலாகவே பார்க்கப்படுகிறது.
தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள ட்ரம்ப், ஈரானுடனான அமைதி பேச்சுவார்த்தையில் இனி மென்மையான போக்கை கையாளப்போவதில்லை என்பதை Mr. Nice Guy கிடையாது!” என்ற வாசகம் மூலம் அதிரடியாக தெரிவித்துள்ளார். அமெரிக்கா வழங்கியுள்ள நியாயமான அமைதி ஒப்பந்தத்தை ஈரான் ஏற்க தவறினால், அந்த நாட்டின் ஒவ்வொரு மின் உற்பத்தி நிலையத்தையும், ஒவ்வொரு பாலத்தையும் அமெரிக்க ராணுவம் தகர்க்கும் என்று அவர் பகிரங்கமாக எச்சரித்துள்ளார். இது ஈரானின் உள்கட்டமைப்பை முழுமையாக முடக்கும் ஒரு திட்டவட்டமான மிரட்டலாக அமைந்துள்ளது.
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்கா ஈரானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கைகளை தொடங்கியதிலிருந்து மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. தற்போதைய சூழலில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்கப் பிரதிநிதிகள் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்த முக்கியமான கட்டத்தில் ஈரான் போர்நிறுத்தத்தை மீறியிருப்பது பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகளை சிக்கலாக்கியுள்ளது. கடந்த 47 ஆண்டுகளாக மற்ற அமெரிக்க அதிபர்கள் செய்யத் தவறியதை, ஈரானின் ‘கொலை இயந்திரத்தை’ அழிப்பதன் மூலம் தான் செய்து முடிக்க போவதாக ட்ரம்ப் ஆணித்தரமாக கூறியுள்ளார்.
ஹார்முஸ் நீரிணை என்பது உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் மிக முக்கியமான ஒரு பாதையாகும். அங்கு நடைபெறும் இத்தகைய தாக்குதல்கள் உலக பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். ஏற்கனவே ஹார்முஸ் நீரிணை பதற்றம் காரணமாக இந்திய கப்பல்கள் பின்வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டதை நாம் அறிவோம். இப்போது அமெரிக்காவின் நேரடி மிரட்டல் ஈரானை சுற்றி வளைத்துள்ள நிலையில், ஈரான் தனது அடுத்தகட்ட நடவடிக்கையை எப்படி மாற்றிக்கொள்ளப் போகிறது என்பதை உலகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது.
அமைதி ஒப்பந்தத்தை ஏற்பதா அல்லது அமெரிக்காவின் மிகப்பெரிய ராணுவ தாக்குதலை எதிர்கொள்வதா என்ற இக்கட்டான நிலைக்கு ஈரான் தள்ளப்பட்டுள்ளது. ட்ரம்ப் விடுத்துள்ள இந்த எச்சரிக்கை வெறும் வார்த்தைகளாக மட்டும் நில்லாமல், ஒரு முழு அளவிலான போராக மாறுமோ என்ற அச்சம் சர்வதேச சமூகத்தில் எழுந்துள்ளது. ஈரானின் உள்கட்டமைப்பை இலக்கு வைப்பதன் மூலம் அந்த நாட்டை பொருளாதார ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் நிலைகுலைய செய்ய அமெரிக்கா தயாராகி வருவதை ட்ரம்ப்பின் சமீபத்திய கருத்துக்கள் உறுதிப்படுத்துகின்றன.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
