தமிழ்சினிமாவில் பல இயக்குனர்கள் இருந்தாலும் ஸ்ரீதரின் வருகைக்குப் பிறகு தான் டைரக்டர்களுக்கு என்று ஒரு தனி கவுரவம் ஏற்பட்டது. புதுமை இயக்குனர் என்று அழைக்கப்பட்ட ஸ்ரீதர் பல இயக்குனர்களுக்கு குறிப்பாக பாலசந்தர், பாரதிராஜாவுக்கு எல்லாம் முன்னோடியாக இருந்தார்.
ஆனால் அவர் முதல் படத்தை இயக்கும்போது எப்படிப்பட்ட பிரச்சனைகளை எல்லாம் சந்திக்க நேர்ந்தது என்று தெரியுமா? அவர் வீனஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் தான் முதல் படத்தை இயக்கினார். அந்த நிறுவனத்தில் கிருஷ்ணமூர்த்தி, கோவிந்தராஜன் இருவருடன் ஸ்ரீதரும் ஒரு பங்குதாரர். அப்படி இருந்தும் அவ்வளவு எளிதில் இவருடைய பங்குதாரர்கள் யாரும் ஸ்ரீதர் படத்தை இயக்குவதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. வேற வழியே இல்லாமல் அரை மனதோடு தான் ஸ்ரீதர் கல்யாணப்பரிசு படத்தை இயக்க அவர்கள் ஒப்புக் கொண்டார்கள்.
அவர்கள் அரை மனதோடு தான் ஒப்புக்கொண்டுள்ளார்கள் என்ற விஷயம் ஸ்ரீதருக்குத் தெரிந்த உடன் அவர் இப்படி சொன்னார். நான் ஒரு 10 நாள் படப்பிடிப்பு நடத்துறேன். அதை உங்களுக்குப் போட்டுக் காட்டுறேன். பிடிச்சிருந்தா நான் தொடருறேன். இல்லன்னா வேற டைரக்டரைப் போட்டு இந்தப் படத்தைப் படமாக்குவோம்னு சொல்லி விட்டுத் தான் அந்தப் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கினார் ஸ்ரீதர்.
அப்படி ஒரு நிபந்தனையோடு துவங்கப்பட்ட கல்யாணப்பரிசு படம் எப்படிப்பட்ட வெற்றியைக் குவித்தது? ஸ்ரீதருக்கு எப்படிப்பட்ட அடையாளத்தைத் தமிழ்சினிமாவில் தந்தது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.
இதுல நாம தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னன்னா எந்த சாதனையாளரை எடுத்துக்கிட்டாலும் இதுபோன்ற பல தடைக்கற்களைத் தாண்டித் தான் வெற்றி பெற்றுள்ளார்கள். அதனால இதுபோன்ற தடைக்கற்கள் வரும்போது அதுபற்றி சஞ்சலம் கொள்ளாமல் எதிர்த்து நின்று துணிச்சலோடு போராடினால் தான் வெற்றி கிடைக்கும் என்பதுதான் ஸ்ரீதரின் வாழ்க்கை நமக்குக் கற்றுத் தரும் பாடம்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.


