ஈஷா ‘மண் காப்போம்’ இயக்கம் சார்பில் ஊட்டியில் முதல்முறையாக மலைக் காய்கறிகள் சாகுபடி பயிற்சி!

ஊட்டியில் ஹாப்பி ஃபாமிலி ஃபார்ம் ஃபாரஸ்ட் கேட் பகுதியில் முதல்முறையாக ஈஷா “மண் காப்போம்” இயக்கம் சார்பில், இன்று (20/12/2025), மலைக் காய்கறிகள் சாகுபடி பயிற்சி நடைபெற்றது. இந்தப் பயிற்சியில் முன்னோடி விவசாயிகளான தன்விஷ்,…

isha

ஊட்டியில் ஹாப்பி ஃபாமிலி ஃபார்ம் ஃபாரஸ்ட் கேட் பகுதியில் முதல்முறையாக ஈஷா “மண் காப்போம்” இயக்கம் சார்பில், இன்று (20/12/2025), மலைக் காய்கறிகள் சாகுபடி பயிற்சி நடைபெற்றது.

இந்தப் பயிற்சியில் முன்னோடி விவசாயிகளான தன்விஷ், சரவணன், கோபாலகிருஷ்ணன், ரமேஷ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு, மலைக் காய்கறிகளான கேரட், பீட்ரூட், காலிஃப்ளவர், பிரக்கோலி, பீன்ஸ், அவரை உள்ளிட்ட பயிர்களின் நிலம் தயாரித்தல் முதல் சாகுபடி, அறுவடை மற்றும் சந்தைப்படுத்துதல் வரை உள்ள பல்வேறு தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு விளக்கினர்.

ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களான சேகர் மற்றும் தில்லைஅரசன் ஆகியோர் விவசாயிகளை ஒருங்கிணைத்து, பயிற்சியை சிறப்பாக நடத்தினர்.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்தப் பயிற்சியில், மலைப்பகுதிகளில் விவசாயம் மேற்கொள்வோர் தங்கள் பயிர்களை பூச்சிகளிலிருந்து பாதுகாப்பது குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. பூச்சிகளை கட்டுப்படுத்த அதிக செலவில் ரசாயன மருந்துகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, ஆமணக்கு, சூரியகாந்தி, லூபின் போன்ற பூச்சி தடுப்பு பயிர்களை வரப்போரங்களில் உயிர்வேலியாக அமைத்தால் பூச்சித் தாக்குதலை இயற்கையாகக் கட்டுப்படுத்த முடியும் என்பதையும் விவசாயிகளுக்கு விளக்கினர்.

மேலும், வரப்புகளில் ராகி, தினை, லெமன் கிராஸ் போன்ற பயிர்களை வளர்த்து கூடுதல் வருமானம் ஈட்டும் வழிமுறைகள், சர்க்கரைப் பாகு மற்றும் தேங்காய் உருண்டையை எலி பொறிகளில் பயன்படுத்தி எலித் தொல்லையிலிருந்து பயிர்களை பாதுகாப்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. பல அடுக்குப் பயிர் சாகுபடி மூலம் அதிக வருமானம் பெறும் முறைகளும் விளக்கப்பட்டன.

ஊட்டியில் உள்ள தனது ஒரு ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையில் மலைக் காய்கறிகளை சாகுபடி செய்து வெற்றி பெற்ற விவசாயி தன்விஷ், அவரை, உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், களகோஸ், சோளம் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட பயிர்களை சுழற்சி முறையில் வளர்க்கும் தனது பல அடுக்கு விவசாய அனுபவங்களைப் பகிர்ந்தார். பூச்சி மேலாண்மை, இயற்கை உர மேலாண்மை, அறுவடை மற்றும் சந்தைப்படுத்துதல் வரை உள்ள நடைமுறை அறிவையும் அவர் விளக்கினார்.

மேலும், அருகிலுள்ள நிலங்களில் பயன்படுத்தப்படும் ரசாயனப் பொருட்கள் தங்கள் தோட்டத்தை பாதிக்காமல் இருக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்தப் பயிற்சி முகாமில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.