திரையுலகைப் பொருத்தவரை நாம் எடுக்கின்ற எல்லா முடிவுகளையும் விமர்சிக்கணும். அப்படிப்பட்ட காலகட்டத்தில் நாம தான் நாம் எடுத்த முடிவை சீர்தூக்கிப் பார்த்து இது சரியான முடிவா, இல்லையா என்று ஒருமுறைக்கு இருமுறை யோசித்து அதைத் தொடர வேண்டும். வாழ்க்கை திரைப்படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடிக்க அம்பிகாவை நான் தேர்வு செய்த போது கூட அதற்கு பலத்த விமர்சனங்கள் எழுந்தன.
பல பேர் இது ஒரு விஷப்பரீட்சை என்று என்னிடம் நேரடியாகவே கூறினார்கள். அதை எல்லாம் தாண்டி அந்தப் படத்தில் நான் அம்பிகாவை நடிக்க வைத்தேன் என்றால் அதற்கு முக்கியமான காரணம் அந்தக் கதாபாத்திரத்தில் அம்பிகா நடித்தால் நிச்சயமாக அந்தப் படம் வெற்றி பெறும் என்று நான் நினைத்தது ஒன்று. இன்னொன்று ஏற்கனவே சிவாஜியோடு கதாநாயகியாக நடித்த நடிகைகளை அந்தப் படத்தில் நான் நடிக்க வைக்கக்கூடாது என்று நான் எடுத்திருந்த முடிவு.
அதன் காரணமாகத்தான் வாழ்க்கை திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்தப் படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக சிவாஜி – அம்பிகா என்ற புது காம்பினேஷன் அமைந்தது. பணமா, பாசமா படத்தில் ஜெமினிகணேசனும், சரோஜாதேவியும் ஜோடியாக நடிக்கப் போகிறார்கள் என்று இயக்குனர் திலகம் கே.எஸ்.கோபால கிருஷ்ணன் அறிவிப்பை வெளியிட்ட மறுகணத்தில் இருந்து அவர் ஆபீசில் போனைக் கீழே வைக்க முடியவில்லை.
அந்தளவுக்கு போன் கால். எல்லாம் அவரைப் பாராட்டிப் பேசினார்கள் என்று நினைக்கிறீர்களா? இல்லை. என்ன உனக்கு அறிவு கிறிவு இல்லையா? புத்தி மழுங்கிப் போச்சா? பத்மினியை வச்சி சித்தின்னு ஒரு படம் எடுத்தே. அது மிகப்பெரிய வெற்றிங்கறதால ஜெமினிகணேசன், சரோஜாதேவியை வச்சி அடுத்த படம் எடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டீயா? சரோஜாதேவியோட மார்க்கெட் போயி எவ்வளவோ நாள் ஆகிடுச்சுன்னு உனக்கு தெரியுமா?
அவங்க திருமணம் ஆகிப் போனதும் சுத்தமா மார்க்கெட் போயிடுச்சு. இப்போ அவங்களை கதாநாயகியா நடிக்க வச்சி என்னப் பண்ணப் போறேன்னு பலரும் தொடர்ந்து கேஎஸ்.கோபாலகிருஷ்ணனைக் கேட்டபடி இருந்தார்கள். நீ எடுக்க நினைச்சிருக்குற இந்தத் திரைப்படம் நிச்சயமாக மிகப்பெரிய தோல்வி அடையும். அதனால இப்பவே புத்திசாலித்தனமா நட்சத்திரங்களை எல்லாம் மாற்றி விட்டு படம் எடுன்னு கேஎஸ்.கோபாலகிருஷ்ணனுக்கு ஆலோசனை சொன்னவர்கள் பலர்.
அவங்க ஆலோசனை சொன்னதுல தப்பில்ல. என் மேல உள்ள அக்கறையில தான் அவங்க அப்படிப்பட்ட ஆலோசனையை சொன்னாங்க. ஆனால் எனக்கு என் கதையின் மீது நம்பிக்கை இருந்தது. அந்தக் கதையில அவங்க ரெண்டு பேரும் நடிச்சா நிச்சயமா அந்தக் கதை வெற்றி பெறும் என்று நம்பிக்கை இருந்தது.
அதனால தான் அந்த விமர்சனங்களை எல்லாம் நான் பொருட்படுத்தாம ஜெமினிகணேசனையும், சரோஜாதேவியையும் நடிப்பில் பணமா, பாசமா படம் எடுத்தேன். அந்தப் படம் எப்படிப்பட்ட வெற்றியைப் பெற்றது? எவ்வளவு நாள்கள் ஓடி வசூல் சாதனையை செய்தது என்பதை எல்லோரும் அறிவார்கள் என்று ஒரு பத்திரிகைப் பேட்டியில் பதிவு செய்துள்ளார் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.
மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பகிர்ந்துள்ளார்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.


