வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வரும் சூழலில், வரும் பிப்ரவரி 12-ம் தேதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின் வாக்குகளை ஒருங்கிணைக்கும் நோக்கில் ‘வங்கதேச சிறுபான்மை ஜனதா கட்சி’ (BMJP) களமிறங்கியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட இக்கட்சி, நாட்டின் 300 நாடாளுமன்ற தொகுதிகளில் 91 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டிருந்தது. இருப்பினும், நிலவும் பாதுகாப்பு சூழல் காரணமாக முதற்கட்டமாக 28 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சிறுபான்மையினர் 20% முதல் 60% வரை உள்ள தொகுதிகளை குறிவைத்து இக்கட்சி தனது தேர்தல் வியூகத்தை அமைத்துள்ளது.
இக்கட்சியின் தலைவர் சுகிருதி குமார் மண்டல் ஊடகங்களிடம் பேசுகையில், தற்போதைய சூழலில் சிறுபான்மையினர் அச்சமின்றி வாக்களிக்க பாதுகாப்பு அவசியம் என்று வலியுறுத்தியுள்ளார். இதற்காக தாரிக் ரஹ்மானின் பிஎன்பி அல்லது ஜமாத்-இ-இஸ்லாமி போன்ற பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவும் அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். “இத்தகைய கூட்டணிகள் மட்டுமே சிறுபான்மையினருக்கு தேர்தலின் போது நம்பிக்கையை அளிக்கும். அவாமி லீக் தற்போது எங்களுக்கு ஒரு விருப்பத்தேர்வு அல்ல,” என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு கோரிக்கை விடுத்துள்ள மண்டல், இந்தியா தனது பழைய நிலைப்பாட்டை மாற்றி, அவாமி லீக்கிற்கு ஆதரவளிப்பதற்கு பதிலாக இந்துக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அவாமி லீக் கட்சி இந்தியாவை தனது அதிகாரத்தை தக்கவைக்க மட்டுமே பயன்படுத்திக் கொண்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே, வங்கதேசத்தின் பிரதான அரசியல் கட்சிகள் சிறுபான்மையினரின் குரலுக்கு செவிசாய்க்கும் என்பது இவரது வாதமாக உள்ளது.
இக்கட்சியின் ஐந்து அம்ச திட்டம் மதச்சார்பற்ற வங்கதேசத்தை உருவாக்குவதிலும், நாட்டை ஐந்து மாகாணங்களாக பிரித்து கூட்டாட்சி முறையை அறிமுகப்படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் அடிப்படை மற்றும் அரசியலமைப்பு உரிமைகளை உறுதி செய்தல், பாடப்புத்தகங்களில் மதச்சார்பற்ற மற்றும் அறிவியல் பூர்வமான மாற்றங்களைக் கொண்டு வருதல் மற்றும் சிறுபான்மையினருக்கு சமமான உரிமைகளை வழங்குதல் ஆகியவையும் இவர்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
வங்கதேசத்தின் மக்கள் தொகையில் சுமார் 2.5 கோடி இந்துக்கள் உள்ளனர். இதுவரை நடந்த தேர்தல்களில் இவர்கள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட கட்சியின் வாக்கு வங்கியாகவே பார்க்கப்பட்டனர். ஆனால், தற்போது BMJP மூலமாக தங்களின் உரிமைகளுக்காக தனித்து ஒரு அரசியல் தளத்தை உருவாக்க அவர்கள் முயன்று வருகின்றனர். எத்தனையோ சொத்து அபகரிப்பு மற்றும் கட்டாய மதமாற்ற சம்பவங்களுக்கு மத்தியில், தங்களின் இருப்பை தக்கவைத்துக்கொள்ள அரசியலே தீர்வு என்று இக்கட்சி நம்புகிறது.
2026 தேர்தல் வங்கதேசத்தின் ஜனநாயக பாதையில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமையவுள்ளது. குறிப்பாக தனிநபர் வருமானம் மற்றும் வேலையில்லா திண்டாட்டம் போன்ற பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியில், சிறுபான்மையினரின் பாதுகாப்பு என்பது ஒரு சர்வதேச விவகாரமாகவும் உருவெடுத்துள்ளது. பிப்ரவரி 12-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், பிஎம்ஜேபி (BMJP) எத்தனை இடங்களில் வெற்றி பெற்று சிறுபான்மையினரின் அதிகாரப்பூர்வ குரலாக பாராளுமன்றத்தில் ஒலிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
