அதிமுக, தவெகவை தாக்காமல் பாஜக சரமாறியாக தாக்கும் திமுக.. பாஜக, அதிமுகவை தாக்காமல் திமுகவை தொடர்ந்து விமர்சனம் செய்யும் தவெக.. இரண்டிலும் இருக்கிறது ஒரு அரசியல் கணக்கு.. சில இடங்களில் முதல் இடம்.. பல இடங்களில் இரண்டாமிடம்.. சமீபத்திய சர்வேயில் கிடைத்த அதிர்ச்சி தகவல்..!

தமிழக அரசியல் களம் தற்போது திராவிட முன்னேற்றக் கழகம் , அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் புதியதாக களமிறங்கியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய மூன்று பிரதான கட்சிகளின் நகர்வுகளால்…

vijay eps stalin

தமிழக அரசியல் களம் தற்போது திராவிட முன்னேற்றக் கழகம் , அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் புதியதாக களமிறங்கியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய மூன்று பிரதான கட்சிகளின் நகர்வுகளால் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக, எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு, தவெக பல தொகுதிகளில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி வருவதாக சில கள ஆய்வுகள் தெரிவிப்பதாக அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

சில இடங்களில் முதல் இடத்திற்கே வரும் வாய்ப்புகள் இருப்பதாகவும் கருத்துக்கணிப்புகள் வருவதால், திமுக மற்றும் தவெக-வின் போட்டி தீவிரமடைந்து வருகிறது. இந்த சூழலில், திமுக தமது வாக்கு வங்கியை பாதுகாக்கவும், தவெக அதிமுகவின் அடித்தளத்தை அறுவடை செய்யவும் திட்டமிட்டு செயல்படுகின்றன.

தவெகவின் எழுச்சியை கண்டு அதிர்ச்சி அடையும் திமுக, விஜய்க்கு சென்றுவிடக்கூடிய பாஜக எதிர்ப்பு வாக்குகளை மீண்டும் தங்கள் பக்கம் ஈர்க்கும் வியூகத்தை வகுத்து வருகிறது. திராவிட சித்தாந்தம், பெரியாரிய அரசியல் மற்றும் சிறுபான்மையினர் வாக்குகள் சிதறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, திமுக அஇஅதிமுக-வை தாக்குவதை விட, பாஜக-வை கடுமையாக தாக்கி பேசுகிறது. இதற்கு மாறாக, தவெக தனது பிரதான இலக்காக திமுக-வையே வைத்து அதிகமாக தாக்கிப் பேசுகிறது. இதன் நோக்கம், அதிமுக-வின் வாக்கு வங்கியை கணிசமாக அறுவடை செய்து, அவர்களை வீழ்த்துவதற்குத் தாங்களே சரியான மாற்று சக்தி என்ற மனநிலையை நடுநிலையாளர்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் மத்தியில் உருவாக்குவதாகும்.

விஜய், தான் ஒருபோதும் அதிமுக-வுடன் கூட்டணி வைக்க மாட்டார் என்பதில் தெளிவாக இருப்பதாக விமர்சகர்கள் அடித்து கூறுகின்றனர். ஊடகங்களில் வரும் கூட்டணி வதந்திகள், அதிமுகவால் பரப்பப்படும் யூகங்களே என்றும், தவெக உடனடியாக அத்தகைய செய்திகளை மறுக்க தயங்குவது, அதிமுக-வின் அடிப்படை வாக்குகளை தன்வசம் ஈர்க்கும் நோக்கத்துடனேயேஇருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. அடிப்படை அதிமுக தொண்டர்கள் எப்போதும் சினிமா பின்னணியை ஆதரிக்கும் மனநிலையில் இருப்பதால், அவர்கள் எளிதில் தவெக பக்கம் திரும்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. விஜய்யின் நோக்கம் திமுக-வை வீழ்த்துவதாக இருந்தாலும், அந்த இடத்தை பிடித்து முதல்வராவதுதான் அவரது இலக்காக இருக்குமே தவிர, அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர துணை நிற்பது அல்ல என்றும் தெளிவாக உள்ளது.

