தமிழக அரசியல் களத்தில் ஒரு காலத்தில் ‘கிங்’ ஆகவும், ‘கிங் மேக்கராகவும்’ வலம் வந்த தேசிய முற்போக்கு திராவிட கழகம் தற்போது தனது வாழ்வா சாவா போராட்டத்தை 2026 சட்டமன்ற தேர்தலில் எதிர்கொள்ள தயாராகிவிட்டது. சமீபகாலமாக இரு திராவிட கட்சிகளுடனும் ரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்த தேமுதிக, இறுதியில் ஆளுங்கட்சியான திமுகவுடன் கைகோர்த்துள்ளது. இதனை அரசியல் விமர்சகர்கள் “வியாபார ரீதியிலான வெற்றி” என்று வர்ணித்தாலும், அடிமட்ட தொண்டர்கள் மத்தியில் இது பலத்த விவாதங்களை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, ஒரு மாநிலங்களவை சீட் மற்றும் 6 சட்டமன்ற தொகுதிகள் என்ற பேரம் முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும், தேமுதிகவின் கடந்த கால தேர்தல் வரலாறு அக்கட்சிக்கு மிகுந்த எச்சரிக்கையையே விடுக்கிறது. 2016 மற்றும் 2021 ஆகிய இரு சட்டமன்ற தேர்தல்களிலும் தேமுதிக எந்த அணியில் இருந்ததோ, அந்த அணி படுதோல்வியை சந்தித்தது என்பது கசப்பான உண்மை. 2016-ல் மக்கள் நலக் கூட்டணியின் முகமாக விஜயகாந்த் முன்னிறுத்தப்பட்டார்; ஆனால் அக்கூட்டணி ஒரு தொகுதியைக்கூட வெல்லவில்லை. 2021-ல் அமமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டும் அதே நிலைதான் நீடித்தது. இந்த ‘தோல்வி வரலாறு’ 2026-லும் தொடருமா அல்லது திமுக கூட்டணியில் இணைந்திருப்பதன் மூலம் அந்த சாபத்தை சுக்குநூறாக உடைக்குமா என்பதுதான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி.
கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 29 இடங்களை வென்று, எதிர்க்கட்சி தலைவராக விஜயகாந்த் அமர்ந்தது அக்கட்சியின் பொற்காலமாக பார்க்கப்படுகிறது. ஆனால், அந்த வெற்றிக்கு பிறகு அக்கட்சியின் வாக்கு வங்கி மளமளவென சரிந்தது. குறிப்பாக 2021 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக பெற்ற வாக்கு சதவீதம் வெறும் 0.43% மட்டுமே. ஒரு மாநில கட்சிக்கு இது மிகப்பெரிய வீழ்ச்சியாக கருதப்படுகிறது. இழந்த செல்வாக்கை மீட்கவும், கட்சியின் வாக்கு வங்கியை மீண்டும் 5 சதவீதத்திற்கு மேல் உயர்த்தவும் இந்த தேர்தல் பிரேமலதா விஜயகாந்திற்கு ஒரு மிகப்பெரிய அக்னிப்பரீட்சையாக அமையப்போகிறது.
“கேப்டன்” விஜயகாந்த் மறைந்த பிறகு அக்கட்சி சந்திக்கும் முதல் சட்டமன்ற தேர்தல் இது என்பதால், மக்கள் மத்தியில் இருக்கும் அனுதாப அலை தங்களுக்கு கைகொடுக்கும் என்று பிரேமலதா பெரிதும் நம்புகிறார். 2026-ல் திமுக கூட்டணியுடன் இணைந்து 200-க்கும் மேற்பட்ட இடங்களை வென்று ஆட்சியை தக்கவைப்போம் என்று அவர் சூளுரைத்துள்ளார். ஆனால், கள நிலவரம் முற்றிலும் வேறாக உள்ளது. ஒருபுறம் திமுகவின் ஆட்சிக்கு எதிரான விமர்சனங்கள், மறுபுறம் விஜய்யின்ன் எழுச்சி என பல சவால்களை தேமுதிக எதிர்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக, விஜய்யின் தமிழக வெற்றி கழகம் தேமுதிகவின் பாரம்பரிய வாக்கு வங்கியில் கைவைக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
தேமுதிகவின் இந்த திடீர் அரசியல் மாற்றம் அக்கட்சியின் கொள்கை ரீதியான முடிவா அல்லது தேர்தல் செலவுகளை சமாளிக்க எடுக்கப்பட்ட முடிவா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதிமுக தரப்பு மாநிலங்களவை சீட் கொடுக்க தயங்கியதே பிரேமலதா திமுக பக்கம் சாயக் காரணம் என்று கூறப்படுகிறது. ஒரு கட்சியின் எதிர்காலத்தை தீர்மானிப்பது வெறும் சீட் எண்ணிக்கையோ அல்லது பேரமோ அல்ல, மக்களிடம் கொண்டு சேர்க்கும் கொள்கைகளும் நம்பிக்கையும்தான். “வியாபாரம்” வெற்றிகரமாக முடிந்திருந்தாலும், அது வாக்குகளாக மாறுமா என்பதில் இன்னும் பெரும் சந்தேகம் நிலவுகிறது.
இறுதியாக, 2026 தேர்தல் முடிவுகள் பிரேமலதாவின் அரசியல் எதிர்காலத்தையும் தேமுதிகவின் அங்கீகாரத்தையும் தீர்மானிக்கப்போகிறது. 2011 போல் மீண்டும் ஒரு எழுச்சி கிடைக்குமா அல்லது 2021 போல் ஒரு படுதோல்வியை பரிசாக மக்கள் கொடுப்பார்களா என்பது மார்ச்-ஏப்ரல் மாதங்களில் தெரிந்துவிடும். விஜயகாந்த் என்ற ஆளுமை இல்லாத நிலையில், அவரது நிழலிலிருந்து வெளிவந்து பிரேமலதா மற்றும் அவரது மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் கட்சியை எப்படிக் கொண்டு செல்லப்போகிறார்கள் என்பதை பொறுத்தே ‘நாளை நமதே’ என்ற அவர்களின் கனவு நனவாகும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.

