2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளும் தி.மு.க.வை தோற்கடித்து ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவதற்கு, பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் கைகோர்ப்பதுதான் ஒரே வழி என்று தமிழக அரசியல் வல்லுநர்கள் உறுதியாக கருத்து தெரிவிக்கின்றனர். இரு தரப்பும் பிடிவாதத்தை தளர்த்தி, சில சமரசங்களுடன் இறங்கி வந்தால் மட்டுமே தி.மு.க.வை வீழ்த்த முடியும் என்றும், இல்லையேல் தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி என்றும் அவர்கள் கணிக்கின்றனர்.
தற்போதைய தமிழக அரசியல் கள நிலவரம், அ.தி.மு.க. மற்றும் த.வெ.க. ஆகிய இரு தரப்பினருக்கும் ஒரு கடுமையான எச்சரிக்கையை விடுக்கிறது. அ.தி.மு.க. கூட்டணி வலுவாக இருந்தாலும், மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கான எதிர்பார்ப்பு மற்றும் விஜய்யின் இளைஞர் வாக்கு பிரிப்பு காரணமாக, அ.தி.மு.க.வால் தனித்து பெரும்பான்மையுடன் வெற்றி பெற முடியாது.
நடிகர் விஜய்யின் த.வெ.க.வுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருந்தாலும், குறுகிய காலத்தில் தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க.வின் பாரம்பரிய வாக்கு வங்கிக்கு ஈடாக சென்று வெற்றி பெறுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.
அ.தி.மு.க.வும், விஜய்யும் தனித்தனியாக போட்டியிடுவது என்பது, இருவருமே எதிரெதிர் துருவங்களின் வாக்குகளை பிரித்து, இறுதியில் தி.மு.க. கூட்டணியின் வெற்றியை எளிதாக்கும். இதனால், மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வரும் சூழ்நிலை உருவாகும்.
தி.மு.க.வின் ஆட்சியை அகற்ற விரும்பும் இரு கட்சிகளும், தங்களது தனிப்பட்ட வேறுபாடுகளை மறந்துவிட்டு, ஒரு பொதுவான இலக்கை நோக்கி நகர்ந்தால் மட்டுமே வெற்றி சாத்தியமாகும். விஜய்யின் புதிய முகங்கள், இளைஞர் ஆதரவு, அதிருப்தியாளர்கள் ஆகியோரின் வாக்குகளை கவர்ந்திழுக்கும் ஆற்றல், அ.தி.மு.க. கூட்டணிக்கு கட்டாயம் தேவை.அ.தி.மு.க.வின் வலுவான கட்டமைப்பு, பாரம்பரிய வாக்கு வங்கி மற்றும் நிதி பலம் ஆகியவை விஜய்க்கு அத்தியாவசியமானதாகும்.
எனவே, எடப்பாடி பழனிசாமி மற்றும் நடிகர் விஜய் ஆகிய இருவரும் தங்கள் பிடிவாதத்தை தளர்த்தி, பரஸ்பர மரியாதையுடன் ஒரு கூட்டணியை உருவாக்க இறங்கி வருவது காலத்தின் கட்டாயம். இந்த கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டுமானால், வெறும் தொகுதி பங்கீடு மட்டும் போதாது; அதிகார பகிர்வு குறித்து ஒரு துணிச்சலான ஒப்பந்தம் தேவைப்படும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
கூட்டணி வெற்றி பெற்றால், ஐந்து ஆண்டு முதலமைச்சர் பதவியை இரண்டாக பிரித்து, முதலில் ஒரு தரப்பு இரண்டரை ஆண்டுகளும், அடுத்த இரண்டரை ஆண்டுகள் மற்றொரு தரப்பும் முதலமைச்சராக பதவி வகிக்கும் ஒரு ஒப்பந்தம் குறித்துப்பேச்சுவார்த்தை நடத்தப்படலாம்.
இந்தக் கூட்டணி அமைந்தால், அ.தி.மு.க. தலைமை, விஜய்க்கு கணிசமான எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்க வேண்டும், அத்துடன் தேர்தல் வெற்றிக்கு பிறகு ஆட்சியில் அமைச்சரவை அந்தஸ்தில் அவருக்கு போதுமான பங்களிப்பை வழங்க வேண்டும்.
“ஈ.பி.எஸ். மற்றும் விஜய் தனித்தனியாக போட்டியிட்டால், தி.மு.க.வுக்கு வசதி. இருவரும் கூட்டணி அமைத்து சமரசம் செய்தால், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்களுக்கு வசதி.”
இல்லையேல், இரண்டு பெரிய கட்சிகளும் ஆட்சியைப் பிடிக்க முடியாத அளவுக்குத் தனித்தனியாக வாக்குகளைப் பிரித்து, தி.மு.க.வின் வெற்றியை உறுதி செய்யும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்பதே நிதர்சனம் என அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
