ராமர் கோவிலில் பிரதமர் ஏற்றிய காவிக்கொடி குறித்து பாகிஸ்தான் சர்ச்சை கருத்து.. கருத்து சொல்லும் தகுதி பாகிஸ்தானுக்கு இல்லை என இந்தியா பதிலடி.. மதவெறி குறித்து பேசுவதற்கு பாகிஸ்தானுக்கு தார்மீக உரிமையே இல்லை.. உங்கள் நாட்டில் மனிதநேயம் நசுக்கப்படுவதை முதலில் கவனியுங்கள்..

உத்தரப்பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி காவிக்கொடி ஏற்றியது குறித்து பாகிஸ்தான் தெரிவித்த கருத்துகளுக்கு இந்தியா கடும் பதிலடி கொடுத்துள்ளது. அயோத்தி ராமர் கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவின் போது…

modi ayothi

உத்தரப்பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி காவிக்கொடி ஏற்றியது குறித்து பாகிஸ்தான் தெரிவித்த கருத்துகளுக்கு இந்தியா கடும் பதிலடி கொடுத்துள்ளது. அயோத்தி ராமர் கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவின் போது பிரதமர் காவி கொடி ஏற்றியது தொடர்பான பாகிஸ்தானின் விமர்சனங்களை இந்தியா முற்றிலும் நிராகரித்துள்ளது.

அயோத்தி ராமர் கோவிலில் பிரதமர் மோடியால் காவிக்கொடி ஏற்றப்பட்டதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்தியாவில் உள்ள சிறுபான்மை சமூகங்கள் மீது அழுத்தத்தை அதிகரிக்கவும், முஸ்லிம்களின் பாரம்பரியத்தை அழிக்கவும் மேற்கொள்ளப்பட்ட முயற்சி இது என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இந்த செயல் 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாபர் மசூதியை இடித்துவிட்டு அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டப்பட்டதை மறைமுகமாக பாகிஸ்தான் குறிப்பிடுவதாக கருதப்படுகிறது.

ஆனால் இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரண்தீர் ஜெய்ஸ்வால் பேசுகையில், “தற்போது வந்திருக்கும் கருத்துகள் குறித்து பார்த்தோம்; அதை புறக்கணிக்கிறோம். பாகிஸ்தானின் கருத்துகளுக்கு மதிப்பில்லை. சிறுபான்மையினரின் மீதான மதவெறி, அடக்குமுறை மற்றும் முறையான தவறான நடத்தை ஆகியவற்றில் ஆழமான கறைகள் கொண்ட நாடு பாகிஸ்தான்” என்று அவர் தெரிவித்தார்.

ரண்தீர் ஜெய்ஸ்வால் தனது கண்டனத்தை பதிவு செய்யும்போது, “மற்றவர்களுக்கு பாடம் எடுக்கும் தார்மீகத் தகுதி பாகிஸ்தானுக்கு இல்லை,” என்று வலியுறுத்தினார். மேலும், “போலிப் போதனைகளை வழங்குவதற்கு பதிலாக, பாகிஸ்தான் தனது பார்வையை தனக்குள்ளேயே திருப்பிக்கொண்டு, தனது மோசமான மனித உரிமை பதிவில் கவனம் செலுத்தினால் சிறப்பாக இருக்கும்” என்றும் அவர் கடுமையாக சாடினார்.

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, பிரதமர் மோடி 22 அடி உயரமுள்ள காவி நிற மத கொடியை ஏற்றி வைத்தார். நாடு முழுவதிலுமிருந்து வந்த 108 அர்ச்சகர்களின் வழிகாட்டுதலுடன் சடங்குகளை அவர் முன்னின்று நடத்தினார். பின்னர் உரையாற்றிய அவர், “500 ஆண்டு கால சபதம்” நிறைவேற்றப்பட்டுள்ளதாக பிரகடனம் செய்தார். “அயோத்தி அதன் வரலாற்றில் மற்றொரு சகாப்த நிகழ்வை காண்கிறது” என்று அவர் குறிப்பிட்டார். இந்த காவிக்கொடி, நித்திய ஆற்றல், தெய்வீக ஒளி மற்றும் ராமருடன் தொடர்புடைய பிற குணங்களை குறிக்கும் சூரியனின் சின்னத்தை கொண்டுள்ளது.

ராமர் கோவில் கட்டப்பட்டதன் பின்னணியில் நீண்ட சட்ட மற்றும் வரலாற்று போராட்டம் உள்ளது. டிசம்பர் 6, 1992 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டில், உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் இந்து மனுதாரர்களுக்கு சாதகமாக தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து, 2020 ஆம் ஆண்டு பிரதமர் மோடி ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, 2024 ஆம் ஆண்டு பிரமாண்டமான விழாவில் அவர் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்தினார்.