பிறக்கப் போகும் தமிழ் புத்தாண்டு ‘பராபவ’ என்ற பெயரில் வருகிறது. 14.4.2026ம் நாள் வரும் செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு வருகிறது. சூரியனின் முதல் சுழற்சியாக மேஷத்தில் இருந்து அவர் ஆரம்பிக்கிறது சித்திரை மாதத்தில் தொடங்குகிறது.
அதனால் இதன் துவக்க நாளாகவும், கனி காணும் நாளாகவும் இந்த சித்திரை மாத பிறப்பு அதாவது தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நாளைப் பொருத்தவரை அன்று காலையில் நாம் செய்யும் வழிபாடு வெகு சிறப்பானது. ஆனால் எளிமையான வழிபாடுதான். முதல் நாள் இரவே நம் வீட்டை எல்லாம் சுத்தம் பண்ணிட்டு நல்ல கனிகளை வாங்கி வைக்க வேண்டும். மா, பலா, வாழை உள்பட பல வகையான பழங்களையும் வாங்கி வைத்துக் கொள்ளலாம்.
பழங்கள் உடன் வெற்றிலைப்பாக்கு, எலுமிச்சை, மஞ்சள், நாணயங்கள், ரூபாய் நோட்டுக்கள், வெள்ளி, தங்கம் இதுல எது வசதியோ அதை வைத்துக் கொள்ளலாம். கொன்றை மலர் கிடைக்கவில்லை என்றால் மஞ்சள் நிற மலர்களை வைத்துக் கொள்ளலாம். சிலர் பருப்பு, சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றையும் வைப்பார்கள்.
அவரவர் வழக்கப்படி வைத்துக் கொள்ளுங்கள். முக்கனி, எலுமிச்சை, வெத்தலைப்பாக்கு, வாழைப்பழம், நாணயங்கள், கண்ணாடி வைப்பது அவசியம். இரவு படுக்கும்போது இறைவா, இந்த ஆண்டு எங்களுக்கு நல்லா போச்சோ இல்லையோ ஏதோ பிரச்சனைகளை சந்திச்சி எப்படியோ நகர்த்திட்டோம்.
பிறக்கப் போகின்ற ஆண்டாவது எங்களுக்கு மகிழ்ச்சிகரமான ஆண்டாக இன்பமான ஆண்டாக அமையணும்னு பிரார்த்தனை பண்ணிட்டுப் படுங்க. காலையில் எழுந்ததும் தாம்பாளத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த மங்கலப்பொருள்களைத் தான் பார்க்கணும்.
படுக்கை அருகிலேயே இந்தப் பொருள்களை வைத்துக் கொள்வது நல்லது. அதுல உள்ள கண்ணாடியில முகத்தைப் பார்த்துக்கிட்டு இந்த வருஷம் நல்ல வருஷமாக அமையணும்னு அதுல உள்ள பொருள்களை எல்லாம் தொட்டுக் கண்ணுல ஒத்திக்கிட்டு கும்பிடணும். அப்புறம் காலைக்கடன்களை எல்லாம் முடித்து விட்டு குளித்துவிட்டு அந்தப் பொருள்களை எல்லாம் பூஜை அறையில் வையுங்கள்.
பாயசம், சர்க்கரைப் பொங்கல், கடைப் பலகாரங்கள், மதிய படையல் என ஏதாவது ஒன்றை வைத்து வழிபடுங்கள். அல்லது இந்தப் பழங்களை எல்லாம் வைத்து நைவேத்தியம் பண்ணி வழிபடுங்கள். நெய் விளக்கு ஏற்றி குல தெய்வம், இஷ்ட தெய்வத்தை மறக்காம வழிபடுங்கள்.
மதிய இலை போட்டு படையல் வைத்தாலும் காலையில் இதைப் படைத்து விட்டு மதியம் படையல் போட்டு வழிபடலாம். இந்த வழிபாட்டுக்குரிய நல்ல நேரம் இதுதான். 14.4.2026 அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், 7.20 முதல் 8.45 மணி வரையும், 10.40 முதல் 11.50 மணி வரையும் உகந்த நேரம். மதிய இலை போட்டு படையல் வைக்க 1.35 மணி முதல் 2 மணி வரை நல்ல நேரம். மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



