பாகிஸ்தான் தற்போது எதிர்கொண்டு வரும் மிக மோசமான பொருளாதார நெருக்கடி, அந்த நாட்டை உலக அரங்கில் ஏலத்திற்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. ஒருபுறம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் குடும்பத்தினர் மற்றும் அவர்களது கிரிப்டோகரன்சி நிறுவனங்கள், மறுபுறம் இஸ்ரேல் உருவாவதற்கு முக்கிய காரணமாக இருந்ததாக கருதப்படும் ரோத்ஸ்சைல்ட் குடும்பத்தினர் என இரு பெரும் சக்திகளிடம் பாகிஸ்தான் தனது நாட்டின் இறையாண்மையையே அடகு வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், ரோத்ஸ்சைல்ட் குழுமத்தின் நிர்வாகிகளுடன் நடத்தியுள்ள ரகசிய பேச்சுவார்த்தைகள், அந்நாட்டின் சொத்துக்களை திரட்டி கடன்களை மறுசீரமைப்பதாக கூறினாலும், உண்மையில் இது பாகிஸ்தானின் முக்கிய கேந்திர சொத்துக்களை வெளிநாட்டினருக்கு தாரைவார்க்கும் ஒரு முயற்சியே ஆகும்.
ரோத்ஸ்சைல்ட் குடும்பத்தின் தலையீடு என்பது வெறும் நிதி மேலாண்மை மட்டுமல்ல, அது பாகிஸ்தானின் விமான நிலையங்கள், துறைமுகங்கள், வங்கிகள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை அடகு வைத்து பிணை எடுக்கும் ஒரு தந்திரமாகும். பாகிஸ்தான் தனது வெளிநாட்டு கடன்களை அடைக்க முடியாமல் திணறி வரும் நிலையில், யூரோ பாண்டுகளுக்கான தொகையை செலுத்த வேண்டிய நெருக்கடியில் இத்தகைய பன்னாட்டு நிதி நிறுவனங்களை நாடியுள்ளது. இது ஒரு வகையான நவீன காலனித்துவமாகும், இதில் பாகிஸ்தானின் பொருளாதார கொள்கைகள் அதன் சொந்த மக்களால் தீர்மானிக்கப்படாமல், சர்வதேச நிதி நிறுவனங்களால் தீர்மானிக்கப்படும். இத்தகைய சூழலில், பாகிஸ்தானின் ராணுவ அறக்கட்டளைகள் கூட இந்த வர்த்தக பேரம் பேசுதலில் இருந்து தப்ப முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.
இன்னொரு பக்கம், டொனால்ட் ட்ரம்பின் குடும்பத்தினருடன் தொடர்புடைய ‘வேர்ல்ட் லிபர்ட்டி பைனான்சியல்’ என்ற கிரிப்டோகரன்சி நிறுவனத்துடன் பாகிஸ்தான் கைகோர்த்துள்ளது. பாகிஸ்தான் தனது நாட்டில் கிரிப்டோகரன்சிகளை சட்டப்பூர்வமாக்கி, அமெரிக்க டாலருடன் இணைக்கப்பட்ட ‘USD1’ என்ற ஸ்டேபிள் காயினை தனது டிஜிட்டல் பணப்பரிமாற்ற அமைப்பில் இணைக்க திட்டமிட்டுள்ளது. இதன் விளைவாக, பாகிஸ்தான் வங்கிகளில் மக்கள் முதலீடு செய்யும் ஒவ்வொரு ரூபாயும் அமெரிக்காவிற்கு சென்று, அங்குள்ள கருவூல பத்திரங்களை வாங்க பயன்படுத்தப்படும். இது பாகிஸ்தான் பொருளாதாரத்தின் “டாலர் மயமாக்கலுக்கு” வழிவகுப்பதோடு, பாகிஸ்தானின் நிதி அமைப்பின் மீதான முழுக் கட்டுப்பாட்டையும் அமெரிக்க நிறுவனங்களின் கைகளில் ஒப்படைப்பதாக அமையும்.
பாகிஸ்தானின் ஆளும் வர்க்கமும் ராணுவ தளபதிகளும் தங்களது பதவியையும் அதிகாரத்தையும் தக்கவைத்துக்கொள்ள, நாட்டின் எதிர்காலத்தை அடகு வைக்க துணிந்துவிட்டனர். கிரிப்டோகரன்சி பரிமாற்றங்கள் மூலம் பாகிஸ்தானில் இருந்து பணத்தை எளிதாக அமெரிக்காவிற்கு மடைமாற்ற முடியும் என்பதால், ஊழல்வாதிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. 1980களில் ஆப்கன் போரின் போது சிஐஏ-வின் கைக்கூலியாக செயல்பட்டது, 2000களில் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அமெரிக்காவிற்கு உதவியது என பல வரலாற்று தவறுகளை செய்த பாகிஸ்தான், தற்போது 2026-க்குள் தனது நாட்டின் பண அமைப்பையே விற்றுவிட்டது. இதன் மூலம் பாகிஸ்தான் மக்கள் ஈட்டும் செல்வம் அனைத்தும் அமெரிக்காவின் கடன்களை அடைக்கவே மறைமுகமாக பயன்படுத்தப்படும்.
இந்த நிதி பிடியில் இருந்து தப்பிக்க, பாகிஸ்தான் தனது நீண்டகால கொள்கையான இஸ்ரேல் எதிர்ப்பை கைவிட வேண்டியிருக்கும். இதுவரை பாகிஸ்தான் பாஸ்போர்ட்டுகளில் கூட “இஸ்ரேல் தவிர அனைத்து நாடுகளுக்கும் செல்லலாம்” என்று குறிப்பிட்டு வந்த அந்த நாடு, இனி இஸ்ரேலை அங்கீகரிப்பதோடு மட்டுமல்லாமல், சர்வதேச நிதிச்சந்தையில் நிலைத்திருக்க அந்த நாட்டுடன் சுமுகமான உறவை பேண வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகும். 30 வெள்ளிக்காசுகளுக்காக தனது நாட்டை விற்ற வரலாற்று துரோகங்களைப் போல, இன்று பாகிஸ்தானின் ஆட்சியாளர்கள் சில பில்லியன் டாலர்களுக்காக முழு தேசத்தையும் அடகு வைத்துள்ளனர். இறுதியில், பாகிஸ்தான் ஒரு சுதந்திர நாடாக இல்லாமல், சர்வதேச நிதி வல்லரசுகளின் ஒரு கிளை அலுவலகமாக மட்டுமே செயல்படும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
