தமிழக அரசியல் களம் தற்போது ஒரு மிகப்பெரிய வரலாற்று திருப்புமுனையில் நின்று கொண்டிருக்கிறது. கடந்த காலங்களில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக உருவெடுத்த பல தலைவர்கள் மீதும் மக்கள் பெரும் நம்பிக்கை வைத்தனர். குறிப்பாக, பாஜகவின் மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற போது, அவர் ஊழலுக்கு எதிராக பெரும் புரட்சியை ஏற்படுத்துவார் என்று இளைஞர்கள் நம்பினார்கள். ஆனால், டெல்லி மேலிடத்தின் அரசியல் நகர்வுகளும், கூட்டணியில் ஏற்பட்ட குழப்பங்களும் அண்ணாமலையை ஒரு கட்டத்தில் தனித்து விட்டன. அண்ணாமலையை மக்கள் நம்பிய போதிலும், பாஜகவின் உட்கட்சி அரசியலும் திட்டமிடல்களும் அவரை முழுமையாக கைவிட்டது போன்ற ஒரு பிம்பமே தற்போது எஞ்சியுள்ளது. இது அந்த மாற்றத்தை விரும்பிய வாக்காளர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்றொருபுறம், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பல ஆண்டுகளாக தனித்து நின்று அரசியல் செய்து வருகிறார். உணர்ச்சிப்பூர்வமான பேச்சுகளால் ஒருசில குறிப்பிட்ட இளைஞர்களை கவர்ந்தாலும், தேர்தல்களில் பெரிய அளவிலான வெற்றியை பெற தவறிவிட்டார். சீமானின் கொள்கைகள் ஒரு தரப்பினரை கவர்ந்தாலும், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவார் என்ற நம்பிக்கையை அவர் பொதுமக்களிடையே கடைசி வரை ஏற்படுத்தவில்லை என்பதே கசப்பான உண்மை. இனியும் மக்கள் அவரை ஒரு மாற்று சக்தியாக முழுமையாக நம்புவார்களா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. உணர்ச்சி அரசியலை தாண்டி, ஒரு நடைமுறை சாத்தியமான வெற்றியை தரக்கூடிய தலைவரை நோக்கியே இப்போது தமிழகம் நகர தொடங்கியுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவும் ஒரு வலுவான ஆளுமையாகவும் பார்க்கப்பட்டார். மக்கள் அவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனால், 2 எம்பி, 6 எம்.எல்.ஏ என்ற அதிகாரத்திற்காக தொடர்ந்து திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதும், அவர்களின் நிழலிலேயே அரசியல் செய்வதும் அவரது தனித்தன்மையை மெல்ல மெல்ல சிதைத்துவிட்டதாக பல சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். திராவிட ஆதிக்கத்திற்கு எதிராக குரல் கொடுத்தவர், இப்போது அதே திராவிட அரசியலிடம் வீழ்ந்துவிட்டார் என்ற விமர்சனம் அவர் மீது வலுவாக முன்வைக்கப்படுகிறது. இது ஒரு மாற்று அரசியலை தேடும் மக்களுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.
இந்த சூழலில் தான், நடிகர் விஜய் ஒரு ‘ஆபத்பாந்தவனாக’ தமிழக அரசியலில் கால் பதித்துள்ளார். தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அவர் தொடங்கியுள்ள இயக்கம், தற்போது நிலவும் அரசியல் வெற்றிடத்தை நிரப்பும் ஒரு சக்தியாக பார்க்கப்படுகிறது. விஜய் வெறும் திரையுலக நட்சத்திரமாக மட்டுமல்லாமல், ஒரு தெளிவான திட்டமிடலுடன் அரசியலுக்கு வந்துள்ளார். திராவிட அரசியலின் அரை நூற்றாண்டு கால ஆதிக்கத்தை வீழ்த்த மக்களுக்கு கிடைத்துள்ள மிக முக்கியமான மற்றும் கடைசி வாய்ப்பு விஜய் தான் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். மற்ற தலைவர்கள் சறுக்கிய இடங்களில் விஜய் தனது நிதானமான போக்கின் மூலம் வெற்றியை நோக்கி நகர்ந்து வருகிறார்.
2026 சட்டமன்ற தேர்தல் என்பது வெறும் ஆட்சி மாற்றம் மட்டுமல்ல, அது ஒரு சித்தாந்த மாற்றத்திற்கான போர்க்களம். இந்த வாய்ப்பை மக்கள் சரியாக பயன்படுத்த தவறினால், அடுத்த 50 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் மீண்டும் திராவிட அரசியலின் பிடிதான் இறுகப்போகிறது. ஒருமுறை கைநழுவும் வாய்ப்பு மீண்டும் அமைய பல தசாப்தங்கள் ஆகலாம். எனவே, மக்கள் தற்போதைய அரசியல் சூழலை சுதாரித்து கொண்டு முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். விஜய்யை ஒரு சாதாரண நடிகராக பார்க்காமல், மாற்றத்திற்கான ஒரு கருவியாக மக்கள் கையில் எடுக்க வேண்டிய தருணம் இதுவாகும்.
இறுதியாக, தமிழகத்தின் எதிர்காலம் மக்களின் கைகளிலேயே உள்ளது. அண்ணாமலை, சீமான், திருமாவளவன் போன்றோர் ஏற்படுத்திய தாக்கங்கள் ஒருபுறம் இருந்தாலும், ஆட்சி மாற்றத்திற்கான ஒற்றை புள்ளியாக விஜய் உருவெடுத்துள்ளார். திராவிட கட்சிகளின் பிடியில் இருந்து தமிழகத்தை விடுவிக்க இதுவே சரியான தருணம். மக்கள் இந்த கடைசி வாய்ப்பை உணர்ந்து செயல்படாவிட்டால், தமிழக அரசியல் மீண்டும் ஒரு தேக்க நிலையைச் சந்திக்கும். மாற்றத்தை விரும்பும் ஒவ்வொரு தமிழனும் சுதாரித்து கொள்ள வேண்டிய நேரம் இது. மே 4-ம் தேதி வெளியாகும் முடிவுகள் இந்த வரலாற்று மாற்றத்தின் சாட்சியாக அமையும் என்பதில் மாற்று கருத்தில்லை.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
