நான் பேசியது சினிமா வசனம் என்றால் முதல்வர் பேசியது சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்ததா? ‘என் கேரக்டரையே புரிஞ்சிக்கிட மாட்டீங்கீறிங்க’ வசனத்தை கிண்டல் செய்த விஜய்.. மக்கள் தங்கள் கேரக்டர் என்ன என்பதை தேர்தலில் உங்களுக்கு புரிய வைப்பார்கள்.. ஈரோட்டில் ஆவேசமாக பேசிய விஜய்..!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ஈரோடு மாநாட்டில் ஆவேசமாக பேசிய கருத்துக்களில் சில இதோ: தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விமர்சனங்களுக்கு பதிலளித்த விஜய், “பெண்கள் பாதுகாப்பு சரியில்லை என்று சொன்னால், இந்தியாவிலேயே…

vijay erode

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ஈரோடு மாநாட்டில் ஆவேசமாக பேசிய கருத்துக்களில் சில இதோ:

தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விமர்சனங்களுக்கு பதிலளித்த விஜய், “பெண்கள் பாதுகாப்பு சரியில்லை என்று சொன்னால், இந்தியாவிலேயே பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான் என்கிறார்கள். மக்களே நீங்கள் சொல்லுங்கள், பெண்களுக்கு இங்கு பாதுகாப்பு இருக்கிறதா?” என கூட்டத்தை பார்த்துக் கேட்டார். அதற்கு திரண்டிருந்த மக்கள் அனைவரும் “இல்லை” என ஒருசேரப் பதிலளித்தனர். இதுதான் நிஜமான நிலவரம் என்று குறிப்பிட்ட அவர், நமது ஆட்சியில் சட்டம்-ஒழுங்கில் சமரசம் இருக்காது என்றும், தைரியமாக இருங்கள், இன்னும் கொஞ்ச நாட்களில் நமது ஆட்சி வந்துவிடும் என்றும் உறுதி அளித்தார்.

மக்களுக்கு நல்ல விஷயங்கள் செய்யப்போகிறோம் என்று சொன்னால் அதை கேலியும் கிண்டலும் செய்கிறார்கள் என வருத்தப்பட்ட விஜய், “புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மேடம் ஏன் திமுகவை ஒரு தீய சக்தி என்று சொன்னார் என்பது இப்போதுதான் எனக்கு புரிகிறது. அவர்கள் வழியில் நானும் சொல்கிறேன், திமுக ஒரு தீய சக்தி!” என மூன்று முறை ஆவேசமாக முழங்கினார். அதேவேளையில், “டிவிகே ஒரு தூய சக்தி” என்றும், மக்கள் விரோத திமுக அரசை வீழ்த்த மக்கள் சக்தியாக திரண்டுள்ள நம்மால் மட்டுமே முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர்கள் தங்களோடு இணைந்திருப்பது கட்சிக்கு பெரிய பலம் என்று குறிப்பிட்ட விஜய், அவரை போன்ற இன்னும் பல தலைவர்கள் இணையவிருப்பதாகவும், அவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படும் என்றும் கூறினார்.

மேலும், முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் தனது கேரக்டரை புரிந்துகொள்ளவில்லை என பேசியதைக் கிண்டல் செய்த விஜய், “நான் பேசினால் அது சினிமா டயலாக் என்கிறார்கள். நீங்கள் பேசியது மட்டும் சினிமா டயலாக் இல்லையா? நீங்கள் பேசியது சிலப்பதிகாரத்தில் வரும் வசனமா? என்றும் கிண்டல் செய்தார்.

இறுதியாக, “மத்தியில் ஆட்சி செய்பவர்கள், மாநிலத்தில் ஆட்சி செய்பவர்கள் முதலில் எனது கேரக்டரை புரிந்துகொள்ள வேண்டும். எனது கேரக்டர் என்பது நமது மக்களின் கேரக்டர். 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களின் கேரக்டர் வேற மாதிரி இருக்கும் என்பதை புரிந்துகொள்ளுங்கள்” என எச்சரித்தார்.

“வெற்றி நிச்சயம், மக்கள் உங்களைப் புரிய வைப்பார்கள்” என்று நம்பிக்கையூட்டிய விஜய், தனது உரையை முடிக்கும் முன், “நண்பா, நம்பிக்கையே மிகவும் முக்கியம். எனக்கு எல்லாவற்றையும் விட நீங்கள் பாதுகாப்பாக வீடு சென்று சேருவதுதான் முக்கியம்” எனக் கூறி, தொண்டர்களுடன் ஒரு பிரம்மாண்ட செல்ஃபி எடுத்துக்கொண்டார்.