தமிழக அரசியல் கள 2026 சட்டமன்ற தேர்தலை ஒட்டி பல அதிரடி திருப்பங்களை சந்தித்து வருகிறது. குறிப்பா, திராவிட முன்னேற்ற கழக மற்றும் காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட இழுபறிகளும், அதற்கு இணையாக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மற்றும் காங்கிரஸ் மேலிடத்திற்கு இடையே நிலவுவதாக கூறப்படும் ரகசிய பேச்சுவார்த்தைகளும் அரசியல் வட்டாரத்தையே அதிர வைத்துள்ளன. காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் தவிர மற்ற இடங்களில் விஜய்க்கு ஆதரவு அளிக்க ராகுல் காந்தி மறைமுகமாக உத்தரவிட்டுள்ளதாக எழுந்துள்ள தகவல், திமுக தலைமையை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சமீபகாலமாக, ராகுல் காந்திக்கும் விஜய்க்கும் இடையே ஒரு சுமூகமான அரசியல் புரிதல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். விஜய்யின் ‘ஜன நாயகன்’ திரைப்பட பிரச்சனையின் போது ராகுல் காந்தி அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தது, விஜய்யின் தவெக பொதுச்செயலாள ஆதவ் அர்ஜுனா தொடர்ந்து ராகுல் காந்தியை புகழ்ந்து பேசி வருவது இதற்கு சான்றாக அமைகின்றன. இந்த நட்பின் ஒரு பகுதியாக, தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடாத தொகுதிகளில் விஜய்யின் தவெகவிற்கு சாதகமான ஒரு நிலைப்பாட்டை காங்கிரஸ் தொண்டர்கள் எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது திராவிட கட்சிகளின் வாக்கு வங்கியை பிரிக்கும் ஒரு மிகப்பெரிய உள்ளடி வேலையாக பார்க்கப்படுகிறது.
இதற்கு பதிலுக்கும் நன்றிக்கடனுக்காக, கேரளாவில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக தனது ரசிகர்களை வாக்களிக்க செய்ய விஜய் ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளதாக ஒரு தகவல பரவி வருகிறது. கேரளாவில் விஜய்க்கு இருக்கும் அபரிமிதமான செல்வாக்கு, அங்குள்ள காங்கிரஸ் கட்சியின் வெற்றி வாய்ப்பைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராகுல் காந்தியும் விஜய்யும் இப்போதும் கூட தொலைபேசி வாயிலாக பேசி வருவதாகவும், இருவருக்கும் இடையே ஒரு ‘மென்மையான கூட்டணி’ நிலவுவதாகவும் டெல்லி வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.
இந்த திடீர் மாற்றங்களால் எரிச்சலடைந்துள்ள திமுக தலைமை, காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகளில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தீவிரமாக வேலை செய்ய வேண்டாம் என மறைமுகமாக உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் கசிகின்றன. காங்கிரஸ் கட்சி தனது பலத்திற்கு மீறி அதிக இடங்களை கேட்டு பெற்றதோ, தவெக-வை ஒரு துருப்புச்சீட்டாக பயன்படுத்தி திமுகவை மிரட்டியதே இந்த அதிருப்திக்கு காரணமாக சொல்லப்படுகிறது. கூட்டணியில் இருந்தாலும், ஒருவரையொருவர் வீழ்த்தி கொள்ளும் இத்தகைய உள்ளடி வேலைகள் தமிழக அரசியலில் ஒரு புதுவிதமான போக்கை காட்டுகின்றன.
விஜய்யைப் பொறுத்தவரை, அவர் ஒரு “ஸ்பாய்லராக” மட்டுமே இருப்பார் என்ற கருத்துக்கணிப்புகளை முறியடித்து, ஒரு தீர்க்கமான சக்தியாக உருவெடுக்க ராகுல் காந்தியின் இந்த மறைமுக ஆதரவு உதவும் என அவர் நம்புகிறார். காங்கிரஸுக்கும் திமுகவின் பிடியிலிருந்து விடுபட்டு தமிழகத்தில் ஒரு புதிய அடித்தளத்தை அமைக்க இது ஒரு வாய்ப்பாக தெரிகிறது. மறுபுறம், திமுக தனது ஆட்சியை தக்க வைக்க எத்தகைய வியூகங்களை வகுக்கும் என்பது தேர்தல் நெருங்கும் போதுதான் தெரியும். திராவிட பாரம்பரியத்திற்கு புதிய சவாலாக இந்த தவெக – காங்கிரஸ் “நிழல் கூட்டணி” உருவெடுத்துள்ளது.
தமிழக அரசியலின் இந்த திரைக்கு பின்னாலுள்ள நகர்வுகள், வரவிருக்கும் ஏப்ரல் 23 தேர்தலின் முடிவை முற்றிலும் மாற்றியமைக்கும் வல்லமை கொண்டவை. கொள்கை ரீதியான கூட்டணி ஒருபுறம் இருந்தாலும், அதிகாரத்தை கைப்பற்ற தனிப்பட்ட தலைவர்கள் எடுக்கும் இத்தகைய ரகசிய முடிவுகள் வாக்காளர்கள் மத்தியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தலாம். எது எப்படியிருப்பினும், 2026 தேர்தல் களம் என்பது வெறும் வாக்குப்பதிவு மட்டுமல்ல, அது பலமான அரசியல் சதுரங்க ஆட்டத்தின் இறுதிக்கட்ட நகர்வாகவே இருக்கும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
