காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பாளரும், நிபுணர்கள் மற்றும் தரவுகள் பகுப்பாய்வு குழுவின் தலைவருமான பிரவீண் சக்கரவர்த்தி, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யை சந்தித்த தகவல், திமுகவின் தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் தான் காங்கிரஸ் கட்சியின் ஐவர் குழு தொகுதி பங்கீடு குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், ராகுல் காந்தியின் நம்பிக்கைக்குரியவரும், வியூகங்களை வகுப்பவருமான பிரவீண் சக்கரவர்த்தியின் இந்த சந்திப்பு, மேலிடத்தின் அனுமதியோடு நிகழ்ந்ததாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரவீண் சக்கரவர்த்தி திமுகவுக்கு எதிராக நிலைப்பாடு கொண்டவர் என்பதாலும், அவருக்கு மாநிலங்களவை சீட் வழங்கப்படாததால் ஏற்பட்ட அதிருப்தியிலும், அவர் தவெக பக்கம் திரும்பியிருக்கலாம் என்றும் ஒரு பின்னணி பேசப்படுகிறது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் ருந்தகை இந்த சந்திப்பு குறித்து தங்களுக்கு தெரியாது என்று திட்டவட்டமாக மறுத்திருந்தாலும், கட்சிக்குள் நிலவும் பிளவுகள் இந்த சம்பவத்தை மேலும் வலுப்படுத்துகின்றன. காங்கிரஸ் தரப்பில், திமுக ஆதரவு மற்றும் எதிர்ப்பு என்று இருவேறு நிலைப்பாடுகள் உள்ளன.
பிரவீண் சக்கரவர்த்தியின் இந்த நகர்வு, “தவெக-வுடன் நெருங்கி பயணித்தால், திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தேசிய கட்சியான காங்கிரஸை மீண்டும் தமிழகத்தில் காலூன்ற செய்ய முடியும்” என்ற ஒரு பிரிவின் கணக்கை பிரதிபலிக்கிறது. மேலும், தவெக-வுடன் கூட்டணி வைத்தால், திமுகவிடம் அதிக தொகுதிகளை பெறுவதற்கும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பதற்கும் இது ஒரு பேர ஆயுதமாக பயன்படும் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.
மறுபுறம், விஜய் மற்றும் தவெக வட்டாரங்கள் இந்த சந்திப்பால் பெரும் உற்சாகம் அடைந்துள்ளன. முன்னாள் அமைச்சரான செங்கோட்டையன், பேச்சாளர் நாஞ்சில் சம்பத் போன்ற அனுபவமிக்கவர்கள் கட்சியில் இணைந்ததையடுத்து, இப்போது தேசிய கட்சியான காங்கிரஸ் கவனத்தையும் ஈர்த்திருப்பது, களத்தில் தங்கள் பலத்தை உறுதிப்படுத்துவதாக விஜய் கருதுகிறார்.
தவெக-வின் ஆட்கள் நடத்திய சர்வேக்களின்படி, கிட்டத்தட்ட 70 முதல் 80 தொகுதிகளில் தங்கள் கட்சிக்கு சாதகமான சூழல் இருப்பதாகவும், காங்கிரஸின் 50+ வயதுடையோரின் வாக்குகளையும், விஜய்யின் இளையோர் வாக்குகளையும் இணைத்தால், 2026-ல் ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும் காங்கிரஸ் தரப்பிலிருந்து விஜய்க்கு சில கணக்குகள் போடப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2026-ல் களம் “திமுக Vs தவெக” என்று மாற்றுவதே விஜய்யின் பிரதான இலக்காக உள்ளது.
திமுக தலைமை இந்த நகர்வை ஒரு சாதாரண நாடகமாகவே பார்க்கிறது. இது, காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை பெறுவதற்காக செய்யும் வழக்கமான முயற்சி என்றும், இதற்கெல்லாம் செவிசாய்க்க தேவையில்லை என்றும் திமுகவின் சீனியர்கள் கருதுகின்றனர். திமுகவை பொறுத்தவரை, காங்கிரஸ் கட்சி இருந்தாலும் இல்லாவிட்டாலும் தங்கள் கூட்டணி வலிமையாகவே இருக்கும் என்றும், காங்கிரஸ் அதிக இடங்களுக்கு ஒத்து கொள்ளாவிட்டால், அந்த தொகுதிகளை மற்ற கூட்டணி கட்சிகளுக்குப் பிரித்து கொடுக்கலாம் என்றும் கணக்கு போடுகின்றனர். மேலும், காங்கிரஸை பொறுத்தவரை, சட்டமன்ற தேர்தல்களில் தோற்றால் மாநிலங்களவையில் எம்பி எண்ணிக்கை குறையும் என்பதால், திமுக போன்ற நட்பு கட்சிகளை அனுசரித்து செல்வதுதான் அதன் தேசிய எதிர்காலத்திற்கு நல்லது என்ற நிலைப்பாட்டில் திமுக உள்ளது. பாஜக தாக்குதல் அரசியலை தீவிரமாக முன்னெடுத்து, யார் இணைந்தாலும் இணையவில்லை என்றாலும், மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வர முடியும் என்பதே முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் நம்பிக்கையாக உள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
