தமிழக அரசியல் வரலாற்றில் மாணவர்களின் பங்கு அளப்பரியது. 1960-களில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டங்களின் போது, மாணவர் சக்தியை திரட்டியே திமுக தனது அரசியல் அஸ்திவாரத்தை வலுப்படுத்தியது. ‘படிக்கும் வயதில் எதற்கு அரசியல்?’ என்று கேட்டவர்களுக்கு மத்தியில், மாணவர்களை கொண்டு ஒரு மாபெரும் புரட்சியை அண்ணா நிகழ்த்திக்காட்டினார். அதன் உச்சகட்டமாக, 1967 பொதுத்தேர்தலில் காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவரும், ‘தென்னாட்டு காந்தி’ என்று அழைக்கப்பட்டவருமான காமராஜரை, பெ.சீனிவாசன் என்ற ஒரு கல்லூரி மாணவர் தோற்கடித்தார். அன்று மாணவர்களால் ஆட்சியை பிடித்த அதே திமுகவில், இன்று 70 வயதை தாண்டியவர்களே அதிகாரத்தின் உச்சியில் அமர்ந்துள்ளனர்.
அரசு பணியாக இருந்தாலும், தனியார் நிறுவனமாக இருந்தாலும் 58 முதல் 60 வயதாகிவிட்டால் கூறி ஓய்வுபெற செய்து வீட்டிற்கு அனுப்பிவிடுகிறோம். ஆனால், அரசியல்வாதிகள் மட்டும் தங்களது அந்திம காலம் வரை பதவியை கெட்டியாக பிடித்து கொள்கின்றனர். அனுபவம் என்பது அவசியம் என்றாலும், அது ஒரு கட்டத்தில் அதிகார மையத்தின் தேக்கநிலையாக மாறிவிடுகிறது. 70, 80 வயதை கடந்தவர்கள் முடிவெடுக்கும் இடத்தில் இருக்கும்போது, மாறிவரும் நவீன உலகின் தேவைகளையும், இளைஞர்களின் துடிப்பான எண்ணங்களையும் அவர்களால் முழுமையாக உள்வாங்க முடியாமல் போகிறது. அப்படியே இளைஞர்கள் பொறுப்புக்கு வந்தாலும் அவர்கள் அரசியல் வாரிசுகளாக உள்ளனர். பிறக்கும்போதே பணக்கார குடும்பத்தில் பிறந்த இவர்களுக்கு சாதாரண இளைஞனின் வலியோ, வேதனையோ கொஞ்சம் கூட தெரியாது.
கடந்த 20 ஆண்டுகளில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தங்களது வாரிசுகளை முன்னிறுத்துவதில் காட்டிய ஆர்வத்தை, சாமானிய வீட்டு இளைஞர்களை அரசியல்படுத்துவதில் காட்டவில்லை. ஒரு காலத்தில் மாணவர் அணிகள் மற்றும் இளைஞர் அணிகள் மூலமாக புதிய தலைவர்கள் உருவானார்கள். ஆனால் இன்று, அந்த அணிகள் வெறும் ‘கையசைக்கும் கூட்டமாக’ மட்டுமே மாற்றப்பட்டுள்ளன. இளைஞர்களுக்கு கட்சியில் கௌரவமான பதவிகளோ, சுதந்திரமாக முடிவெடுக்கும் அதிகாரமோ வழங்கப்படுவதில்லை. இதனால் ஏற்பட்ட விரக்திதான், இன்றைய தலைமுறையினரை புதிய அரசியல் சக்திகளை நோக்கி தள்ளியுள்ளது.
இளைஞர்கள் இல்லாத அரசியல் என்பது எந்தவொரு எதிர்காலமும் இல்லாத வெற்று பாதைக்கு சமம். தமிழகத்தின் மக்கள்தொகையில் பெரும்பான்மையாக இருக்கும் இளைஞர்களின் தேவைகளை பழைய தலைமுறை தலைவர்களால் தீர்க்க முடியவில்லை. வேலைவாய்ப்பின்மை, கல்வி சீர்திருத்தம், மற்றும் டிஜிட்டல் பொருளாதார சவால்கள் போன்றவற்றை எதிர்கொள்ள துடிப்பான ஒரு தலைமை தேவைப்படுகிறது. ஆனால், தங்களது பதவியை காப்பதிலேயே குறியாக இருக்கும் மூத்த தலைவர்கள், புதிய ரத்தம் பாய்வதற்கு தடையாக உள்ளனர். இந்த சூழலில்தான், விஜய்யின் தமிழக வெற்றி கழகம் மாணவர்களை நோக்கிய தனது பேஸ்மெண்ட் வேலையை தொடங்கி, அவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அரசியல் கட்சிகள் காலத்திற்கு ஏற்பத் தங்களை மாற்றிக் கொள்ளாவிட்டால், அவை வரலாற்றின் குப்பைத்தொட்டிக்கு செல்ல நேரிடும். இளைஞர்களுக்கு வழிவிடாத கட்சிகள் வரவிருக்கும் தேர்தலில் மண்ணை கவ்வும் என்பது நிதர்சனம். ஒரு இளைஞர் விழித்தெழும்போது, அவரை ‘தற்குறி’ என்று கிண்டல் செய்வது அல்லது அவருக்கு போதிய அனுபவம் இல்லை என்று முத்திரை குத்துவது, பழைய கட்சிகளின் வீழ்ச்சியின் தொடக்கமாகும். அஸ்திவாரம் மாணவர்களிடமும், இளைஞர்களிடமும் அழுத்தமாக போடப்படும்போது, அது எவ்வளவு பெரிய கோட்டையையும் தகர்க்கும் வல்லமை கொண்டது.
இனிவரும் காலம் இளைஞர்களுக்கு மட்டும்தான் என்பதை உணர்ந்து, மூத்த தலைவர்கள் வழிவிட வேண்டும். அரசியலில் ஓய்வுபெறும் வயதை ஒரு விவாதமாக மாற்ற வேண்டிய நேரம் இது. ஒரு புரட்சி என்பது எப்போதுமே தலைமையிடமிருந்து மட்டும் தொடங்குவதில்லை; அது புறக்கணிக்கப்பட்ட இளைஞர்களின் குமுறலில் இருந்தே தொடங்குகிறது. அந்த புரட்சி தமிழக அரசியலில் ஒரு புதிய விடியலை ஏற்படுத்தும். தங்களை மாற்றி கொள்ளாத பழைய இயக்கங்கள், இந்த இளைஞர் சுனாமியில் அடித்து செல்லப்படுவது உறுதி.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
