தமிழக அரசியல் களம் தற்போது ஒரு மிகப்பெரிய மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான உறவில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு விரிசல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடித்தாலும், கள யதார்த்தத்தில் ஒரு சாதாரண திமுக தொண்டன் கூட காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களிக்க தயாராக இல்லை என்ற பேச்சுகள் பரவலாக எழுகின்றன. அதேபோல், பல இடங்களில் காங்கிரஸ் தொண்டர்களே தங்கள் கட்சிக்கு வாக்களிக்காமல் புறக்கணிக்கும் சூழல் நிலவுகிறது. இது திராவிட மற்றும் தேசிய கட்சிகளுக்கு இடையிலான கொள்கை ரீதியான முரண்பாடுகளை தாண்டி, அடிமட்ட தொண்டர்களிடையே நிலவும் அதிருப்தியை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.
மேலிட மட்டத்தில் சோனியா காந்தியும், மு.க. ஸ்டாலினும் ஒருவருக்கொருவர் சமாதானம் அடைந்தாலும், அவர்கள் கை குலுக்கி கொண்டாலும், மாவட்ட மற்றும் வட்ட அளவிலான தொண்டர்கள் ஒருபோதும் மனதளவில் ஒன்றிணைய போவதில்லை. பல ஆண்டுகளாக தமிழகத்தில் நிலவும் இந்த “கூட்டணி தர்மம்” என்பது பெயரளவில் மட்டுமே இருக்கிறது. தொகுதிகளை பகிர்ந்துகொள்வதில் தொடங்கும் மோதல், வாக்கு சேகரிப்பு வரை நீடிக்கிறது. ஒரு வலுவான கட்சி மற்றொரு மெலிந்த கட்சியை சுமந்துகொண்டு போவது, நீண்டகால நோக்கில் இரண்டு கட்சிகளின் தனித்துவத்தையும் சிதைப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
தற்போதைய அரசியல் சூழலில், காங்கிரஸை கூட்டணியில் இருந்து கழட்டிவிடுவதே திமுகவுக்கு பாதுகாப்பானது என்ற கருத்து ஆளுங்கட்சி வட்டாரத்திலேயே மெல்ல ஒலிக்க தொடங்கியுள்ளது. அதிகப்படியான இடங்களை காங்கிரஸிற்கு விட்டுக்கொடுப்பதன் மூலம், திமுக தனது சொந்த பலத்தை குறைத்துக்கொள்வதோடு, தேவையற்ற விமர்சனங்களையும் சுமக்க வேண்டியுள்ளது. அதேபோல், காங்கிரஸை பொறுத்தவரை, திமுகவின் நிழலில் இருந்து வெளிவந்து தனித்து நின்றால் அல்லது ஒரு மாற்று அணியுடன் இணைந்தால் மட்டுமே தனது இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க முடியும். தங்களின் பலத்தை நிரூபிக்க ஒரு வாய்ப்புக்காக காங்கிரஸ் தொண்டர்களும் காத்திருக்கிறார்கள்.
இந்த சூழலில், நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றி கழகம்’ மற்றும் காங்கிரஸ் இணைந்தால் அது ஒரு புதிய அரசியல் திருப்பமாக அமையும். தவெக – காங்கிரஸ் கூட்டணி அமைந்தால், தமிழக தேர்தல் களம் மூன்று வலிமையான கூட்டணிகளை கொண்ட முக்கோண போட்டியாக மாறும். விஜய் போன்ற ஒரு இளைஞர் சக்தியும், காங்கிரஸின் தேசிய பின்னணியும் இணைவது இளம் வாக்காளர்களை பெரிதும் ஈர்க்கும். இது திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு துருவ அரசியலை உடைத்து, ஒரு புதிய அதிகார பகிர்வுக்கு வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.
இந்த மூன்று முனை போட்டியினால் தேர்தல் முடிவுகள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வாக்குகள் சிதறும்போது, பாரம்பரியமாக திராவிட கட்சிகளுக்கு செல்லும் ஓட்டுகள் புதிய கூட்டணிகளுக்கு மடைமாறக்கூடும். குறிப்பாக, திமுக மற்றும் அதிமுகவின் வாக்கு வங்கிகளில் மிகப்பெரிய சரிவை இந்த புதிய கூட்டணி ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இது வெறும் வெற்றி-தோல்வி என்ற நிலையை தாண்டி, தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய ‘ரீ-செட்’ ஆக அமையும். 2026 தேர்தல் முடிவுகள் யாரும் கணிக்க முடியாத ஒரு ஆச்சரியத்தை தரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
இறுதியாக, தமிழகத்திற்கு தேவை ஒரு ஆரோக்கியமான மாற்று அரசியல். காங்கிரஸும் திமுகவும் தங்கள் உறவை மறுபரிசீலனை செய்து பிரிவதே இரண்டு தரப்புக்கும் நல்லது. ஒரு சுதந்திரமான காங்கிரஸ் மற்றும் ஒரு துடிப்புள்ள தவெக ஆகியவை கரங்கோர்க்கும் போது, அது பல ஆண்டுகளாக தேங்கிக் கிடக்கும் தமிழக அரசியலில் ஒரு புத்துணர்ச்சியை ஊட்டும். பழைய தந்திரங்கள் பலிக்காத இந்த புதிய களத்தில், தொண்டர்களின் மனநிலையை புரிந்துகொண்டு காய்களை நகர்த்தும் கட்சிகளே இறுதிப்போட்டியில் வெற்றி பெறும். தமிழகத்தின் எதிர்காலம் இப்போது ஒரு சுவாரஸ்யமான கட்டத்தை எட்டியுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
