காட்டுத்தீ நகரங்களை நெருங்கும்போது, தீயணைப்பு வீரர்கள் வேண்டுமென்றே ஒரு சிறிய தீயை உருவாக்கி காட்டில் உள்ள உலர்ந்த புற்களை எரித்துவிடுவார்கள். Backburning எனப்படும் இந்த உத்தி, பெரிய நெருப்பு பரவுவதற்கான எரிபொருளை தடுத்து நகரங்களை காக்கும். தற்போது மத்திய கிழக்கில் பற்றியெரியும் மாபெரும் போரில் இருந்தும், அமெரிக்காவின் பிடியிலிருந்தும் தப்பிக்க பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனிர் இதே ‘பேக்பர்னிங்’ உத்தியை தான் கையாண்டு வருகிறார். ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் உலகையே உலுக்கி கொண்டிருக்கும் வேளையில், பாகிஸ்தான் திடீரென ஆப்கானிஸ்தான் மீது போர் அறிவிப்பு செய்திருப்பது தற்செயலானது அல்ல.
பிப்ரவரி 28 அன்று ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி கொல்லப்பட்ட தாக்குதலுக்கு பிறகு, ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளும் ஈரானின் ஏவுகணை வீச்சுக்கு ஆளாகியுள்ளன. அமெரிக்காவின் நட்பு நாடான பாகிஸ்தானிடம் இருந்து அதிபர் டொனால்ட் டிரம்ப் ராணுவ ரீதியான மற்றும் தளவாட உதவிகளை எதிர்பார்ப்பது இயல்பானது. ஏனெனில், ஈரான் மீது தாக்குதல் நடத்த சவுதி அரேபியா மற்றும் ஜோர்டான் போன்ற நாடுகள் தங்கள் வான்வெளியை பயன்படுத்த அனுமதி மறுத்துவிட்டன. ஈரானுடன் 900 கிலோமீட்டர் எல்லையை பகிர்ந்து கொள்ளும் பாகிஸ்தான் மட்டுமே அமெரிக்காவிற்கு இப்போது இருக்கும் ஒரே பிடிமானம். ஆனால், ஈரானுக்கு உதவினால் உள்நாட்டில் உள்ள 20 சதவீத ஷியா மக்களிடமிருந்து பெரும் கிளர்ச்சியை சந்திக்க நேரிடும் என்பதை முனிர் அறிவார்.
இந்த இக்கட்டான நிலையில் இருந்து தப்பிக்கவே, எவ்வித தூண்டுதலும் இன்றி பிப்ரவரி 27 அன்று ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் ‘நேரடி போர்’ அறிவித்தது. பிப்ரவரி தொடக்கத்தில் நடந்த குண்டுவெடிப்புக்கு இப்போது பதிலடி கொடுப்பதாக கூறுவது நம்பும்படியாக இல்லை. உண்மையில், தனது எல்லைகள் எரிந்து கொண்டிருக்கின்றன என்பதை காட்டி அமெரிக்காவின் கோரிக்கைகளை நிராகரிக்கவே இந்த நாடகம் ஆடப்படுகிறது. “எங்கள் வீடே எரியும்போது உங்களின் ஈரான் போருக்கு எங்களால் எப்படி உதவ முடியும்?” என்ற செய்தியை டிரம்ப்பிற்கு சொல்லவே ஆப்கான் தாலிபான்களுடன் ஒரு மோதலை பாகிஸ்தான் ராணுவ தலைமை திட்டமிட்டு உருவாக்கியுள்ளது.
மறுபுறம், கராச்சி மற்றும் லாகூரில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மீதான போராட்டக்காரர்களின் தாக்குதலும் ஒரு திட்டமிட்ட நகர்வாகவே பார்க்கப்படுகிறது. தூதரக பாதுகாப்பை வேண்டுமென்றே தளர்த்தி, போராட்டக்காரர்கள் உள்ளே நுழைய பாகிஸ்தான் உளவு அமைப்புகள் அனுமதித்துள்ளன. அங்கு அமெரிக்க கடற்படை வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 10 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டது, மக்களிடையே அமெரிக்க எதிர்ப்பு உணர்வை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது. இது முனிருக்கு ஒரு வசதியான சூழலை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. மக்கள் கொதிப்பில் இருக்கும்போது அமெரிக்காவிற்கு தளம் கொடுத்தால் ஆட்சியே கவிழ்ந்துவிடும் என்று டிரம்பிடம் சாக்குப்போக்கு சொல்ல இதுவே சிறந்த வழியாகும்.
ஆச்சரியப்படும் விதமாக, பாகிஸ்தான் மேற்கொண்டு வரும் இந்த போரை டிரம்ப் வரவேற்றுள்ளார். “பாகிஸ்தான் மிகச்சிறப்பாக செயல்படுகிறது, முனிர் ஒரு சிறந்த தளபதி” என்று டிரம்ப் புகழ்ந்திருப்பது, பாகிஸ்தானின் இந்த ‘நாடகத்தை’ அமெரிக்கா நம்பிவிட்டதையே காட்டுகிறது. 2025 மே மாதம் இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்துார்’ தாக்குதலுக்கு பிறகு பீல்டு மார்ஷலாக உயர்ந்த முனிர், இக்கட்டான சூழலில் இருந்து தப்பிக்க போர்களை தொடங்குவதில் கைதேர்ந்தவர். கடந்த காலங்களில் இந்தியாவுடன் ஒரு சிறிய போரை விரும்பிய அவர், இப்போது ஆப்கானிஸ்தானுடன் ஒரு முழுமையான போரை தொடங்கி அதன் மூலம் தனது ராணுவ இருப்பை தக்கவைக்கப் பார்க்கிறார்.
பாகிஸ்தானின் இந்த ‘பேக்பர்னிங்’ உத்தி தற்காலிகமாக பலன் தரலாம். ஈரான் விவகாரத்தில் இருந்து விலகி நிற்க இது அவர்களுக்கு உதவும். ஆனால், ஆப்கான் தாலிபான்களின் ட்ரோன்கள் இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டி வரை ஊடுருவி தாக்குதல் நடத்துவது பாகிஸ்தானுக்கு பெரும் தலைவலியாக மாறும். மத்திய கிழக்கு என்ற மாபெரும் நெருப்பில் இருந்து தப்பிக்க தனது சொந்த வீட்டிற்கு தானே தீ வைத்த முனிர், அந்த தீயைத் தணிக்க முடியாமல் போனால் அது பாகிஸ்தானின் ஒட்டுமொத்த அமைதியையும் பொசுக்கிவிடும். அதிகாரத்தை தக்கவைக்க ஒரு தளபதி ஆடும் இந்த ஆபத்தான விளையாட்டு, தெற்காசியாவின் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கியுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
