தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை ஒட்டி தற்போதே உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, அதிமுக தலைமையில் அமையவுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் தொகுதி பங்கீடு குறித்த உத்தேச பட்டியல் சமூக வலைதளங்களில் வெளியாகி விவாதங்களை கிளப்பியுள்ளது. இந்த உத்தேச பட்டியலின்படி, அதிமுக தனது கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்கிவிட்டு, பெரும் பகுதியைத் தன் வசம் வைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளது. தற்போதைய ஆளும் கட்சியான திமுகவை வீழ்த்தி மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக மிக கவனமாக காய் நகர்த்தி வருகிறது.
இந்த உத்தேப் பட்டியலின் அடிப்படையில், அதிமுக மிகப்பெரிய பங்காக 164 தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உள்ளது. இது அந்த கூட்டணியின் பலமான அஸ்திவாரமாக பார்க்கப்படுகிறது. மேலும் கூட்டணி இல்லாமல் தனித்து ஆட்சி அமைக்கவும் வழி வகுக்கலாம்.. அதேபோல், பாரதிய ஜனதா கட்சிக்கு 31 இடங்கள் ஒதுக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த தேர்தல்களை விட பாஜகவிற்கு தமிழகத்தில் செல்வாக்கு கூடியிருப்பதாக கருதப்படுவதால், அந்தக் கட்சிக்கு இரட்டை இலக்கங்களில் இடங்களில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த இரு கட்சிகளும் கூட்டணியின் பிரதான சக்திகளாக செயல்பட உள்ளன.
கூட்டணியின் மற்ற முக்கியக் கட்சியான பாட்டாளி மக்கள் கட்சிக்கு 17 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் என உத்தேச பட்டியல் கூறுகிறது. வட தமிழகத்தில் பலமான வாக்கு வங்கியை கொண்டுள்ள பாமக, இந்த கூட்டணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருக்கும். மேலும், டிடிவி தினகரனின் அமமுக கட்சிக்கு 9 இடங்களும், ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 4 இடங்களும் வழங்கப்பட வாய்ப்புள்ளது.
இந்த கூட்டணியில் ஏனைய சிறிய கட்சிகளுக்கும் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. புதிய நீதிக்கட்சிக்கு 2 இடங்கள், ஐஜேகே மற்றும் புதிய தமிழகம் கட்சிகளுக்குத் தலா 2 இடங்கள், புரட்சி பாரதம் கட்சிக்கு 1 இடம் என பங்கீடு செய்யப்படலாம். அதேபோல், பார்வர்டு பிளாக், பெருந்தலைவர் மக்கள் கட்சி மற்றும் தமமுக போன்ற கட்சிகளுக்கும் தலா ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதில் ஒரு முக்கிய விஷயம் என்னவெனில் அதிமுக தவிர மற்ற அனைத்து கட்சிகளுமே தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளது, அதாவது 70 தொகுதிகளில் தாமரை போட்டியிடவுள்ளது. இதில் 40 அல்லது 50 வேட்பாளர்கள் ஜெயித்தால் அவர்கள் அனைவரும் பாஜக எம்.எல்.ஏக்களாக பார்க்கப்படுவார்கள்.
மொத்தத்தில் தொகுதி பங்கீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரும் வரை இத்தகைய உத்தேச பட்டியல்கள் விவாதங்களை அதிகப்படுத்தும். எனினும், வலுவான கூட்டணி மற்றும் சரியான தொகுதிப் பங்கீடு மட்டுமே வெற்றியை தீர்மானிக்கும் என்பது அரசியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
