வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமரும், அந்நாட்டின் முக்கிய அரசியல் சக்தியுமான பேகம் காலிதா ஜியாவின் மறைவு தெற்காசிய அரசியலில் ஒரு மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. நீண்டகாலமாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், 2025-ஆம் ஆண்டின் இறுதியில் காலமானார். வங்காளதேசத்தின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமைக்குரிய காலிதா ஜியாவின் மறைவு, அந்நாட்டில் ஒரு தேசிய துக்க அனுசரிப்பாக மாற்றப்பட்டுள்ளது.
அதே வேளையில், அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்க இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேரில் செல்வது என்பது ஒரு சாதாரண ராஜதந்திர நடவடிக்கையாக மட்டும் பார்க்கப்படாமல், இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் ஏற்பட்டுள்ள ஒரு முக்கிய மாற்றமாகவும், முதிர்ச்சியாகவும் பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் இந்த நடவடிக்கையை வங்காளதேசத்தில் உள்ள இந்தியாவுக்கு எதிரான சில அமைப்புகள், குறிப்பாக ‘இன்குலாப் மஞ்ச்’ போன்ற தீவிரவாத போக்குடைய குழுக்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. ஜெய்சங்கரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, அவர்கள் வங்காளதேசத்தில் உள்ள இந்தியர்களை வெளியேறுமாறு மிரட்டல் விடுத்துள்ளனர்.
பாகிஸ்தான் கூட தனது வெளியுறவு அமைச்சரை அனுப்பாமல், தனது பிரதிநிதியை மாற்றிக்கொண்ட சூழலில், இந்தியா தனது உயர்மட்ட அமைச்சரை அனுப்புவது என்பது வங்காளதேசத்தின் எதிர்கால அரசியலில் இந்தியா தனது பிடியை உறுதிப்படுத்த விரும்புவதை காட்டுகிறது. குறிப்பாக, முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ஒரு நிலையற்ற சூழலில் இருக்கும்போது, ஒரு பலமான அரசியல் கட்சியுடன் உறவை வளர்த்துக்கொள்வது இந்தியாவுக்கு அவசியமாகிறது.
தற்போதைய சூழலில், வங்காளதேசத்தில் அவாமி லீக் கட்சி ஓரங்கட்டப்பட்டுள்ள நிலையில், வரவிருக்கும் தேர்தலில் காலிதா ஜியாவின் கட்சியான பிஎன்பி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் போன்ற அமைப்பை விட, முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சியே நாட்டின் நிர்வாகத்திற்கு சிறந்தது என்பது இந்தியாவின் கணிப்பு.
காலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தற்போது கட்சியை வழிநடத்தி வரும் வேளையில், அவரது தாயாரின் மறைவுக்கு உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதிநிதி வந்து மரியாதை செலுத்துவது அவருக்கு ஒரு சர்வதேச அங்கீகாரத்தை தரும். இது பிஎன்பி மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி ஆகிய கட்சிகளுக்கு இடையே ஒரு பிளவை ஏற்படுத்தக்கூடும், ஏனெனில் ஜமாத் அமைப்பினர் இந்த வருகையை அரசியல் ரீதியாக எதிர்க்க வாய்ப்புள்ளது.
பொருளாதார ரீதியாகப் பார்த்தால், வங்காளதேசம் இந்தியாவுடன் மோதல் போக்கை கடைப்பிடிப்பது அந்த நாட்டுக்கே பெரும் இழப்பை ஏற்படுத்தும். குறிப்பாக, ஜவுளி துறையில் வங்காளதேசம் சந்தித்து வரும் சரிவுக்கு இந்தியாவே காரணம் என்ற ஒரு பொய் பிரச்சாரம் அங்கு முன்னெடுக்கப்படுகிறது. ஆனால், உண்மையில் இந்தியாவிடமிருந்து மூலப்பொருட்களை குறைந்த விலைக்கு வாங்குவதை நிறுத்திவிட்டு, மற்ற நாடுகளிடமிருந்து அதிக விலைக்கு வாங்குவதாலேயே வங்காளதேசத்தின் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. அங்கிருக்கும் அமைதி விரும்பும் பெரும்பான்மை மக்கள் இந்தியாவுடனான சுமூகமான உறவையே விரும்புகிறார்கள் என்பதை சமூக ஊடகங்களில் வரும் கருத்துகள் உறுதிப்படுத்துகின்றன.
ஜெய்சங்கரின் இந்த வருகை என்பது வெறும் இரங்கல் தெரிவிப்பதோடு முடிந்துவிடாது. இதன் பின்னால் எல்லையில் நிலவும் சவால்கள், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் மற்றும் 2026-இல் முடிவுக்கு வரும் ஃபராக்கா நீர் ஒப்பந்தம் போன்ற பல முக்கிய பிரச்சனைகள் குறித்து பேசுவதற்கான ஒரு வாயிலை இந்தியா திறக்க முயல்கிறது. ஒரு நாட்டின் முன்னாள் தலைவருக்கு மரியாதை செலுத்துவது என்பது அந்த நாட்டு மக்களுடனான உறவை வலுப்படுத்தும் ஒரு வழியாகும். ஷேக் ஹசீனாவுக்கு அடைக்கலம் கொடுத்த இந்தியா, இப்போது காலிதா ஜியாவிற்கும் உரிய மரியாதையை வழங்குவதன் மூலம், தான் எந்த ஒரு குறிப்பிட்ட கட்சிக்கும் சார்பான நாடு அல்ல என்பதையும், வங்காளதேசத்தின் இறையாண்மையை மதிப்பவன் என்பதையும் இந்தியா நிரூபித்துள்ளது.
இறுதியாக, 2026-ஆம் ஆண்டு தேர்தலை நோக்கி வங்காளதேசம் நகரும் வேளையில், இந்தியாவிற்கு எதிரான கோஷங்களை எழுப்பி வரும் தீவிரவாத அமைப்புகள் இந்த வருகையை ஒரு போராட்ட கருவியாக மாற்ற முயலலாம். இருப்பினும், தாரிக் ரஹ்மான் போன்ற தலைவர்கள் இந்தியாவின் இந்த நன்மதிப்பு செயலை ஏற்றுக்கொள்வார்களேயானால், அது இரு நாடுகளுக்கும் இடையே ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கும். 2025-ஆம் ஆண்டின் இறுதியில் எடுக்கப்பட்டுள்ள இந்த அதிரடி ராஜதந்திர முடிவு, 2026-ஆம் ஆண்டு தெற்காசிய அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
இந்தியா தனது பாதுகாப்பையும், நிலைத்தன்மையையும் உறுதிப்படுத்த இதுபோன்ற துணிச்சலான நடவடிக்கைகளைத் தொடரும் என எதிர்பார்க்கலாம்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