மறுபுறம், திமுக இளைஞரணி சார்பில் திருவண்ணாமலையில் நடத்தப்பட்ட வடக்கு மண்டல மாநாடு, விஜய் கட்சிக்கு இளைஞர்களின் ஆதரவு செல்கிறது என்ற பரவலான விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைந்தது. தங்களுக்கு பக்கமும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இளைஞர்கள் திரண்டுள்ளனர் என்பதை காட்டுவதே இந்த மண்டல மாநாட்டின் முக்கியச் செய்தியாகும். மேலும், இந்த மாநாடுகள் மூலம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினே அடுத்த தலைவர் என்பதை உறுதிப்படுத்துவதிலும் திமுக உறுதியாக உள்ளது. கட்சியின் சீனியர்கள் ஏற்கனவே ஏற்றுக்கொண்டுவிட்ட நிலையில், இப்போது மக்கள் மத்தியிலும் இதை நிலைநிறுத்துவதே இதன் நோக்கம். வாரிசு அரசியல் குறித்த விமர்சனங்கள் இருந்தாலும், கோஷ்டி பூசல்களை தவிர்க்க உதயநிதி ஒருமித்த தேர்வாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார் என்று கட்சிக்குள் நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது.

விஜய் இப்போது அரசியலில் நுழைந்திருந்தாலும், அவர் எவ்வளவு வாக்கு வங்கியை பெறுவார், ஒரு ஸ்பாய்லராக மட்டும் இருப்பாரா அல்லது சில தொகுதிகளிலாவது வெற்றி பெறுவாரா, தொடர்ந்து அரசியலில் நீடிப்பாரா என்பது இன்னும் நிச்சயமற்றதாகவே உள்ளது. அவர் இன்னும் கேரவன் மற்றும் பவுன்சர்களுடன் மட்டுமே பொதுவெளியில் வருவதால், அவரது உண்மையான அரசியல் ஆளுமை, மெச்சூரிட்டி மற்றும் தனிப்பட்ட குணாதிசயங்கள் குறித்து மக்களுக்கு தெரியவில்லை. மாறாக, உதயநிதி ஸ்டாலின் தனது முந்தைய பிம்பங்களை உடைத்து, தீவிர அரசியலில் ஈடுபட்டு, அதிகார மட்டத்திலும் சுறுசுறுப்புடன், முதிர்ச்சியுடன் செயல்படுவதாக அதிகாரிகள் மட்டத்திலேயே தகவல்கள் வெளிவந்துள்ளன.

தவெக இன்னும் ரசிகர் கூட்டத்திலிருந்து தொண்டர் கூட்டமாக முழுமையாக மாறவில்லை என்றும், இதுவே கட்சியின் கட்டமைப்பில் உள்ள பலவீனம் என்றும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். விஜய் எல்லா வீடுகளிலும் பிரபலமானவர் என்றாலும், அவரது வேட்பாளர்கள் தொகுதி விஐபி-களை எதிர்த்து வெற்றி பெறுவார்களா என்பது கேள்விக்குறியே. வேட்பாளர்களின் சமூக பின்னணி, செல்வாக்கு, மற்றும் பொருளாதாரம் போன்ற பல காரணங்கள் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும். திமுகவிடம் இருக்கும் வலுவான பூத் கமிட்டி கட்டமைப்பு மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட தொண்டர்கள் பலம் தவெக-விடம் இல்லை. எனவே, தவெக-விற்கு தொண்டர்களுக்கு பயிற்சி கொடுத்து, ரசிகர் மனோபாவத்திலிருந்து கட்சித் தொண்டர் மனோபாவத்திற்கு மாற்றுவது அவசியமாகிறது.