ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அவர்கள், ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். மாஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டு மன்றம் ஒன்றில் உரையாற்றிய அவர், தனது நாடு ஐரோப்பிய சக்திகளுடன் “இப்போதே போர் செய்ய தயாராக” இருப்பதாக வெளிப்படையாக அறிவித்தார். இருப்பினும், ரஷ்யா போரை திட்டமிடவில்லை என்று நூறு முறை கூறியுள்ளதாகவும், மாறாக, ஐரோப்பிய சக்திகளே மோதல் போக்கிற்கு ஆதரவாக இருப்பதாகவும் புடின் குற்றம் சாட்டினார். ஐரோப்பா சண்டையை தொடங்கினால், ரஷ்யா உடனடியாக சண்டையிட தயார் என்று அவர் அழுத்தமாகக் குறிப்பிட்டார்.
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்ட முயற்சிகளை ஐரோப்பிய சக்திகள் தடுத்து நிறுத்துவதாக கிரெம்ளின் தலைவர் குற்றம் சாட்டினார். சமாதான பேச்சுவார்த்தையில் ரஷ்யாவிற்கு முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத கோரிக்கைகளை கொண்டு மாற்றியமைத்ததன் மூலம், அமைதி செயல்முறையை ஐரோப்பிய நாடுகள் தடுத்துவிட்டன என்று அவர் ஆவேசமாக கூறினார்.
அமைதியை ரஷ்யா விரும்பவில்லை என்று மாஸ்கோ மீது பழி சுமத்துவதே ஐரோப்பியர்களின் இலக்கு என்று புடின் குற்றம் சாட்டினார். அவர்களுக்கு ஒரு சமாதான திட்டம் இல்லை, அவர்கள் போரின் பக்கத்திலேயே இருக்கிறார்கள் என்று புடின் குறிப்பிட்டார். இந்த நிலைப்பாடு, ஐரோப்பிய சக்திகள் வேண்டுமென்றே போரை தூண்டுவதையும், சமாதானத்தை நாடாமல் ரஷ்யா மீது பழியை சுமத்துவதையும் நோக்கமாக கொண்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர 28 அம்ச சமாதான திட்டம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அத்திட்டம் உக்ரைனின் இறையாண்மையை உறுதிப்படுத்தியதுடன், நேட்டோ விரிவாக்கம் நிறுத்தப்படும் என்றும், உக்ரைன் இராணுவத்தின் அளவு குறைக்கப்படும் என்றும் முன்மொழிந்தது. மேலும், கிரிமியா, லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் ஆகியவை உண்மையில் ரஷ்யாவிற்கு சொந்தமானவை என அங்கீகரிக்கப்படும் என்றும், கெர்சன் மற்றும் சபோரிஜியா பகுதிகளில் உள்ள படைகள் இப்போதுள்ள எல்லை கோட்டிலேயே நிறுத்தப்படும் என்றும் அத்திட்டத்தில் கூறப்பட்டிருந்தது.
ட்ரம்பின் திட்டம் ரஷ்யாவிற்கு சாதகமாக உள்ளது என்று விமர்சனங்கள் எழுந்ததால், அத்திட்டம் திருத்தப்பட்டது. இருப்பினும், இந்த புதிய திருத்தப்பட்ட திட்டம் புடினுக்கு பிடிக்கவில்லை. இந்த சர்ச்சை நீடித்து வரும் நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சாத்தியமான நடவடிக்கைகளை பற்றி விவாதிக்க, அமெரிக்காவின் தூதுவர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜனாதிபதி ஆலோசகர் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் புடின் மற்றும் ரஷ்ய அதிகாரிகளை மாஸ்கோவில் சந்திக்க உள்ளனர்.
மேலும் புடின் அவர்கள், உக்ரைனின் கப்பல்களுக்கும் வசதிகளுக்கும் எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்துவதாகவும், உக்ரைனை கடலில் இருந்து துண்டித்து , அதன் கடல்வழி போக்குவரத்தை துண்டிப்பதாகவும் அச்சுறுத்தினார். கருங்கடலில் உள்ள ரஷ்யாவின் கப்பற்படையை சேர்ந்த எண்ணெய் கப்பல்கள் மீது ஆளில்லா விமான தாக்குதல்கள் நடத்தப்பட்டதற்கு பதிலடியாகவே இந்த நடவடிக்கையை எடுப்பதாக அவர் கூறினார். உக்ரைனுக்கு உதவும் நாடுகளின் எண்ணெய் கப்பல்களுக்கு எதிராக ரஷ்யா நடவடிக்கை எடுக்கும் என்றும், உக்ரைனை கடலில் இருந்து துண்டிப்பதே மிகவும் தீவிரமான தீர்வு என்றும் அவர் எச்சரித்தார்.
புடினின் இந்த அறிவிப்பால் உக்ரைன் போர் இப்போதைக்கு முடிய வாய்ப்பில்லை என்பது மட்டுமின்றி, ஐரோப்பாவுடனும் ரஷ்யா போர் செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுவதால் உலக நாடுகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
