தமிழக அரசியல் வரலாற்றில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் அசைக்க முடியாத சக்திகளாக திகழ்ந்ததற்கு காரணம், அவர்கள் தங்களது அரசியல் இலக்கை மிக தெளிவாக ‘திமுக எதிர்ப்பு’ என்பதில் மட்டுமே வைத்திருந்தனர். 1972-ல் அதிமுக தொடங்கப்பட்ட போதே, திமுகவை ‘தீய சக்தி’ என்று எம்.ஜி.ஆர் அடையாளப்படுத்தினார். அதே பாணியை பின்பற்றி ஜெயலலிதாவும் தனது வாழ்நாள் முழுவதும் திமுகவை எதிர்ப்பதிலேயே குறியாக இருந்தார். இந்த தெளிவான ஒற்றை இலக்குதான் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு மாற்றாக ஒரு வலுவான வாக்கு வங்கியை அவர்களுக்கு பெற்றுத் தந்தது. ‘திமுக வேண்டாம்’ என்று நினைக்கும் வாக்காளர்களுக்கு அவர்கள் மட்டுமே ஒரே நம்பிக்கையாக தெரிந்தனர்.
மறுபுறம், வைகோவின் மதிமுக, விஜயகாந்தின் தேமுதிக மற்றும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் தொடக்க காலத்தில் ஓரளவு வரவேற்பை பெற்றாலும், இறுதியில் தோல்வியை சந்தித்ததற்கு ஒரு முக்கியக் காரணம் உண்டு. இவர்கள் திமுக, அதிமுக ஆகிய இரு திராவிட கட்சிகளையும் ஒரே நேரத்தில் ‘ஊழல் கட்சிகள்’ என்று எதிர்த்தனர். இதனால், ஏற்கனவே பிரிந்திருந்த திராவிட வாக்கு வங்கியில் இவர்களால் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியாமல் போனது. இருமுனை தாக்குதலால் இவர்களது பலம் சிதறியதுடன், வாக்காளர்களும் ஒரு தெளிவான முடிவை எடுக்க முடியாமல் குழம்பினர். இதனால் தான் வேறு வழியின்றி வைகோ, விஜயகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் மீண்டும் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைத்து தங்கள் இருப்பை தக்க வைத்து கொண்டனர்.
தற்போது தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கியுள்ள விஜய், அனுபவம் வாய்ந்த எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் பாணியையே கையில் எடுத்துள்ளார். சமீபத்தில் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், திமுகவை ‘தீய சக்தி’ என்று மீண்டும் முழங்கியதன் மூலம், தான் யாருக்கு மாற்றாக களமிறங்கியுள்ளேன் என்பதை அவர் உரக்க சொல்லியிருக்கிறார். அதிமுகவை பற்றியோ அல்லது எடப்பாடி பழனிசாமியைப் பற்றியோ அவர் ஒரு வார்த்தை கூட விமர்சிக்காமல் கடந்து செல்வது, ஒரு புத்திசாலித்தனமான அரசியல் நகர்வாகும். அதிமுகவின் அதிருப்தி வாக்குகளையும், திமுக எதிர்ப்பு வாக்குகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வருவதே விஜய்யின் தற்போதைய நோக்கமாகத் தெரிகிறது.
அதிமுக தற்போது பிளவுபட்டு பலவீனமாக இருக்கும் சூழலில், அவர்களை எதிர்த்து பேசுவது விஜய்க்கு எந்த லாபத்தையும் தராது. மாறாக, அதிமுகவை விமர்சிக்காமல் விடுவதன் மூலம், அக்கட்சியின் தொண்டர்களிடையே ஒரு மென்மையான போக்கை விஜய் உருவாக்குகிறார். இது தேர்தல் நேரத்தில் ‘திமுகவை வீழ்த்த விஜய் தான் சரியான ஆள்’ என்ற எண்ணத்தை அதிமுக தொண்டர்கள் மத்தியில் விதைக்கும். களத்தில் இல்லாத பாஜகவையோ அல்லது சிதறி கிடக்கும் அதிமுகவையோ எதிர்ப்பதில் நேரத்தை வீணடிக்காமல், ஆளுங்கட்சியான திமுகவை மட்டுமே குறிவைப்பது விஜய்யின் ‘சரியான ரூட்’ என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க, விஜய்யின் இந்த திமுக எதிர்ப்பு இன்னும் ஆக்ரோஷமான வடிவத்தை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆளுங்கட்சியின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள், குடும்ப அரசியல் மற்றும் நிர்வாக குறைபாடுகளை அவர் தனது மேடை பேச்சுகளில் பிரதானமாக வைப்பார். வரும் நாட்களில் திமுகவின் மீதான விமர்சனங்களின் தீவிரத்தை கூட்டப்போகிறார் என்பதன் அறிகுறி இப்போதே தெரிய தொடங்கிவிட்டது. இந்த தீவிரத்தன்மை அதிகரித்தால் மட்டுமே, பொதுமக்களிடையே ஒரு வலுவான ஆதரவு அலையை விஜய்யால் உருவாக்க முடியும்.
இறுதியாக, விஜய்யின் வெற்றி என்பது அவர் எவ்வளவு தூரம் திமுகவை எதிர்க்கிறார் என்பதில் மட்டுமல்ல, அதிமுகவின் இடத்தை அவர் எவ்வளவு வேகமாக பிடிக்கிறார் என்பதிலும் அடங்கியுள்ளது. செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர்களை தனது பக்கம் இழுப்பதன் மூலம், அவர் தனது கட்சிக்கு ஒரு அரசியல் அங்கீகாரத்தை தேடி வருகிறார். திமுக எதிர்ப்பை தாரக மந்திரமாக கொண்டு அவர் எடுக்கும் இந்த முடிவுகள், தமிழக அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தை நிகழ்த்துமா அல்லது மற்ற நடிகர்களை போல அவரும் ஒரு குறுகிய கால பயணத்தோடு நின்றுவிடுவாரா என்பது போக போகத்தான் தெரியும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
