அரசியல் புயல் எந்த பக்கம் வேண்டுமானாலும் திரும்பலாம்.. எடப்பாடி போடும் திட்டமெல்லாம் விஜய் ஒருமுறை பிரச்சாரம் செய்தால் தவிடுபொடியாகிவிடுமா? இரட்டை இலையில் நின்ற ஜெயலலிதாவே தோற்றுள்ளார். சின்னத்தை வைத்தெல்லாம் இனி வாக்கு வாங்க முடியாது.. இது டிஜிட்டல் உலகம்.. எந்த சின்னமாக இருந்தாலும் ஒரே நிமிடத்தில் வைரலாகிவிடும்..!

அதிமுகவில் சுமார் 50 ஆண்டுகள் அரசியல் அனுபவம் பெற்ற மூத்த தலைவரான முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், சமீபத்தில் விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெகவில்…

vijay eps

அதிமுகவில் சுமார் 50 ஆண்டுகள் அரசியல் அனுபவம் பெற்ற மூத்த தலைவரான முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், சமீபத்தில் விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெகவில் அவருக்கு உயர்மட்ட மாநில நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த விலகல் அதிமுகவுக்கு பெரும் இழப்பாகவே கருதப்படுகிறது.

செங்கோட்டையனின் விலகல் குறித்து ஊடகங்கள் கேள்வி எழுப்பியபோது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி “அவர் கட்சியில் இல்லையே” என்று அலட்சியமாக கூறி நிராகரித்தார். வெளிப்படையாக கூலாக காட்டிக்கொண்டாலும், தன் முக்கிய நிர்வாகி ஒருவர் எதிரணிக்கு சென்றது குறித்து அவர் கடும் கோபத்திலும் ஆலோசனையிலும் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செங்கோட்டையன் போலவே வேறு யாரும் தவெக பக்கம் தாவக்கூடாது என்பதற்காக, செங்கோட்டையனுக்கு பாடம் புகட்ட எடப்பாடி திட்டமிட்டுள்ளார். அதன் மையமாக, செங்கோட்டையன் பலமுறை வெற்றி பெற்ற கோட்டையான கோபிசெட்டிபாளையம் தொகுதியிலேயே அவரை வீழ்த்த வியூகம் வகுக்கிறார். செங்கோட்டையன் இரட்டை இலை சின்னத்தால்தான் வென்றார் என்றும், சின்னம் இல்லாமல் அவர் பெரும் சேதத்தை சந்திப்பார் என்றும் அதிமுகவினர் நம்புகின்றனர். ஆனால் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட ஜெயலலிதாவே பர்கூர் தொகுதியில் தோல்வி அடைந்தார் என்பது வரலாறு.

நவம்பர் 30ஆம் தேதி கோபியில் நடைபெறும் அதிமுக பொதுக்கூட்டத்தில் மிகப்பெரிய அளவில் கூட்டத்தை கூட்டி, ‘கோபியில் இரட்டை இலைதான் வலிமை’ என்பதை நிரூபிக்க எடப்பாடி முனைப்பு காட்டுகிறார். மேலும், செங்கோட்டையனுக்கு எதிராக வலுவான வேட்பாளரை நிறுத்தி, கோபி தொகுதியில் அவரை தோற்கடிப்பதற்கான பணிகளை தீவிரப்படுத்தவும் அவர் செயலாற்றி வருகிறார். ஆனால் விஜய் ஒரே ஒருமுறை கோபி வந்து பிரச்சாரம் செய்தாலே ஈபிஎஸ் அவர்களின் அனைத்து திட்டங்களும் தவிடுபொடியாகிவிடும் என்று அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

செங்கோட்டையனின் இணைவு, விஜய்யின் தவெக நேரடியாக அதிமுகவை தாக்கும் ஒரு நகர்வாக எடப்பாடி கருதுகிறார். இதனால் அவர் விஜய்க்கு எதிராக மறைமுக நகர்வுகளை மேற்கொள்வதோடு, தனது கூட்டணியை வலுப்படுத்தவும் தீவிரம் காட்டுகிறார். ஃபார்வர்டு பிளாக் போன்ற கட்சிகளை இணைத்தவர், தற்போது த.மா.கா., பா.ம.க. , புதிய தமிழகம் போன்ற முக்கிய தலைவர்களை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சிக்கிறார். இதன்மூலம், திமுகவுக்கு எதிரான வாக்குகளை அறுவடை செய்து, 30% வாக்கு வங்கியுடன் கூடுதல் 6-10% வாக்குகளை சேர்த்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று அதிமுக நம்புகிறது.

அதிமுகவில் ஒருங்கிணைப்பை வலியுறுத்தி வந்த சசிகலா, ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் செங்கோட்டையனின் தவெக இணைவால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒருங்கிணைப்பு முயற்சிகளின்போது டெல்லி எடப்பாடிக்கே சாதகமாக செயல்பட்டதாக உணர்ந்ததாலேயே செங்கோட்டையன் தவெக பக்கம் சென்றதாக கூறப்படுகிறது. தற்போது, எடப்பாடியை தோற்கடிக்க வேண்டுமென்ற இலக்குடன், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் தவெகவுடன் இணைந்து ஒரு மெகா கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கின்றனர். இது பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால், டெல்லி தலைவர்கள் ஓபிஎஸ், டிடிவி ஆகியோரை தங்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கொண்டுவர முயற்சிகளை தொடங்கியுள்ளனர்.

மொத்தத்தில் இன்னும் பெரும்பாலான சிறிய கட்சிகள் கூட்டணி குறித்த இறுதி முடிவை எடுக்காததால், அரசியல் புயல் எந்த பக்கம் வேண்டுமானாலும் திரும்பும் என்பதுதான் இப்போதைய நிலையாக உள்ளது.