தமிழக அரசியல் களத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கும் மிகப்பெரிய சவால், மூத்த தலைவர்களின் வெளியேற்றம் அல்ல; மாறாக, விசுவாசமான அடித்தட்டு தொண்டர்கள் தமிழக வெற்றி கழகத்தின் பக்கம் ஈர்க்கப்படுவதுதான். கட்சியின் தலைமை, விலகி செல்லும் தலைவர்களை சரிக்கட்டிவிடலாம் என்று நம்பினாலும், பல ஆண்டுகளாக இரட்டை இலை சின்னத்தைத் தவிர வேறு எதற்கும் வாக்களிக்காத தொண்டர்களின் மனமாற்றம், அரசியல் நோக்கர்களால் அதிமுகவின் அழிவின் ஆரம்பமாகவே பார்க்கப்படுகிறது. இது, அதிமுகவின் அடித்தளத்தையே அசைக்கும் அபாயகரமான சிக்னலாகும்.
அதிமுகவின் பலமே அதன் விசுவாசமான தொண்டர் பட்டாளம்தான். எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா காலத்தில் உருவான இந்த படை, உணர்வுபூர்வமாக இரட்டை இலை சின்னத்துடன் பிணைக்கப்பட்டிருந்தது. வேட்பாளர் யார் என்றேதெரியாமல் கண்ணை மூடி இரட்டை இலைக்கு குத்துபவர்கள் இந்த விசுவாசமான தொண்டர்கள். தலைவர்கள் மாறினாலும், அணியினர் பிரிந்தாலும், தொண்டனின் ஓட்டு எப்போதுமே சின்னத்திற்குத்தான் என்ற உறுதியான அடையாள விசுவாசம் இருந்தது. ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. த.வெ.க. தலைவர் விஜய் அவர்களுக்கு கிடைக்கும் வரவேற்பு, வெறுமனே ஒரு நடிகருக்கான வரவேற்பு மட்டுமல்ல, அது மாற்று அரசியல் தலைமைக்கான இளைஞர் படையின் ஏக்கத்தின் வெளிப்பாடாகும். இதனால், அதிமுகவின் இளைஞர் அணியினர் உட்பட அடித்தட்டு தொண்டர்கள், தங்கள் விசுவாசத்தை தளர்த்தி, முதல்முறையாக த.வெ.க.வின் சின்னத்துக்கு வாக்களிக்க தயாராகிறார்கள்.
தொண்டர்கள் தங்கள் வாழ்நாள் கொள்கையை விட்டு விலக துணிவது, அவர்கள் ‘நொந்து நூடுல்ஸ்’ ஆகியிருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, ஓபிஎஸ், ஈபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் என மாறிமாறி நடந்த சீரற்ற அரசியல் குழப்பங்கள் அவர்களை சோர்வுக்குள்ளாக்கின. மேலும், ஈபிஎஸ் அவர்கள் கட்சியை தன்வசப்படுத்தினாலும், எம்.ஜி.ஆர். அல்லது ஜெயலலிதா போன்ற ஆளுமை மிக்க தலைமை இல்லாததால் தொண்டர்கள் உற்சாகத்தை இழந்தனர். மக்களவை தேர்தலில் வந்த படுதோல்வி முடிவுகள், தொண்டர்கள் மத்தியில் நம்பிக்கையின்மையை மேலும் விதைத்தது.
உட்கட்சி சோர்வைத் தாண்டி, எதிர்காலம் குறித்த பயமே தொண்டர்களை புரட்டி போடுகிறது. ஆளும் கட்சியான தி.மு.க. வலுவாக இருக்கும் நிலையில், ஒரு வலுவான, எழுச்சியூட்டும் தலைமை தங்களை வழிநடத்த அதிமுகவில் இல்லை என்று அவர்கள் அஞ்சுகின்றனர். மேலும், த.வெ.க.வின் வருகை, இரண்டு பிரதான திராவிட கட்சிகளிலும் சோர்வடைந்த தொண்டர்கள் மத்தியில், ஒரு மூன்றாவது சக்திக்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கோட்டையன் போன்ற மிக மூத்த தலைவர்கள் த.வெ.க.வில் இணைவது, கட்சியின் நிர்வாக வளத்தை மட்டுமின்றி, அந்த தலைவர்களின் விசுவாசமான தொண்டர்களையும் இழுத்து செல்வதால், ஈபிஎஸ்ஸின் தலைமையின் மீதான நம்பகத்தன்மையை கடுமையாக குறைக்கிறது.
தொண்டர்களின் இந்த உணர்வுபூர்வமான விலகல், கட்சிக்கு ஏற்பட்டுள்ள அஸ்திவார பிளவுக்கு சமமானது. மூத்த தலைவர்கள் போனால், புதிய நிர்வாகிகளை உருவாக்கலாம். ஆனால், அடித்தட்டு தொண்டர்களை இழந்தால், கட்சி என்பது பெயரளவுக்கு மட்டுமே இருக்கும். எனவே, எடப்பாடி பழனிசாமி அவர்கள் உடனடியாக சுதாரித்து, மூத்த அரசியல் தலைவர்களுடன் இணக்கமாகி, களப்பணியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தொண்டர்களுடன் நேரடி தொடர்பை வலுப்படுத்தி, ஆளுமையை மீட்டெடுக்க வேண்டும்.
ஈபிஎஸ் அவர்கள் த.வெ.க.வின் கவர்ச்சிக்கு ஈர்க்கப்படும் இளைஞர் படையை இலக்காக கொண்டு, அவர்களுக்கு புதிய திட்டங்கள் மற்றும் பொறுப்புகளை அளிப்பதன் மூலம், அவர்களை தக்கவைக்க வேண்டும். மேலும், கூட்டணிகள் மற்றும் உள்கட்சி விவகாரங்களில் தெளிவான, நிலையான முடிவுகளை எடுத்து, தலைமை மீதான குழப்பங்களை அகற்ற வேண்டும். அதிமுகவின் பலம் அதன் தொண்டர்கள்தான்; அவர்களைப் புறக்கணிப்பது, இரட்டை இலையின் வேரையே அரிப்பதற்குச் சமம். எனவே, அதிமுக தலைமை சுதாரித்து எழுவதற்கு இதுவே கடைசி வாய்ப்பாகும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
