ஆன்லைன் வழியாக நடைபெறும் குற்றங்களை கண்டறியவும், தடுக்கவும் சி.பி.சி.ஐ.டி சார்பாக ‘யுக்தி 2.0’ என்ற தேசிய அளவிலான மாபெரும் சைபர் ஹேக்கத்தான் போட்டி நடத்தப்பட்டது.
பெருகி வரும் சைபர் குற்றங்கள் மட்டுமின்றி, தற்போது சாதாரண குற்றங்களில் கூட குற்றவாளிகள் இணையத்தை பயன்படுத்தித் தங்கள் அடையாளங்களை மறைத்து தப்பிக்கின்றனர். எனவே, வழக்குகளை விசாரிப்பதிலும், டார்க் வெப் வழி நடைபெறும் குற்றங்களை தடுப்பதிலும் சைபர் வல்லுநர்களின் உதவி இன்றியமையாததாக உள்ளது.
புலன் விசாரணையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காணும் நோக்கில், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறையானது ‘Selfmade Ninja Academy’ மற்றும் சவீதா பொறியியல் கல்லூரியுடன் இணைந்து 80 வகையான கடினமான சிக்கல்களை உள்ளடக்கிய இந்த ஹேக்கத்தானை அறிவித்தது. இதில் இந்தியா முழுவதிலும் இருந்து 2,400 பேர் பதிவு செய்து, டிசம்பர் 13 மற்றும் 14-ஆம் தேதிகளில் நடைபெற்ற முதற்கட்ட போட்டிகளில் பங்கேற்றனர்.
அவர்களில் தேர்வு செய்யப்பட்ட முதல் 50 அணிகளை சேர்ந்த 178 சைபர் வல்லுநர்கள், டிசம்பர் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் சவீதா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற இறுதி போட்டியில் கலந்து கொண்டனர். தற்கால சைபர் குற்றங்களை அடிப்படையாக கொண்ட 35 சிக்கல்களுக்கு தீர்வு கண்ட மூன்று அணிகளுக்கு முறையே ரூ. 75,000, ரூ. 50,000 மற்றும் ரூ. 25,000 ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த ஹேக்கத்தான் மூலம் கண்டறியப்பட்ட முடிவுகள் தமிழ்நாடு காவல்துறையின் சிக்கலான வழக்குகளை தீர்க்கப் பெரிதும் உதவும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.

