2026 சட்டமன்ற தேர்தல் களம் நெருங்க நெருங்க, தமிழக அரசியல் களம் இதுவரை கண்டிராத ஒரு புதிய புதிருக்குள் நுழைந்துள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் களமிறங்கியிருப்பது, வழக்கமாக சொல்லப்படும் ‘எதிர்க்கட்சி வாக்குகள் சிதறும்’ என்ற கணக்கை முற்றிலுமாக மாற்றியமைத்துள்ளது. அரசியல் விமர்சகர்கள் பொதுவாக ஒரு புதிய கட்சி வரும்போது, அது ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகளை பிரித்து, மீண்டும் ஆளுங்கட்சியே வெற்றி பெற வழிவகுக்கும் என்று கணிப்பார்கள். ஆனால், விஜய்யின் வருகை இந்த மரபுவழி சிந்தனையை உடைத்துவிட்டது. விஜய் ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகளை மட்டும் பிரிக்கவில்லை, மாறாக திமுகவின் உறுதியான ஆதரவு வாக்கு வங்கியில் ஒரு பெரிய ஓட்டையை ஏற்படுத்தி வருகிறார் என்பதுதான் கள எதார்த்தமாக பார்க்கப்படுகிறது.
திமுக தலைமையிலான கூட்டணி மிகவும் பலமானதாக தோன்றினாலும், அக்கூட்டணியில் இருக்கும் இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் கவனம் இப்போது விஜய்யின் பக்கம் திரும்பியுள்ளது. கடந்த தேர்தல்களில் திமுகவின் வெற்றிக்கு மிக முக்கிய காரணியாக இருந்த நடுத்தர வர்க்கம் மற்றும் இளைய தலைமுறையினரிடையே விஜய்க்கு இருக்கும் அபரிமிதமான செல்வாக்கு, திமுகவின் ஆதரவு வாக்குகளை பிரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால், ‘வாக்குகள் பிரிந்தால் திமுகவுக்கு சாதகம்’ என்ற பழைய ஃபார்முலா இந்த முறை எடுபடாமல் போகலாம். திமுகவின் ஆதரவு வாக்குகளே பிரியும்போது, அது அக்கூட்டணியின் ஒட்டுமொத்த வெற்றி வாய்ப்பை நேரடியாக பாதிக்கும் அபாயம் உள்ளதாக கருத்துக்கணிப்பு வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
விஜய் தனது மாநாட்டில் முன்வைத்த கொள்கைகளும், அவர் கையாண்ட அரசியல் அணுகுமுறையும் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு துருவ அரசியலுக்கும் பொதுவான ஒரு மாற்றாக தன்னை முன்னிறுத்துகிறது. அவர் எல்லா அரசியல் கட்சிகளின் வாக்கு வங்கிகளையும் குறிவைக்கிறார். குறிப்பாக, திராவிட அரசியலின் மீது பற்று கொண்ட அதே வேளையில், தற்போதைய அதிகார மையங்களின் மீது அதிருப்தியில் இருக்கும் வாக்காளர்கள் விஜய்யை ஒரு புகலிடமாக கருதுகிறார்கள். இது திமுகவின் ஓட்டுகளை மட்டும் உடைக்கவில்லை, அதிமுகவின் கிராமப்புற வாக்கு வங்கிகளிலும், பாமக, விசிக போன்ற கட்சிகளின் இளைஞர் அணிகளிலும் ஒரு மிகப்பெரிய சலனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தேர்தலில் ஏதோ ஒன்று வித்தியாசமாக நடக்கப்போகிறது என்ற உணர்வு மக்களிடையே பரவலாக எழுந்துள்ளது. அது என்ன என்பதை இப்போதே யாராலும் துல்லியமாக ஊகிக்க முடியவில்லை. கடந்த காலங்களில் ஒரு புதிய கட்சி வரும்போது அது ஏதோ ஒரு தரப்புக்கு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால், விஜய் ஒரு ‘டார்க் ஹார்ஸ்’ போல அனைத்து தரப்பு வாக்குகளையும் சமமாக பிரிப்பது போன்ற தோற்றம் உருவாகியுள்ளது. இதனால், வழக்கமான கூட்டணி கணக்குகள், தொகுதி பங்கீடுகள் மற்றும் சாதிய வாக்கு வங்கிகள் ஆகியவை இந்த முறை செயலிழக்கக்கூடும். மக்களின் மௌனம் ஒரு மிகப்பெரிய அரசியல் சுனாமியை தன்னுள் ஒளித்து வைத்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
கருத்துக்கணிப்பு வல்லுநர்களின் தகவல்படி, இந்த தேர்தல் ஒரு ‘திரிசங்கு’ நிலையை நோக்கி செல்லவும் வாய்ப்புள்ளது. எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழல் ஏற்பட்டால், அது தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கும். விஜய் பிரிக்கும் வாக்குகள் ஒருவேளை திமுகவின் வெற்றியைத் தடுத்து, அதே சமயம் அதிமுகவையும் ஆட்சிக் கட்டிலில் அமர விடாமல் செய்தால், அது ஒரு மிகப்பெரிய அதிகார மாற்றத்திற்கு வித்திடும். இந்த சூழல்தான் தற்போதைய அரசியல் தலைவர்களுக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை தெரிந்த கணக்குகளை வைத்து 2026 தேர்தலை மதிப்பிட முடியாது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.
மொத்தத்தில். விஜய்யால் திமுகவின் வாக்குகள் பிரிகிறதா அல்லது அதிமுகவின் வாக்குகள் பிரிகிறதா என்பதை தாண்டி, ஒட்டுமொத்த தமிழக மக்களும் ஒரு ‘புதிய தொடக்கத்தை’ விரும்புகிறார்களா என்பதுதான் இங்கே கேள்வி. மக்களின் மனவோட்டம் என்பது மேலோட்டமாக தெரிவதை விட மிகவும் ஆழமானது. தேர்தல் முடிவுகள் வரும்போதுதான் அந்த மர்மமான ‘வித்தியாசமான மாற்றம்’ என்ன என்பது உலகுக்குத் தெரியும். அதுவரை தமிழக அரசியல் களம் ஒரு கணிக்க முடியாத புதிராகவே நீடிக்கும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
