தமிழக அரசியலில் பல ஆண்டுகளாக நிலவி வந்த திராவிட கட்சிகளின் இருமுனை போட்டி, தற்போது ஒரு புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகத்தின் வருகை, ஆளுங்கட்சியான திமுகவின் வாக்கு வங்கியில் ஒரு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி வருவதாக பல்வேறு அரசியல் நோக்கர்களும், சமீபத்திய கருத்துக்கணிப்புகளும் சுட்டிக்காட்டுகின்றன.
திமுகவின் கோட்டையில் விஜய் ஒரு பெரிய ஓட்டையைப் போடுகிறார்” என்ற பேச்சு அரசியல் வட்டாரங்களில் பலமாக எழுந்துள்ளது. விஜய்யின் வருகை குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த வாக்குகள் பெரும்பாலும் திமுகவின் பாரம்பரிய ஆதரவு தளத்திலிருந்தே பிரியும் என்று கணிக்கப்படுகிறது.
இருப்பினும், இந்த அரசியல் மாற்றத்தின் சுவாரஸ்யமான அம்சம் என்னவென்றால், திமுகவின் வாக்குகள் சிதறுவதால் நேரடியாகப் பலன் அடையப்போவது அதிமுக மற்றும் அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் என்பதுதான். ஆளுங்கட்சிக்கு எதிரான அதிருப்தி வாக்குகளும், திமுகவிடமிருந்து பிரியும் வாக்குகளும் விஜய்யால் சிதறடிக்கப்படும்போது, ஒரு பலமான எதிர்க்கட்சியாக நிலைத்து நிற்கும் அதிமுகவிற்கு அது சாதகமாக முடிகிறது.
அண்மையில் வெளியான லேட்டஸ்ட் கருத்துக்கணிப்புகளின்படி, அதிமுகவின் வாக்கு சதவீதம் சீராக உயர்ந்து வருவதும், பல தொகுதிகளில் அவர்கள் முன்னிலை பெறுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு கிடைத்துள்ள ஒரு முக்கிய அங்கீகாரமாக கருதப்படுகிறது.
இந்த கருத்துக்கணிப்புகளின் ஒட்டுமொத்த பார்வையில், தமிழக அரசியல் களம் ஒரு தலைகீழ் மாற்றத்தை சந்திக்க போகிறது என்பது தெளிவாகிறது. வரும் மே 4 அன்று தேர்தல் முடிவுகள் வெளிவரும்போது, அதிமுக ஆளுங்கட்சியாக உருவெடுக்கவும், தற்போதைய ஆளுங்கட்சியான திமுக எதிர்க்கட்சி நிலைக்கு தள்ளப்படவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
அதே சமயம், முதல் தேர்தலிலேயே கணிசமான வாக்குகளை பெற்று, தமிழகத்தின் மூன்றாவது பெரிய சக்தியாக தமிழக வெற்றி கழகம் உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் தவெக பிரிக்கும் வாக்குகள் திமுகவின் வெற்றியை தடுத்து, அதிமுகவின் வெற்றி பாதையை எளிதாக்கும் ஒரு ‘கேம் சேஞ்சராக’ மாறப்போகிறது என்பதே தற்போதைய கள நிலவரம்.
இதுவரை ஆதிக்கம் செலுத்தி வந்த ஒரு பெரும் சக்தியை வீழ்த்தி, மற்றொரு பழைய சக்தி மீண்டும் அரியணை ஏறுவதற்கு ஒரு புதிய சக்தி கருவியாக மாறுவது அரசியல் விந்தைதான். எது எப்படியிருப்பினும், இந்த மும்முனை போட்டி தமிழக அரசியலில் ஒரு புதிய ஜனநாயக பாய்ச்சலை ஏற்படுத்தியுள்ளது என்பதில் மாற்று கருத்தில்லை.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
