தமிழக அரசியலில் 2026 சட்டமன்ற தேர்தல் என்பது வெறும் ஆட்சி மாற்றத்திற்கான களமாக மட்டுமல்லாமல், திராவிட கட்சிகளின் அரை நூற்றாண்டு கால ஆதிக்கத்தை சோதிக்கும் ஒரு பரீட்சையாகவும் மாறியுள்ளது. நடிகர் விஜய் அவர்களின் தமிழக வெற்றி கழகம் எடுத்துள்ள திமுக எதிர்ப்பு என்ற நேரடி அரசியல் நிலைப்பாடு, ஆளுங்கட்சியையும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவையும் ஒருசேர யோசிக்க வைத்துள்ளது. நாம் இருவரும் எதிரிகளாக இருக்கலாம், ஆனால் நமக்கு பொதுவான ஒரு மூன்றாவது எதிரி வளர்ந்துவிட கூடாது என்ற ரகசிய புரிதல் திராவிட கட்சிகளிடையே நிலவுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இதுவே விஜய்யை நோக்கிய இருமுனை தாக்குதல்களுக்கு முக்கிய காரணமாக அமைகிறது.
விஜய்யின் அரசியல் வருகையைத் தொடக்கம் முதலே திமுக மிக கடுமையாக விமர்சித்து வருகிறது. குறிப்பாக, விஜய்யின் மாநாடுகள் மற்றும் உரைகளுக்கு பிறகு, “சினிமா கவர்ச்சி வாக்குகளாக மாறாது” என்றும், “திராவிட மண்ணில் புதியவர்களுக்கு இடமில்லை” என்றும் ஆளுங்கட்சி அமைச்சர்கள் வரிந்து கட்டி பதிலடி கொடுத்து வருகின்றனர். அதே சமயம், அதிமுகவின் வாக்கு வங்கியில் விஜய் ஓட்டை போடுவார் என்ற அச்சம் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் உண்டு. இதனால், விஜய்யை ஒரு அரசியல் சக்தியாக அங்கீகரிக்காமல் இருப்பதிலேயே இரு திராவிட கட்சிகளும் குறியாக இருப்பதாக தெரிகிறது.
அதிமுக கூட்டணியில் விஜய் இணைவாரா என்ற கேள்விதான் தற்போது தமிழக அரசியலின் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. ஒருவேளை அதிமுக மற்றும் தவெக ஒன்றிணைந்தால், அது திமுகவிற்கு மிகப்பெரிய சவாலாக அமையும். ஆனால், முதலமைச்சர் பதவி என்ற விஜய்யின் பிடிவாதமான கோரிக்கை அதிமுகவிற்கு நெருக்கடியை தந்துள்ளது. அதிமுகவுடன் கூட்டணி அமையாமல் விஜய் தனித்து போட்டியிட்டால், அது எதிர்க்கட்சி வாக்குகளை பிரித்து இறுதியில் திமுகவிற்கே சாதகமாக முடியும் என்ற கணிப்புகளும் உள்ளன.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வருவதாக கூறி நீண்ட காலம் இழுபறிக்கு பின் பின்வாங்கியதற்கு, திராவிட கட்சிகளின் கட்டமைக்கப்பட்ட எதிர்ப்பு மற்றும் தனிப்பட்ட ரீதியிலான விமர்சனங்களே காரணம் என்று கூறப்பட்டது. ரஜினிக்கு ஏற்பட்ட அதே நெருக்கடி இப்போது விஜய்க்கும் கொடுக்கப்படுவதாக ஒரு பிம்பம் உருவாகியுள்ளது. “அரசியல் என்பது தகிக்கும் நெருப்பு, அதில் சினிமா நட்சத்திரங்கள் கருகிவிடுவார்கள்” என்ற மறைமுக எச்சரிக்கைகள் விஜய்யை நோக்கி வீசப்படுகின்றன. ரஜினி சந்தித்த அந்த பயம் விஜய்யையும் தொற்றிகொள்ளுமா அல்லது அவர் அதை துணிச்சலாக முறியடிப்பாரா என்பதே தற்போதைய எதிர்பார்ப்பு.
விஜய்யை பொறுத்தவரை, அவர் ரஜினியை போல பின்வாங்கப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார். அவரது ஒவ்வொரு நகர்வும், குறிப்பாக “தீய சக்தி – தூய சக்தி” என அவர் முன்வைக்கும் விமர்சனங்கள், அவர் களத்தில் நின்று போராட தயாராகிவிட்டதையே காட்டுகின்றன. திராவிட கட்சிகளின் விமர்சனங்களை தனது வளர்ச்சிக்கு ஏணியாக மாற்றிக்கொள்ளும் வித்தையை விஜய் கையில் எடுத்துள்ளார்.
முடிவாக, 2026 தேர்தல் என்பது விஜய்யின் தைரியத்திற்கும், திராவிட கட்சிகளின் அனுபவத்திற்கும் இடையிலான ஒரு மல்யுத்தமாக இருக்கப்போகிறது. திராவிட கட்சிகள் அவரை ஓரங்கட்ட நினைத்தாலும், இளைஞர்கள் மற்றும் நடுநிலை வாக்காளர்களின் ஆதரவு விஜய்க்கு சாதகமாகத் திரும்பினால், தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கும்.
ரஜினி போன்றவர்கள் ஒதுங்கியது ஒரு பாடம் என்றால், விஜய் களத்தில் நிற்பது ஒரு வரலாறு. அவர் இந்த சவால்களைத் தைரியமாக எதிர்கொண்டு “கிங்” ஆக போகிறாரா அல்லது கூட்டணி கணக்குகளால் “கிங் மேக்கராக” மாற போகிறாரா என்பதை காலம் தீர்மானிக்கும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
