மத்திய தரைக்கடல் பகுதியில் பயணம் செய்து கொண்டிருந்த ‘ஆர்க்டிக் மெட்டாகாஸ்’ என்ற ரஷ்ய எரிவாயு ஏற்றி செல்லும் கப்பல் , மால்டா அருகே ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளாகி தீப்பற்றி எரிவது சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் பொருளாதார தடையில் இருக்கும் இந்த கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் உக்ரைன் இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டாலும், அதற்கான அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் இன்னும் வெளியாகவில்லை. கப்பலில் இருந்து வெளியேறும் அடர்ந்த கரும்புகையும், ராட்சத நெருப்பு பிழம்புகளும் அங்கிருந்து பல மைல் தொலைவிற்கு தெரிவதாக கடலோர பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல் குறித்த முதற்கட்டத் தகவல்களின்படி, ஒரு அதிநவீன கடற்படை ட்ரோன் மூலமாகவே இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே தொடர்ந்து வரும் போரின் ஒரு பகுதியாக இது இருக்கலாம் என பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர். இருப்பினும், தாக்குதலுக்கு உள்ளான கப்பலில் இருந்த மாலுமிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் லிபிய கடல் எல்லைக்குள் ஒரு உயிர் காக்கும் படகில் இருந்தபோது மால்டா ஆயுத படையினரால் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டுள்ளனர்.
தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியில் இந்த தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த சனிக்கிழமை ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, வளைகுடாப் பகுதிகளில் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. ஈரான் தனது ஆதரவு அமைப்புகள் மூலம் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் தளங்கள் மீது தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த மோதல் இப்போது மத்திய தரைக்கடல் பகுதிக்கும் பரவி வருவது உலகளாவிய எரிசக்தி வர்த்தகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
இதே வார இறுதியில், சைப்ரஸ் நாட்டில் உள்ள பிரிட்டிஷ் ராணுவத் தளமான ஆர்ஏஎஃப் அக்ரோதிரி மீதும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்தத் தாக்குதலுக்கு ஈரான் ஆதரவு பெற்ற ஹெஸ்புல்லா அமைப்பு காரணமாக இருக்கலாம் என சைப்ரஸ் அரசு சந்தேகிக்கிறது.
ரஷ்யாவின் எரிவாயு கப்பல் மீதான இந்த தாக்குதல், உக்ரைன்-ரஷ்யா மோதல் மற்றும் மத்திய கிழக்கு போர் ஆகிய இரண்டும் ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்டு வருவதை காட்டுகிறது. சர்வதேச கடல் வழி பாதைகளில் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதால், கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகள் உலக சந்தையில் மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. வரும் நாட்களில் இந்த போர் மேகங்கள் மேலும் பல நாடுகளுக்கு விரிவடையும் சூழல் நிலவுவதால், உலக நாடுகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இந்த நகர்வுகளை கவனித்து வருகின்றன.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
