கடந்த 2 நாட்களுக்கு முன் தாஜிகிஸ்தானின் காத்லான் மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு தங்கச் சுரங்கத்தின் மீது, ஆயுதம் ஏந்திய ட்ரோன் மூலம் குண்டுகளும் துப்பாக்கிகளும் கொண்ட தாக்குதல் நடத்தப்பட்டது. சீன நிறுவனத்துடன் தொடர்புடைய அந்த சுரங்கத்தில் நடந்த இந்த தாக்குதலில் மூன்று சீன நாட்டவர்கள் கொல்லப்பட்டனர். ஒருவர் காயமடைந்தார். இந்த தாக்குதலை நடத்தியவர்கள், சுரங்க பணியை சீர்குலைக்கும் நோக்கத்துடன் தொடர்ந்து செயல்படும், அண்டை நாட்டில் அமைந்துள்ள குற்றவியல் குழுக்கள் என்று தாஜிகிஸ்தான் அரசாங்கம் விவரித்துள்ளது.
தலிபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தான், இத்தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று மறுத்துள்ளது. “இரு நாடுகளுக்கு இடையே குழப்பத்தை உருவாக்கும் ஒரு சதியே இந்த தாக்குதல் என்று காபூல் கூறியுள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானின் எல்லைக்குள் அமெரிக்கா ட்ரோன் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் அனுமதிப்பதாகவும், பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்து பயிற்சி முகாம்களை நடத்த அனுமதிப்பதாகவும் தலிபான் அரசாங்கம் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த தாக்குதலை நடத்தியது யார் என்பது தெளிவாக தெரியாத நிலையிலும், தாஜிகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் ஒருவரையொருவர் நேரடியாக குற்றம் சாட்டாத நிலையில், பாகிஸ்தான் உடனடியாக தலையிட்டு, தலிபான் ஆட்சியை குறிவைக்க இந்த சம்பவத்தைப் பயன்படுத்தியது. அமெரிக்காவின் பாதுகாவலர்களை ஆப்கானியர் ஒருவர் சுட்டு கொன்ற சம்பவத்திற்கு பிறகு, “நாங்களும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள்தான்” என்ற பழைய நாடகத்தை பாகிஸ்தான் அரங்கேற்றியது போல, இப்போதும் தாஜிகிஸ்தான் தாக்குதலை பயன்படுத்தி கொண்டது. இந்த தாக்குதலை யார் செய்திருந்தாலும், பாகிஸ்தான் தனது பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்” என்ற பிம்பத்தை மாற்ற, இதுபோன்ற தாக்குதல்களை பயன்படுத்த ஆர்வமாக உள்ளது என்பது தெளிவாகிறது.
ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சகம், உயிரிழந்த சீன நாட்டவர்களுக்காக சீன மற்றும் தாஜிகிஸ்தான் மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததுடன், இந்த சம்பவத்தை வன்மையாகக் கண்டித்தது. மேலும், இந்த தாக்குதலுக்குப் பின்னால் இருக்கும் காரணங்களை கண்டறியத் தகவல் பரிமாற்றம் மற்றும் தொழில்நுட்ப ஆதரவு உட்பட முழு ஒத்துழைப்பை வழங்குவதாகவும் காபூல், உறுதியளித்தது. தாஜிக் அரசாங்கம் ஆப்கானிஸ்தான் தலிபான் ஆட்சியை நேரடியாக குற்றம் சாட்டவில்லை என்றாலும், அண்டை நாட்டில் அமைந்துள்ள குற்றவியல் குழுக்கள் என்ற அதன் விளக்கம், குற்றவாளிகள் எங்கிருந்து வந்தனர் என்பதை சுட்டிக் காட்டுவதாக உள்ளது.
இந்த நேரத்தில் பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் இது “சீன நாட்டவர்கள் மீதான கோழைத்தனமான தாக்குதல்” என்று கண்டனம் தெரிவித்ததோடு, ஆயுதமேந்திய ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதை குறிப்பிட்டு, ஆப்கானிஸ்தான் மண்ணிலிருந்து இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என்றும், அண்டை நாடுகள் அல்லது வேறு எந்த நாட்டிற்கும் எதிராக பயங்கரவாதத்திற்கு ஆப்கான் பிரதேசத்தை பயன்படுத்த கூடாது என்று பாகிஸ்தான் அழுத்தம் கொடுத்து, இத்தாக்குதலை தலிபானின் பயங்கரவாத ஆதரவுடன் மறைமுகமாக இணைத்தது.
ஆனால் ஆப்கானிஸ்தான் மற்றும் இந்திய ஆய்வாளர்கள் பயங்கரவாதத்தின் மீதான பாகிஸ்தானின் இரட்டை வேடத்தை கடுமையாக விமர்சித்துள்ளனர். இந்த சம்பவமானது, சீனாவின் நிலைப்பாட்டை மேலும் கடினமாக்கும் என்றும், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை இது துரிதப்படுத்தலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
