இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) இன்று அதாவது நவம்பர் 28ஆம் தேதி வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, எதிர்பார்த்ததைவிட பலமடங்கு உயர்ந்து, செப்டம்பர் 30, 2025 உடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் 8.2 சதவிகிதமாக அதிர்ச்சி அளிக்கும் வகையில் வளர்ச்சி கண்டுள்ளது. இது கடந்த ஆறு காலாண்டுகளில் இல்லாத அதிகபட்ச வளர்ச்சி விகிதமாகும்.
உற்பத்தித் துறையில் ஏற்பட்ட திடமான வளர்ச்சி இதற்கு காரணமாகும். ஆய்வாளர்கள் 7% முதல் 7.5% வரையிலான வளர்ச்சியை மட்டுமே மதிப்பிட்டிருந்த நிலையில், இந்த 8.2% வளர்ச்சி மிக அதிகம். இதன் மூலம், இந்தியா உலகின் அதிவேகமாக வளரும் பொருளாதாரமாக தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
2025-26 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் நிலையான விலைகளில் ரியல் ஜிடிபி ஆனது ரூ.48.63 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் இருந்த ரூ.44.94 லட்சம் கோடியை விட 8.2% அதிகமாகும் என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த 8.2% ஜிடிபி வளர்ச்சியை பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி, இந்த வளர்ச்சி மிகவும் ஊக்கமளிக்கிறது என்று கூறினார். மேலும், நமது வளர்ச்சிக்கு ஆதரவான கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களின் தாக்கத்தை பிரதிபலிப்பதாகவும், நமது மக்களின் கடின உழைப்பை எடுத்துக்காட்டுவதாகவும் மோடி தெரிவித்தார்.
Q2 FY26-ல் பல முக்கிய துறைகள் திடமான வளர்ச்சியைக் கண்டுள்ளன. குறிப்பாக உற்பத்தி துறையில் எதிர்பாராத விதமாக 9.1% வளர்ச்சியடைந்தது. அதேபோல் நிதி, ரியல் எஸ்டேட் & தொழில்முறை சேவைகள் துறையில் 10.2% என்ற வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்தன.
வணிகம், ஹோட்டல்கள், போக்குவரத்து, தகவல்தொடர்பு சேவைகள் துறை 7.4% வளர்ச்சி அடைந்தது. விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த துறைகள் 3.5% வளர்ச்சி கண்டது.
இந்தியா கடந்த 10 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க திருப்புமுனையை கண்டுள்ளது. 2013-14 ஆம் ஆண்டில் உலக பொருளாதார அளவில் 11வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது நான்காவது பெரிய பொருளாதாரமாக உயர்ந்துள்ளது. 2013-ஆம் ஆண்டில், இந்தியா “Fragile 5” பொருளாதாரங்களில் ஒன்றாக பட்டியலிடப்பட்டது. ஆனால் இன்று, இந்தியா உலகின் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக உள்ளது.
2047-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை ‘விக்சித் பாரத்’ என்ற வளர்ச்சியடைந்த நாடாக மாற்றும் இலக்கை அடைய, நாட்டின் பொருளாதாரம் சராசரியாக அடுத்த 10 முதல் 20 ஆண்டுகளுக்கு சுமார் 8% நிலையான விலையில் வளர்ச்சி காண வேண்டும் என்று 2024-25-க்கான பொருளாதார ஆய்வறிக்கை வலியுறுத்தியுள்ளது. உலக வங்கியும் இந்த இலக்கை அடைய சீர்திருத்தங்கள் அவசியம் என்று கூறியுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
