மத்திய கிழக்கில் ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே நிலவி வரும் போர் பதற்றம் தற்போது வளைகுடா நாடுகளுக்கும் பரவி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க, இஸ்ரேல் கூட்டு தாக்குதலுக்கு பதிலடியாக, நேற்று ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை தொடங்கியது. இந்த தாக்குதலின் ஒரு பகுதியாக துபாயின் புகழ்பெற்ற துபாய் மெரினா பகுதியில் உள்ள ’23 மெரினா டவர்’ என்ற அடுக்குமாடி கட்டிடம் பாதிப்புக்குள்ளானது. 90 மாடிகளை கொண்ட இந்த ஆடம்பர கட்டிடத்தின் மேல் தளங்களில் தீப்பிழம்புகளும் புகையும் வெளியேறுவதை காட்டும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உலகையே அதிரவைத்தன.
ஆரம்பத்தில் இது ஈரானின் நேரடி ட்ரோன் தாக்குதல் என்று செய்திகள் பரவினாலும், ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் நிலைமையை தெளிவுபடுத்தினர். ஈரானால் ஏவப்பட்ட வான்வழி பொருளை அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் வெற்றிகரமாக இடைமறித்து தகர்த்ததாகவும், அந்த தகர்ப்பின் போது சிதறிய பாகங்கள் கட்டிடத்தின் மீது விழுந்ததால் தீ விபத்து ஏற்பட்டதாகவும் அந்நாட்டு அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் பெரும் செல்வந்தர்கள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் சர்வதேச வல்லுநர்கள் வசித்து வரும் நிலையில், தீ விபத்து ஏற்பட்டவுடன் அவசர நிலை குழுவினர் விரைந்து செயல்பட்டு குடியிருப்பாளர்களை பாதுகாப்பாக வெளியேற்றினர்.
இச்சம்பவத்தை தொடர்ந்து துபாய் சர்வதேச விமான நிலையம் தாக்கப்பட்டது போன்ற வதந்திகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவின. ஆனால், அமீரக அதிகாரிகள் இந்த வதந்திகளை முற்றிலுமாக மறுத்துள்ளனர். துபாயின் உள்கட்டமைப்புகள் மற்றும் விமான நிலையங்கள் வழக்கம் போல் தடையின்றி இயங்கி வருவதாகவும், நிலைமை முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாகவும் அவர்கள் உறுதிப்படுத்தினர். தேவையற்ற அச்சத்தை பரப்ப வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே பொதுமக்கள் நம்ப வேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டு கொண்டுள்ளனர்.
அரசியல் ரீதியாகப் பார்த்தால், ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியன் அண்டை நாடுகளிடம் முன்னதாக ஒரு மன்னிப்பு கோரிக்கையை முன்வைத்திருந்தார். ஈரானை தாக்க ஒரு நாட்டை தளமாகப் பயன்படுத்தாதவரை, அந்த நாட்டின் மீது ஈரான் தாக்குதல் நடத்தாது என்று அவர் உறுதியளித்திருந்தார். இருப்பினும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்த மன்னிப்பை ஈரானின் ‘சரணாகதி’ என்று வர்ணித்து கேலி செய்தார். ட்ரம்ப்பின் இந்த பேச்சு ஈரானிய படைகளை ஆத்திரமடைய செய்ததுடன், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு எதிரான தாக்குதல்கள் தொடரும் என்ற எச்சரிக்கையையும் விடுக்க வைத்தது.
இந்த விபத்தில் யாருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என்பது பெரும் நிம்மதியை அளித்துள்ளது. அவசர கால மீட்புக் குழுவினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தியதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இது ஒரு சிறிய அளவிலான பாதிப்பு மட்டுமே என்றும், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் துபாய் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளன. இருப்பினும், உலகின் மிக உயரமான குடியிருப்பு கட்டிடங்களில் ஒன்றான 23 மெரினா டவர் மீது சிதைவுகள் விழுந்தது சர்வதேச அளவில் பெரும் செய்தியாக மாறியுள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான மோதல் ஒரு பெரிய போராக வெடிக்குமோ என்ற கவலை தற்போது அதிகரித்துள்ளது. ஒரு நாட்டின் மீதான தாக்குதல் அண்டை நாடுகளின் பாதுகாப்பையும் பொருளாதாரத்தையும் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது. ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் தற்போதைய சூழலை தீவிரமாக கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளனர். வரவிருக்கும் நாட்களில் ஈரானின் அடுத்தகட்ட நகர்வுகள் மற்றும் அதற்கு அமெரிக்காவின் எதிர்வினை என்னவாக இருக்கும் என்பதை பொறுத்தே இப்பிராந்தியத்தின் அமைதி அமையும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
