2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க, அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமியின் முன் இரண்டு முக்கியமான மற்றும் சிக்கலான கேள்விகள் எழுந்துள்ளன. இந்த கேள்விகளுக்கான அவரது பதில்கள், அ.தி.மு.க.வின் எதிர்காலத்தையும், தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தையும் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும்.
அரசியல் வல்லுநர்கள் மத்தியில் நிலவும் வலுவான கருத்து என்னவென்றால், 2021 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி தோல்வியடைந்ததற்கான முக்கிய காரணம், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி. தினகரன் தலைமையிலான அ.ம.மு.க.வை அக்காலகட்டத்தில் ஈபிஎஸ் கூட்டணியில் இணைக்க தவறியதுதான்.
தென் மாவட்டங்கள் மற்றும் தேவர் சமூக வாக்குகளை ஓபிஎஸ் மற்றும் டிடிவி பிரித்து சென்றனர். இந்த குழுக்களின் வாக்குகளை ஒருங்கிணைத்திருந்தால், பல தொகுதிகளில் வெற்றிக்கும் தோல்விக்கும் இடையேயான விளிம்பில் இருந்த தி.மு.க. வேட்பாளர்களை அ.தி.மு.க. கூட்டணி வீழ்த்தியிருக்க முடியும்.
“2021 தேர்தலில், பிரிந்து சென்ற அந்த வாக்குகளை ஈபிஎஸ் சேர்த்திருந்தால், சிறிய வித்தியாசத்தில் தோல்வியடைந்த பல தொகுதிகளை அ.தி.மு.க. கைப்பற்றி, இன்று தமிழகத்தின் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமிதான் இருந்திருப்பார்” என்று அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வரலாற்று ரீதியான இந்த தவறை உணர்ந்த பின்பும், ஈபிஎஸ் மீண்டும் அதே பிடிவாதத்துடன் 2026-ஐ எதிர்கொள்ளப் போகிறாரா என்பதே இப்போதுள்ள முக்கியமான கேள்வி.
எடப்பாடி பழனிசாமி முன் நிற்கும் முதல் மற்றும் மிகப்பெரிய சவால், அவரது தனிப்பட்ட அரசியல் இலக்குக்கும், கட்சியின் வெற்றிக்கும் இடையேயான முரண்பாடாகும். தி.மு.க.வின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து மீண்டும் அ.தி.மு.க.வை ஆட்சி கட்டிலில் அமர்த்துவது மட்டுமே முதன்மையான இலக்கு என்றால், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனுடன் ஒரு சமரசத்தை ஏற்படுத்தி, அவர்களை மீண்டும் கட்சிக்குள் அல்லது கூட்டணிக்குள் கொண்டு வர அவர் தயாராக இருக்க வேண்டும். அப்போதுதான் மொத்த அ.தி.மு.க. வாக்கு வங்கியையும் ‘இரட்டை இலை’ சின்னத்தின் கீழ் ஒருங்கிணைக்க முடியும்.
மாறாக, ‘கட்சியின் தலைமை முழுமையாக எனது கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்க வேண்டும், ஓபிஎஸ் மற்றும் டிடிவி ஆகியோர் கட்சியில் சேர்க்க கூடாது’ என்ற நிலைப்பாட்டில் அவர் உறுதியாக இருந்தால், அவர் மீண்டும் இந்த இரு சக்திகளின் வாக்கு பிரிப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதன் விளைவாக, அ.தி.மு.க. தேர்தல் தோல்வியை தழுவ நேரிட அதிக வாய்ப்பு உண்டு. சுருங்கச் சொன்னால், அதிகாரம் வேண்டுமானால், சமரசம் தேவை. பிடிவாதம் வேண்டுமானால், தலைமை மட்டுமே கிடைக்கும், ஆட்சி கிட்டாது.
இரட்டை இலை சின்னம் வரலாற்றுரீதியாக அ.தி.மு.க.வின் அடையாளம். ஆனால், அந்த சின்னத்தின் கீழ் ஜெயலலிதாவின் விசுவாசிகள் அனைவரையும் ஈபிஎஸ் அணிதிரட்ட வேண்டும். ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனின் பின்னால் உள்ள கணிசமான விசுவாசிகள் மற்றும் சமூக வாக்குப்பிரிவு, இரட்டை இலை சின்னத்தின் வீரியத்தைக் குறைக்கும்.
மேலும், நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ 2026-ல் புதிதாக வாக்குகளை பிரிக்கும்போது, அ.தி.மு.க.வின் பாரம்பரிய வாக்கு வங்கியின் ஒரு பகுதி மூன்று துண்டுகளாக பிரியும் நிலை உருவாகும். இந்த சூழலில், ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வின் பலம் மட்டுமே தி.மு.க.வின் வெற்றியை தடுக்க முடியும்.
இல்லையேல், 2021-ல் நடந்ததை போலவே, மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் பல தொகுதிகளை இழந்து, அ.தி.மு.க. தொடர்ந்து எதிர்க்கட்சி வரிசையிலேயே இருக்க நேரிடும். எடப்பாடி பழனிசாமி எந்த திசையை தேர்ந்தெடுக்கப் போகிறார் என்பதுதான் தமிழகத்தின் எதிர்கால அரசியல் தீர்மானிக்கும் புள்ளியாக உள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
