மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான மோதல் தற்போது ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. பிப்ரவரி 28 அன்று தொடங்கிய அமெரிக்க-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர், தற்போது ஒரு தற்காலிக போர்நிறுத்தத்தை எட்டியுள்ள போதிலும், ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள எச்சரிக்கை உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஈரான் தனது கட்டுப்பாட்டில் உள்ள இந்த முக்கியமான கடல்வழி பாதையில் செல்லும் எண்ணெய் டாங்கர்களுக்கு கட்டணம் வசூலிப்பதாக வரும் தகவல்கள், ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறும் செயல் என்று டிரம்ப் கடுமையாக சாடியுள்ளார்.
இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், “எண்ணெய் டாங்கர்களை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அனுமதிப்பதில் ஈரான் மிகவும் மோசமான, நேர்மையற்ற வேலையை செய்து வருகிறது. இது நாம் செய்து கொண்ட ஒப்பந்தம் அல்ல. அந்த பாதையில் செல்லும் கப்பல்களுக்கு ஈரான் கட்டணம் வசூலிப்பதாக தகவல்கள் வருகின்றன; அவர்கள் அதை செய்யக் கூடாது, ஒருவேளை அப்படி செய்திருந்தால் அதை இப்போதே நிறுத்த வேண்டும்” என்று எச்சரித்துள்ளார். ஈரானின் ராணுவம் இன்னும் அந்த நீர்வழியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதையும், அதன் மூலம் வருவாய் ஈட்ட முயற்சிப்பதையும் வெள்ளை மாளிகை வன்மையாக எதிர்த்து வருகிறது.
மறுபுறம், ஈரானின் புதிய உச்ச தலைவர் அயதுல்லா முஜ்தபா கமேனி வெளியிட்டுள்ள அறிக்கை, எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவது போல் அமைந்துள்ளது. தனது தந்தை மறைவுக்கு பிறகு பொறுப்பேற்று கொண்ட கமேனி, இதுவரை பொதுவெளியில் தோன்றாத நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை ஆக்கிரமிப்பு குற்றவாளிகள் என்று வர்ணித்துள்ளார். ஈரானின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு இழப்பீடு கோருவதோடு மட்டுமல்லாமல், உயிரிழந்த வீரர்களுக்கு “இரத்தப் பணம்” மற்றும் காயமடைந்தவர்களுக்கு இழப்பீட்டு தொகையை அமெரிக்காவும் இஸ்ரேலும் வழங்கியே தீர வேண்டும் என்று அவர் ஆக்ரோஷமாக தெரிவித்துள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் ஈரான் ஒரு புதிய கட்டத்தை எட்டும் என்றும், பேச்சுவார்த்தைகளில் செல்வாக்கு செலுத்த மக்கள் வீதிகளில் இறங்கி போராட வேண்டும் என்றும் கமேனி அழைப்பு விடுத்துள்ளார். உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கும் இந்த ஜலசந்தி தொடர்ந்து ஈரானின் கட்டுப்பாட்டில் இருப்பதும், அங்கு நடக்கும் கெடுபிடிகளும் உலக பொருளாதாரத்தை சிதைக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளன. போர்நிறுத்த ஒப்பந்தம் இன்னும் முழுமையாக அமலுக்கு வராத சூழலில், இரு நாடுகளின் தலைவர்களும் மாற்றி மாற்றி விடுத்து வரும் இந்த எச்சரிக்கைகள், மீண்டும் ஒரு முழு அளவிலான போருக்கு வழிவகுக்குமோ என்ற அச்சத்தை உலக நாடுகள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, டிரம்ப் தனது வழக்கமான பாணியில் ஈரானுக்கு நேரடி மிரட்டல் விடுத்துள்ளார். ஈரானின் இந்த போக்கு நீடித்தால், அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்பதை அவர் சொல்லாமல் சொல்லியிருக்கிறார். ஈரானின் புதிய தலைமை மற்றும் டிரம்பின் பிடிவாதமான நிலைப்பாடு ஆகியவற்றுக்கு இடையே, ஹார்முஸ் ஜலசந்தி என்பது ஒரு சர்வதேச பிரச்சனை என்பதை தாண்டி, ஒரு ஈகோ யுத்தமாக மாறி நிற்கிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
