தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யை, காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியான பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்து பேசியது, தமிழக அரசியல் களத்தில் பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது. தற்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடித்துவரும் நிலையில், விஜய்யின் இந்த எழுச்சி, திமுகவின் அரசியல் வியூகங்களுக்கு ஒரு பெரும் தலைவலியை உண்டாகியிருக்கிறது. ஒருபுறம் காங்கிரஸை தக்கவைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம், மறுபுறம் விஜய்யின் தனிப்பட்ட செல்வாக்கால் தங்களது வாக்கு வங்கிக்கு பாதிப்பு வருமோ என்ற அச்சம் என திமுக ஒரு தர்மசங்கடத்தில் உள்ளது. காங்கிரஸ் தலைமை, விஜய்யுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்துவது, திமுகவுக்கு கொடுக்கப்படும் ஒரு பெரிய அழுத்தமாகவும், வரவிருக்கும் தேர்தலுக்கான ‘பேர வலிமைக்கான’ நகர்வாகவும் பார்க்கப்படுகிறது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடர்ந்து நீடித்தால், கட்சிக்குள் பிளவு ஏற்படும் அபாயம் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே உள்ள ஒரு பிரிவு, திமுகவின் கூட்டணியால் கிடைக்கும் பண பலத்திற்காக அக்கூட்டணியைத தொடர விரும்பினாலும், மற்றொரு பிரிவினர் அமைச்சர் பதவி ஆசையால் விஜய்யின் தவெகவுடன் கூட்டணி அமைப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். காரணம், விஜய்யின் இளைஞர்கள் மற்றும் நடுநிலை வாக்காளர்கள் மத்தியில் உள்ள செல்வாக்கு, காங்கிரஸுக்கு புத்துயிர் அளிக்கும் என்று அவர்கள் நம்புகின்றனர். இந்த உள்முரண்பாடுகள் உச்சக்கட்டத்தை அடைந்தால், இன்னொரு ‘தமிழ் மாநில காங்கிரஸ்’ போன்ற பிளவுபட்ட பிரிவு உருவாகி, காங்கிரஸின் பாரம்பரிய வாக்கு வங்கியை தவெகவுக்கு ஆதரவாக திருப்பக்கூடும் என்ற அச்சத்து நிலவுகிறது.
காங்கிரஸ் கட்சி, திமுக கூட்டணியில் நீடித்தாலும், விஜய்யின் செல்வாக்கு என்பது தனிப்பட்ட அளவில் கட்சி எல்லைகளை கடந்து பரவியுள்ளது. காங்கிரஸின் பெரும்பாலான தொண்டர்கள் மற்றும் கீழ்மட்ட தலைவர்கள், குறிப்பாக இளைய தலைமுறையினர், திமுக வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதற்கு பதிலாக, விஜய்யின் தவெகவுக்கு வாக்களிக்க வாய்ப்புள்ளது என்று திமுக பிரமுகர்கள் மத்தியிலேயே சந்தேகம் எழுந்துள்ளது.
“எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள், சொந்தக்காரர்கள் கூட விஜய்க்குத் தான் வாக்களிக்கப் போவதாக சொல்கிறார்கள்” என்று திமுக கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் ரகசியமாக தெரிவித்திருப்பது, இந்த அச்சம் நியாயமானது என்பதை உணர்த்துகிறது. இது கூட்டணியின் வெற்றியை நேரடியாக பாதிக்கும் ஒரு பெரும் ஆபத்தாகும்.
விஜய்யின் எழுச்சி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளின் தொடர்ச்சியான சந்திப்புகள், திமுகவின் பேரம் பேசும் சக்தியை பெருமளவில் குறைக்கிறது. ஒருவேளை காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியேறி விஜய்யுடன் இணைந்துவிட்டால், அது திமுக தலைமையிலான கூட்டணியின் மதச்சார்பற்ற முகமூடியை கிழித்துவிடும் என்று கருதப்படுகிறது. மேலும், சிறுபான்மையினர் மற்றும் இளைய தலைமுறையினரின் வாக்குகள் விஜய்யின் பக்கம் திரும்புவதால், திமுகவின் வாக்கு வங்கி வெகுவாக பாதிக்கப்படும். இந்த சூழ்நிலை, வரவிருக்கும் தேர்தலில் திமுகவுக்கு ஒரு ‘தீராத தலைவலியாக’ உருவெடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சி ஒருபுருவம் தவெகவை வைத்து மிரட்டுவதாக திமுக உணர்கிறது.
இந்த பின்னணியில், காங்கிரஸ் நிர்வாகியின் சந்திப்பு, விஜய்யை தேசிய அரசியல் அரங்கிற்கு எடுத்துச் செல்ல உதவும். விஜய்யை ஆதரிக்கும் மக்கள் கூட்டம் இருக்கும் வரை, அவருக்கு அசைக்க முடியாத ஒரு பலம் இருக்கிறது. ஒருவேளை ராகுல் காந்தி – விஜய் கூட்டணி அமைந்தால், அது தமிழக அரசியல் களத்தை மாபெரும் அதிர்வலைக்கு உள்ளாக்கும். எனவே, திமுக கூட்டணிக்குள் காங்கிரஸ் நீடிக்குமா அல்லது பிளவுபட்டு ஒரு பகுதி விஜய்யுடன் இணையுமா என்பது, தமிழக அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கியமான அம்சமாக உள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
