நடிகர் விஜய் அரசியல் களத்தில் வந்ததன் பின்னர் தமிழக அரசியல் வட்டாரம் அதிகமாக மாறி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தல் சமயத்தில் போட்டி என்றால் அது திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளுக்கு இடையே தான் இருக்கும். இந்த இரண்டு கட்சிகளுக்கு பின்னர் பல புதிய கட்சிகள் தமிழ்நாட்டில் உதயமானாலும் அவர்கள் இரண்டு பேருக்கு மத்தியிலான போட்டியை குறைப்பதற்கான எந்த ஒரு தாக்கத்தையும் அவை ஏற்படுத்தவில்லை.
நடிகர் விஜயகாந்தின் தேமுதிக, சீமானின் நாம் தமிழர் கட்சி என பல புதிய கட்சிகள் உதயமான போதும் அதிமுக, திமுகவை மிகப்பெரிய அளவில் அவர்களால் எதிர்க்க முடியவில்லை. ஆனால் அதே வேளையில் தமிழக வெற்றிக் கழகம் என கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக விஜய் ஒரு கட்சியை ஆரம்பித்திருந்தார். நடிகர் விஜய் ஒரு திரைப்படத்தில் தோன்றும் போது எப்படி கோடிக்கணக்கான ரசிகர்கள் அந்த படத்தை பிளாக்பஸ்டர் வெற்றியாக மாற்றுவார்களோ அதே போல அவரது அரசியல் பயணத்தையும் மிகப்பெரிய அளவில் கொண்டாட்டமாக மாற்றி உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
ரசிகர்கள் டூ தொண்டர்கள்..
விஜய்யின் சினிமாவுக்கு ரசிகர்களாக இருந்தவர்கள் அவரது அரசியல் வருகைக்கு பின்னர் தொண்டர்களாகவும் மாறி விட்டார்கள். எந்த ஊர் சென்றாலும் தங்களுக்கு எப்படிப்பட்ட வேலை இருந்தாலும் அதையெல்லாம் மாற்றி வைத்துவிட்டு விஜய்யை பார்ப்பது மட்டுமே இலக்காக கொண்டு தொண்டர்கள் இயங்கி வருகின்றனர். நிச்சயம் விஜய்யை பார்க்க வந்த மொத்த கூட்டமும் அவருக்கு வாக்களிப்பார்களா என்று கேட்டால் சந்தேகம்தான்.
ஆனால் அதே வேளையில் விஜய் சந்திக்க போகும் முதல் தேர்தலிலேயே வாக்கு சதவீதத்தில் நிச்சயம் மிகப்பெரிய ஒரு மாற்றத்தை உருவாக்குவார் என்பது பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. அதே நேரத்தில் விஜய் செய்யும் சில முக்கியமான விஷயங்கள் மீது விமர்சனங்களும் தொடர்ந்து இருந்துதான் வருகின்றது. அதில் முக்கியமான ஒன்று, திமுக மற்றும் முதல்வர் ஸ்டாலின் அவர்களை மட்டுமே தொடர்ந்து விமர்சனம் செய்வது.
விஜய் செஞ்ச பெரிய மாற்றம்..
பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளை அதிகம் விமர்சிக்காமல் ஸ்டாலினை மட்டுமே தொடர்ந்து அனைத்து பிரச்சார நேரத்திலும் விமர்சிக்கும் விஜய் மற்றவர்களை ஏன் கேள்வி கேட்பதில்லை என்பதும் பரவலான கேள்வியாக இருந்து வருகிறது. இதற்கு மத்தியில் தான் கடந்த கன்னியாகுமரி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளும் போது முற்றிலும் புதிய ஒரு பிரச்சாரத் டெக்னிக்கை விஜய் பயன்படுத்தி இருந்தார்.
எப்போதும் ஸ்டாலினையும் தமிழக அரசையும் சாடி அதன் மூலம் கைத்தட்டுகளை பெறும் விஜய் இந்த இரண்டு பிரச்சாரங்களிலும் அரசையோ, அல்லது வேற கட்சியையோ விமர்சிக்காமல் தவெக வந்தால் என்ன செய்யும், தேர்தல் வாக்குறுதி என்ன என்பது பற்றி அரசியல் முதிர்ந்த நபர் போல பேசியிருந்தார். தொடர்ந்து மற்ற கட்சிகளை பற்றி குறை சொல்லாமல், தேர்தலுக்கு 10 நாட்கள் மட்டுமே இருக்கும் வேளையில் தமிழக வெற்றி கழகம் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்பதில் விஜய் தெளிவாக தனது கருத்துக்களை முன் வைத்தால் நிச்சயம் எதிர்பார்த்ததை விட பெரிய மாற்றத்தை அவரால் தேர்தல் முடிவுகளில் உருவாக்க முடியும் என்றே தெரிகிறது.
நான் கடந்த 7 ஆண்டுகளாக பல வலைத்தளங்களில் கிரிக்கெட், சினிமா தொடர்பான செய்திகளை சுவாரஸ்யம் குறையாமல் வாசகர்கள் விரும்பும் வகையில் எழுதி வருகிறேன். இணையத்தில் இன்று ஏராளமான செய்திகள் சரியான விவரங்கள் இல்லாமல் வெளியாகி வரும் சூழலில் முடிந்த அளவுக்கு சிறந்த செய்திகளை கொடுப்பதற்கு நான் முன்னுரிமை கொடுத்து எழுதி வருகிறேன்.

