தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் பிரவீண் சக்கரவர்த்தி ஆகியோருக்கு இடையே நடந்த சந்திப்பு, அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பு குறித்த தகவலை பிரவீண் சக்கரவர்த்தியே உறுதிப்படுத்தியுள்ளார். மேலிட பிரதிநிதிகள் உறுதி செய்த இந்த சந்திப்பு வெறும் செய்தி மட்டுமல்ல, இதன் பின்னணியில் ஆழமான அரசியல் தாக்கம் உள்ளது என்பது உறுதியாகிறது. இந்த சந்திப்பு, நேரடியாக திமுகவுக்கு எதிரான செய்தியாக இல்லாமல், கூட்டணியில் தங்கள் பேரம் பேசும் சக்தியை அதிகரித்துக் கொள்ள காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் உதவும் ஒரு முக்கிய உத்தியாக பார்க்கப்படுகிறது.
இந்த சந்திப்பின் முதல் மற்றும் முக்கிய நோக்கம், காங்கிரஸ் கட்சி வரவிருக்கும் தேர்தல்களில் திமுக கூட்டணியில் தங்களுடைய தொகுதி பங்கீட்டை அதிகரித்து கொள்வதே ஆகும். இதற்கு முன்னர், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் போன்றோர், மாநாடு மற்றும் பேரணிகளை நடத்தி தங்கள் கட்சியின் வலிமையை வெளிப்படுத்தி, அதன் மூலம் திமுகவிடம் கூடுதல் இடங்களை பெறுவது வழக்கம். அதே பாணியில், பிரவீண் சக்கரவர்த்தியும், நாங்கள் முந்தைய தேர்தல்களை போலக் குறைவான எண்ணிக்கையான தொகுதிகளுடன் திருப்தி அடைய மாட்டோம்” என்று திமுகவுக்கு மறைமுகமாக உணர்த்தும் ஒரு சமிஞ்கை.
தமிழக வெற்றிக் கழகம் என்ற ஒரு மாற்று சக்தி இல்லாதபோது, காங்கிரஸ் கட்சிக்கு திமுகவை தவிர வேறு வழியே இல்லாமல் இருந்தது. பாஜக ஒருபுறம் அதிமுக கூட்டணியில் உறுதியாக இருப்பதால், காங்கிரஸால் அந்த கூட்டணிக்கு போகவும் முடியாது. இந்த சூழ்நிலையில், திமுகவுக்குத்தான் எல்லாவற்றிலும் சாதகமாக இருந்தது. “நீங்கள் கூட்டணியை விட்டுப் போனால் வேறு எங்கு செல்வீர்கள்?” என்று திமுக கேட்க முடிந்தது. ஆனால், இப்போது தவெக என்ற ஒரு மாற்று கதவு திறந்திருப்பதால், “நீங்கள் கேட்டதை கொடுத்து அடி வாங்கி கொண்டு இருக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. இல்லையெனில், எனக்கு போக்கிடம் இருக்கிறது” என்ற ஒரு நிலையைத் தன்னால் உருவாக்க முடியும் என்று காங்கிரஸ் நம்புகிறது. இது, உடனடியாகக் காங்கிரஸ் தவெக-வுடன் கூட்டணி வைத்துக்கொண்டு திமுகவை விட்டுப் போகிறது என்ற செய்தி அல்ல; மாறாக, கூட்டணிக்குள் கூடுதல் இடங்களை பெற உதவும் ஒரு அழுத்தமான பேர ஆயுதமாகும்.
திமுகவைப் பொறுத்தவரை, அவர்கள் விட்டுக்கொடுத்துத்தான் ஆக வேண்டும். வரலாற்றில், திமுக பலமுறை ஆட்சியை பிடிப்பதற்காக மிகக்குறைந்த எண்ணிக்கையிலான தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது. உதாரணமாக, ஒரு தேர்தலில் 118 இடங்கள் தேவைப்பட்டபோதும், 112 சட்டமன்ற தொகுதிகளில்தான் போட்டியிட்டது. 2011 தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகளை கூட ஒதுக்கியுள்ளது. எனவே, தங்கள் ஆட்சியை தக்கவைத்து கொள்ளும் லட்சியத்துடன் இருக்கும் திமுக, இந்த சவால்களைச் சமாளிக்க விட்டுக்கொடுக்கத் தயாராகவே இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். தமிழக வரலாற்றில், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் மட்டுமே தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியை தக்க வைத்துள்ளனர். அந்த குறையைப் போக்கி, மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் திமுகவுக்கு இருப்பதால், அவர்கள் விவேகமாக கையாண்டு, காங்கிரஸ் போன்ற கூட்டணி கட்சிகளை சமாதானப்படுத்த முயல்வார்கள்.
காங்கிரஸின் இந்த நகர்வை, திமுக கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சிகளான விசிக, மதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரு பம்பர் பரிசாகவே பார்க்கும். ஏனெனில், காங்கிரஸின் இந்த நடவடிக்கை, திமுகவிடம் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்த மற்ற கட்சிகளுக்கும் ஒரு வாய்ப்பை அளிக்கிறது. அவர்கள் தவெக-வை நோக்கி செல்வார்களா இல்லையா என்பது இரண்டாவது விஷயம். ஆனால், காங்கிரஸின் நகர்வு, திமுக கூட்டணியில் அவர்களுக்கான பேரம் பேசும் சக்தியை அதிகரித்து, அதிக தொகுதிகளையோ அல்லது கூடுதல் சலுகைகளையோ பெற ஒரு வாய்ப்பை ஏற்படுத்தும்.
தவெக தலைவர் விஜய்யைப் பொறுத்தவரை, மற்ற தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் தேடி வந்து சந்திப்பது அவருக்கு ஒரு கொண்டாட்டமே. இது தன்னை ஒரு மோஸ்ட் வான்டட் அரசியல் சக்தியாக அடையாளப்படுத்த அவருக்கு உதவியுள்ளது. அவருக்கு ராகுல் காந்தியுடன் நல்ல புரிதல் உண்டு என்பதும் இந்த சூழலுக்கு சாதகமாக உள்ளது. மேலும், புத்தாண்டு ஜனவரி மாதம் வரை அனைத்து சாத்தியக்கூறுகளையும் அரசியல் கட்சிகள் ஆராயும் நிலையில், விஜய்க்கு ஒரு வலுவான மாற்று கூட்டணி அமையும் வாய்ப்பு இன்னும் அதிகமாகிறது. ஏனெனில், விஜய்யின் அரசியல் நோக்கம் குறைந்த வாக்குகளை பெறுவதல்ல, மாறாக ஆட்சியை பிடிப்பதாகவோ அல்லது ஆட்சியை தீர்மானிப்பதாகவோ இருக்க வேண்டும். அதனால்தான், காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகள் அல்லது அதிமுக-பாஜக கூட்டணி போன்ற பெரிய கட்சிகள், தங்கள் நலன் கருதி தவெக-வுடன் இணைய வாய்ப்புள்ளதா என்பதை களம் இறங்கி ஆய்வு செய்யவே இந்தச் சந்திப்புகள் நடைபெறுகின்றன.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
