துபாய் என்றாலே வரிப்பணம் இல்லாத சொர்க்கம், ஆடம்பர வாழ்க்கை மற்றும் பாதுகாப்பான வீதிகள் என உலகெங்கிலும் உள்ள செல்வந்தர்களையும் செல்வாக்கு செலுத்துபவர்களையும் கவர்ந்து வந்த பகுதியாக இதுவரை இருந்தது. ஆனால் தற்போது போர் மேகங்களால் தன் பொலிவை இழந்து வருகிறது. ஈரானின் ஏவுகணை மற்றும் ஆளில்லா வான்வழி தாக்குதல்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் இலக்காகி வருவதால், அங்கு தங்கியிருக்கும் வெளிநாட்டினர் தங்கள் உயிருக்கு அஞ்சி வெளியேறி வருகின்றனர். பல ஆண்டுகளாக வல்லுனர்களால் திட்டமிடப்பட்டு கட்டமைக்கப்பட்ட துபாயின் ‘பாதுகாப்பான நகரம்’ என்ற பிம்பம் தற்போது சிதைந்துள்ளதாகவும், இனி துபாய் பழைய நிலைக்குத் திரும்புவது கடினம் என்றும் அங்கிருக்கும் குடியிருப்பாளர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் ஈரான் சுமார் 1,700 ஏவுகணைகளை ஏவியுள்ளது. இதில் மூன்றில் இரண்டு பங்கு ஏவுகணைகள் துபாயை மட்டுமே குறிவைத்து நடத்தப்பட்டவை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று காலை துபாய் சர்வதேச விமான நிலையத்தை தாக்கிய ஏவுகணைகளால் முனையங்கள் சேதமடைந்தன, இதில் நான்கு பேர் காயமடைந்தனர். இதன் விளைவாக, உலகின் முன்னணி விமான நிறுவனங்கள் பல வாரங்களுக்கு துபாய்க்கான தங்களது சேவைகளை ரத்து செய்துள்ளன. புகழ்பெற்ற பாம் ஜுமேராவில் உள்ள ஃபேர்மாண்ட் ஹோட்டல் போன்ற சுற்றுலா தலங்களும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதால், துபாயின் சுற்றுலாத்துறை முடங்கும் சூழல் உருவாகியுள்ளது.
துபாயின் பொருளாதாரம் என்பது எண்ணெய் வளத்தை விட, அங்கு வசிக்கும் 90 சதவீத வெளிநாட்டினரையும் சுற்றுலாவையுமே நம்பியுள்ளது. ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் மற்றும் சிட்டி வங்கி போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வெளியேற்றி வருகின்றன. கடந்த சில வாரங்களில் மட்டும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும் குடியிருப்பாளர்களும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். பல ஆண்டுகளாக துபாயில் வசிக்கும் செல்வந்தர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும், அவர்கள் மீண்டும் துபாய்க்கு வர விரும்பவில்லை என்றும் கூறுகின்றனர்.
இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், ஐக்கிய அரபு அமீரக அரசு ஒரு தீவிரமான மக்கள் தொடர்பு பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது. வானத்தில் கேட்கும் பயங்கர வெடிச்சத்தங்கள் ஏவுகணைகளை தடுக்கும் வான் பாதுகாப்பு அமைப்பின் சத்தம் என்றும், அவை மக்கள் பாதுகாப்பாக இருப்பதையே குறிக்கின்றன என்றும் அரசு விளக்கம் அளித்துள்ளது. இருப்பினும், ஏவுகணைகள் பாயும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இது மக்களிடையே பாதுகாப்பற்ற உணர்வையும், கருத்து சுதந்திரம் பறிக்கப்படுவதையும் போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்கியுள்ளது.
துபாயில் உள்ள டாக்ஸி டிரைவர் தொழிலாளர்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. ஏவுகணை தாக்குதலில் தங்களது கார்களை சிலர் இழந்துள்ளதாகவும், தற்போது துபாயில் எவ்வித வருமானமும் இல்லை என்றும், தங்கள் குடும்பத்தினர் தாயகம் திரும்ப கெஞ்சுவதாகவும் வேதனைப்படுகிறார்கள். எனவே ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இப்போது வேறு நாடுகளுக்கு செல்லத் திட்டமிட்டு வருகின்றனர். போர் ஒருவேளை முடிவுக்கு வந்தாலும், அருகில் உள்ள ஈரானால் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் ஆபத்து வரலாம் என்ற யூகத்தால் ‘துபாய் கதை முடிந்துவிட்டது’ என்ற முழக்கம் இப்போது அங்குள்ள வெளிநாட்டினரிடையே பரவலாக ஒலிக்க தொடங்கியுள்ளது.
ஈரானின் தாக்குதலில் 90 சதவீத ஏவுகணைகள் வான் பாதுகாப்பு அமைப்புகளால் அழிக்கப்பட்டாலும், எஞ்சிய 10 சதவீத தாக்குதல்கள் ஏற்படுத்தும் பாதிப்பு மிகப்பெரியதாக உள்ளது. சமீபத்தில் விமான நிலையத்திற்கு அருகே ஆளில்லா விமானம் மோதி எழுந்த கரும்புகை வீடியோக்கள் வைரலாகி, எஞ்சியிருந்த நம்பிக்கையையும் தகர்த்துள்ளன. சர்வதேச அளவில் பாதுகாப்பான முதலீட்டுத் தலமாகப் பார்க்கப்பட்ட துபாய், இப்போது போர்க்களமாக மாறியிருப்பது உலகப் பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
