அறிஞர் அண்ணா அவர்களின் மறைவுக்குப் பிறகு, 1969 ஆம் ஆண்டில், எம்.ஜி. ஆருக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. ஆனால்
எம்ஜிஆர் அவர்களுக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. “நான் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு வாக்களியுங்கள் என்று சொன்னால் மக்கள் வாக்களிப்பார்கள். ஆனால், எனக்கு வாக்களியுங்கள் என்று சொன்னால் இந்த மக்கள் போடுவார்களா?” என்ற கேள்வி அவரை உறுத்தியது. எம்ஜிஆர் எவ்வளவு புத்திசாலித்தனமாக அந்த சந்தேகத்தை தீர்த்திருக்கிறார் என்பதை நாகிரெட்டியின் மகன் எழுதிய புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் உண்மைச் செய்தி இதோ..
அந்த சந்தேகத்தை தீர்க்க அவர் தேர்ந்தெடுத்த வழி, அரசியல் களம் அல்ல; சினிமா களம். அவர் வாஹினி ஸ்டுடியோ அதிபரான நாகிரெட்டியை சென்று பார்க்கிறார். “என்னை வைத்து நீங்கள் ஒரு படம் எடுக்க வேண்டும்” என்று அவர் சொல்ல, நாகிரெட்டி “இது எனக்கு வந்த யோகம்” என்று மகிழ்கிறார். ஆனால், எம்ஜிஆர் ஒரு நிபந்தனை வைக்கிறார்: “நான் தேர்தலில் நிற்பது மாதிரியும், தேர்தலில் ஜெயிப்பது மாதிரியும் இந்த படத்தில் செய்திகள் வரும், காட்சிகள் வரும். அப்படி ஒரு படம் வேண்டும்” என்று எம்ஜிஆர் வலியுறுத்துகிறார்.
படத்துக்கான அத்தனை ஏற்பாடுகளையும் எம்ஜிஆரே செய்து தருகிறார். இந்த படத்துக்கான பெரும்பாலான காட்சிகள் பத்தே நாட்களில் எடுத்து முடிக்கப்பட்டன. அந்த படத்தின் பெயர் ‘நம் நாடு’. படம் தயாராகி, திரையரங்குகளில் வெளியானது.
படம் வெளியான முதல் நாளிலேயே அதை பார்க்க வேண்டும் என்று எம்ஜிஆர் ஆசைப்படுகிறார். அவர் நாகிரெட்டியிடம் தொலைபேசி, “நான் இன்று, முதல் நாளிலேயே படத்தை பார்க்க வேண்டும். ஆனால், யாருக்கும் தெரியாமல், மக்களோடு மக்களாக இருந்து பார்க்க வேண்டும். தியேட்டர் மேனேஜருக்கு மட்டும் தகவல் தெரிவியுங்கள், நீங்களும் நானும் மட்டும் செல்வோம்” என்று சொல்கிறார்.
சென்னை மேகலா தியேட்டரில் மாலை காட்சியில் எம்ஜிஆர் மற்றும் நாகிரெட்டி இருவரும் தியேட்டரின் ஒரு கதவில் சாய்ந்து நின்று கொண்டு படத்தை பார்த்திருக்கிறார்கள்.
படம் ஓடிக்கொண்டிருக்கிறது. அதில், எம்ஜிஆர் ஒரு சேர்மன் எலெக்ஷனில் ஜெயித்து, குப்பத்திற்கு வரும் காட்சி வருகிறது. அப்போது, வாலி எழுதிய “வாங்கய்யா வாத்தியார் ஐயா” என்ற பாடல் திரையில் ஒலிக்கிறது. இந்தக் காட்சியை எம்ஜிஆரே திட்டமிட்டு உருவாக்கி கொடுத்தது.
அந்த பாடல் திரையிடப்பட்டபோது, தியேட்டரில் கூடியிருந்த மக்கள் விசில் சத்தத்துடனும், கரகோஷத்துடனும் வானை பிளக்கும் அளவிற்கு சத்தமிட்டுள்ளனர். மக்கள் அனைவரும் “ஒன்ஸ் மோர்! ஒன்ஸ் மோர்!” என்று கத்தி, மறுபடியும் அந்த பாடலை போடாமல் விடமாட்டோம் என்று ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். மக்களின் கோரிக்கையை கண்ட தியேட்டர் நிர்வாகம், மீண்டும் அந்த பாடலைத் திரையிட்டுள்ளது.
இரண்டாவது முறை அந்தப் பாடல் திரையிடப்பட்டதும், நாகிரெட்டி எம்ஜிஆரை பார்க்கிறார். எம்ஜிஆரின் கண்களில் இருந்து இரண்டு கண்ணீர்த் துளிகள் கன்னத்தில் வழிந்து கொண்டிருந்தன.
அந்த கண்ணீர்த் துளிகள் மூலம், எம்ஜிஆருக்குத் தன் மீதான சந்தேகம் தீர்ந்தது. ‘நாம் தேர்தலில் நின்றால் நிச்சியம் ஜெயித்துவிடலாம்’ என்ற முடிவை அன்றே அவர் எடுத்துவிட்டார். இந்த அரிய தகவல், நாகிரெட்டியின் மகன் எழுதிய ‘என் தந்தை சில நினைவுகள்’ என்ற புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. எம்ஜிஆரின் அரசியல் புத்திசாலித்தனத்தையும், மக்கள் செல்வாக்கை அவர் உணர்வுபூர்வமாக அளவிட்ட விதத்தையும் இந்த காட்சி நமக்கு தெளிவாக காட்டுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.

