தமிழக அரசியல் களத்தில் இப்போது தமிழக வெற்றி கழகம் உருவாக்கியுள்ள அரசியல் புயல்தான் அதிக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, த.வெ.க. ஆறு கோடி ரூபாய் செலவில், சமூக பொறியியல் முறையை பயன்படுத்தி நடத்தியதாக கூறப்படும் ஒரு ரகசிய சர்வேயின் முடிவுகள், ஊடகத்தில் கசிந்து வெளியாகியுள்ள தகவல், பல அதிர்ச்சிகரமான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது. இந்த சர்வே முடிவுகள், இதுவரை பொதுவெளியில் பேசப்பட்டு வந்த நடிகர் விஜய்யின் வாக்கு சதவீதத்தை விடவும் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சர்வேயின்படி, தமிழகத்திலுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில், 73 தொகுதிகளில் 40% வாக்குகள் த.வெ.க.வுக்கு உறுதியாக உள்ளதாக தெரிகிறது. மேலும், 140 தொகுதிகளில் சராசரியாக 25% வாக்குகள் த.வெ.க.வுக்கு இருப்பதாக கூறப்படுகிறது. தென்மாவட்டங்களில் உள்ள 21 தொகுதிகளில் மட்டும் 15%க்கு குறைவாக வாக்குகள் பதிவாகியிருந்தாலும், ஓ.பி.எஸ், டி.டி.வி. தினகரன் போன்றோரை இணைப்பதன் மூலம் தென்மாவட்டங்களில் பலப்படுத்த முடியும் என்று த.வெ.க. நம்புவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சமூக ரீதியான வாக்கு வங்கியை பொறுத்தவரை, வெள்ளாளர் சமுதாயத்தின் வாக்குகள் 40% வரையிலும், முக்குளத்தோர் வாக்கு வங்கி 30% வரையிலும், தேவேந்திர குல வேளாளர் வாக்குகள் 25% வரையிலும் த.வெ.க.வுக்கு உறுதியாக இருப்பதாக இந்த சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன. மேலும், விஜய் அவர்கள் “ஒன்றே குலம்” என்ற கொள்கையை பின்பற்றுவதால், வட மாவட்டங்களில் இருக்கும் வன்னியர் மற்றும் பறையர் சமூகங்களில் சேர்த்து 35% வாக்குகள் ஆதரவாக இருப்பதாகவும் தகவல் வந்துள்ளது.
சமூக பிரிவை தாண்டிப் பார்த்தால், பெண்களின் வாக்குகளில் 58% விஜய் அவர்களுக்கு ஆதரவாக இருப்பதாக சர்வே தெரிவிக்கிறது. இதைவிட முக்கியமாக, Gen Z இளைஞர்கள் வாக்குகளில் 80% அளவுக்கு விஜய் அவர்களுக்கே அதிகபட்சமாக செல்லும் என்றும், தொழிலாளர்களில் 55% வாக்குகள் த.வெ.க.வுக்கு இருப்பதாகவும் இந்த முடிவுகள் நம்பிக்கை அளிப்பதாக உள்ளன. முதல் தலைமுறை வாக்காளர்கள் மத்தியில் இந்த ஆதரவு மிக அதிகமாகப் பதிவாகியுள்ளது.
இந்தச் சர்வே முடிவுகளில் மிகவும் அதிர்ச்சியூட்டும் பகுதியாக, முக்கிய அரசியல் ஆளுமைகள் போட்டியிடும் தொகுதிகளின் நிலவரம் உள்ளது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் கூட, 48% வாக்குகள் த.வெ.க.வுக்கு சாதகமாக இருப்பதாக சர்வே தெரிவித்துள்ளது. மேலும், கொங்கு மண்டலம் அ.தி.மு.க. கோட்டையாக பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது கொங்கு கோட்டையில் த.வெ.க. நம்பர் 1 இடத்தில் இருப்பதாக சர்வே அதிர்ச்சியூட்டுகிறது. இது, அ.தி.மு.க.வின் எஸ்.பி. வேலுமணி மற்றும் தி.மு.க.வின் செந்தில் பாலாஜி ஆகியோரின் தொகுதிகளிலும் த.வெ.க. முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
கூட்டணி இல்லாமலேயே இன்றைய நிலவரப்படி த.வெ.க. சூளூர் (51-52%) மற்றும் திருவள்ளூர் (50-51%) போன்ற தொகுதிகளில் வெற்றிபெற வாய்ப்புள்ளதாகவும், இவை தமிழ்நாட்டில் அவர்கள் டாப்-3 இடங்களில் உள்ள தொகுதிகளாகவும் சர்வே குறிப்பிட்டுள்ளது. இந்த சர்வே முடிவுகள், செங்கோட்டையன் இணைந்தது போன்ற நிகழ்வுகளுடன் சேர்ந்து, த.வெ.க.வை தமிழகத்தின் மூன்றாவது அணி அல்ல, முதல் இரு கட்சிகளில் ஒன்று என்ற நிலைக்கு உயர்த்தியிருப்பதாக கருதப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில் இது தவெக எடுத்த சொந்தமான சர்வே என்பதால், சர்வே எடுத்தவர்கள் தவெக தலைமையை திருப்திபடுத்துவதற்காக இயல்பை விட அதிகபட்சமாக ரிசல்ட்டை தந்திருக்கலாம், ஒரு சர்வே நிறுவனம் அல்லது ஊடகங்கள் எடுக்கும் சர்வேயில் நம்பிக்கைத்தன்மை இருக்கும், ஆனால் ஒரு அரசியல் கட்சியே சொந்தமாக எடுக்கும் சர்வேயில் எந்த அளவு உண்மை இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இன்னும் ஆறு மாதத்தில் இந்த சர்வே உண்மையா? அல்லது செட்டபா? என்பது தெரிந்துவிடும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
