தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு விவகாரம் திமுக கூட்டணியில் மிகப்பெரிய எரிமலையாக வெடித்துள்ளது. குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளாக தேர்தல் களத்தில் தொடர் சரிவை சந்தித்து, வாக்கு சதவீதம் 0.43% என சரிந்துள்ள தேமுதிகவிற்கு 10 சட்டமன்ற தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா இடமும் வழங்கப்பட உள்ளதாக வெளியாகி வரும் தகவல்கள் மற்ற கூட்டணி கட்சிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கழுதை தேய்ந்து கட்டெறும்பான ஒரு கட்சிக்கு இவ்வளவு முக்கியத்துவம் அளிப்பதா என்று 15 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவுடன் விசுவாசமாக பயணிக்கும் பழைய கூட்டணி கட்சிகள் பகிரங்கமாக கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளன.
மதிமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகள் இந்த தொகுதி பங்கீட்டில் தங்களுக்கு “அல்வா” கொடுக்கப்படுவதாக உணர்கின்றன. வைகோ தலைமையிலான மதிமுகவிற்கு வெறும் 4 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும், அதில் மூன்று தொகுதிகளில் திமுகவின் ‘உதயசூரியன்’ சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே அவர்களது ‘பம்பரம்’ சின்னத்தை சுழற்ற அனுமதிக்கப்படுவது அந்த கட்சியினரிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக திராவிட இயக்க கொள்கைகளுக்காக குரல் கொடுத்து வரும் தங்களுக்கு இது ஒரு மிகப்பெரிய அரசியல் அவமானம் என்றே அவர்கள் கருதுகின்றனர்.
மறுபுறம், தலித் மக்களின் ஒருமித்த சக்தியாக விளங்கும் தொல். திருமாவளவன் தலைமையிலான விசிகவின் நிலை இன்னும் மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது. விசிகவிற்கு 6 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட வாய்ப்புள்ள நிலையில், அதில் ஒரு தொகுதியில் கூட ‘பானை’ சின்னத்தில் போட்டியிட அனுமதி மறுக்கப்படுவதாக தகவல்கள் கசிந்துள்ளன. 10 தொகுதிகள் மற்றும் தனிச்சின்னம் என்ற கோரிக்கையை முன்வைத்து வரும் திருமாவளவனை, திமுக தலைமை தனது சின்னத்திற்குள் முடக்க நினைப்பது ஒரு திட்டமிடப்பட்ட அடக்குமுறை யுக்தியாகவே பார்க்கப்படுகிறது. தனது சமூகத்தின் உரிமைகளுக்காக போராடும் ஒரு பேரியக்கத்தை இப்படி சிறுமைப்படுத்துவது எந்த ஊர் நியாயம் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இடதுசாரி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா 5 இடங்கள் மட்டுமே வழங்கப்படலாம் என்று நிலவும் பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளது. மக்கள் நல திட்டங்களுக்காகவும், தொழிலாளர் உரிமைகளுக்காகவும் களத்தில் நிற்கும் கம்யூனிஸ்ட்களை வெறும் ஒற்றை இலக்க எண்களில் சுருக்குவது அவர்களின் செல்வாக்கை குறைத்து மதிப்பிடும் செயல் என்று விமர்சிக்கப்படுகிறது. திமுகவின் இந்த தன்னிச்சையான மற்றும் மேலாதிக்க போக்கு, நீண்டகாலமாக பழகி வந்த தோழமை சக்திகளை தர்மசங்கடமான நிலைக்கு தள்ளியுள்ளது.
இந்த அரசியல் சூழலில் விசிக, மதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினால், அது திமுகவின் ஆட்சி கனவுக்கு பெரும் வேட்டாக அமையும் என்பது நிதர்சனம். இந்த கட்சிகளின் ஒருங்கிணைந்த வாக்கு வங்கி என்பது சுமார் 15 முதல் 18 சதவீதம் வரை இருக்கும் நிலையில், இவர்கள் பிரிந்து செல்வது திமுகவின் வெற்றி வாய்ப்பை அடியோடு பாதிக்கும். மேலும், இவர்கள் வெளியேறினால் அதிக இடங்களை பெறப்போகும் தேமுதிக போன்ற கட்சிகள் டெபாசிட் கூட வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்படும். திராவிட பேரியக்கம் என்ற போர்வையில் கூட்டணி கட்சிகளை வஞ்சிக்க நினைப்பது திமுகவிற்கே வினையாக முடியும் என்று அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.
ஒட்டுமொத்தமாக, 2026 தேர்தல் களம் திமுகவிற்கு ஒரு அக்னி பரீட்சையாகவே அமைய போகிறது. கூட்டணி கட்சிகளின் மிரட்டல்கள் வெறும் வெற்று முழக்கங்கள் அல்ல, அவை தங்களது அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்கான வாழ்வாதார போராட்டம். பணபலத்தையும், அதிகார பலத்தையும் வைத்துக்கொண்டு கூட்டணி கட்சிகளின் உரிமைகளை பறிக்க நினைத்தால், அது தேர்தலில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். திமுக தலைமை தனது பிடிவாதத்தை குறைத்துக்கொண்டு, விசுவாசமான கூட்டணி கட்சிகளுக்கு உரிய அங்கீகாரத்தையும், தனித்துவத்தையும் வழங்கினால் மட்டுமே மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர முடியும் என்பதே தற்போதைய கள யதார்த்தம்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
