தமிழகத்தில் ஆளும் தி.மு.க.வின் மீதுள்ள அதிருப்தி மற்றும் சனாதனம், சமஸ்கிருதம் போன்ற விவகாரங்களில் தி.மு.க.வின் நிலைப்பாடுகள் காரணமாக, தி.மு.க.வின் ஆட்சியை அடுத்த தேர்தலில் வீழ்த்தியே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் தேசிய அமைப்புகள் களம் இறங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, அ.தி.மு.க.வில் ஒரு மெகா கூட்டணியை அமைப்பதற்கான வியூகத்தை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நேரடியாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்துத்துவ அமைப்புகள் தி.மு.க. ஆட்சியின் மீதான தங்கள் எதிர்ப்புக்கு பிரதான காரணமாகக் காட்டுவது, “சனாதனத்தையும் சமஸ்கிருதத்தையும் இழிவுபடுத்துவது” என்ற குற்றச்சாட்டைத்தான். தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து சனாதனம் குறித்து பேசி வருவது, பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் சித்தாந்தத்திற்கு எதிரான நேரடி மோதலாக பார்க்கப்படுகிறது.
எனவே, தமிழகத்தில் தங்களது சித்தாந்தத்தை வலுப்படுத்தவும், தி.மு.க.வின் ஆளுமையை குறைக்கவும், வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. ஆட்சியை அகற்றியே ஆக வேண்டும் என்ற தீவிர முடிவில் தேசிய அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இதற்காகவே, எதிர்த்து நிற்கும் அ.தி.மு.க.வை வலுப்படுத்தத் திட்டங்கள் தீட்டப்படுகின்றன.
வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அ.தி.மு.க.வின் அரசியல் நகர்வு முக்கியத்துவம் பெறுகிறது. அ.தி.மு.க.வின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் டிசம்பர் 10ஆம் தேதி நடைபெறவுள்ள சூழலில், இதற்கு காரணமாக ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்களின் சந்திப்பு அமைந்ததாக கூறப்படுகிறது.
சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் முன்னணி தலைவர்கள் இரண்டு பேர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது, தி.மு.க.வை வீழ்த்துவதற்கு ஒரு “பக்கா திட்டம்” வகுக்கப்பட வேண்டும் என்று அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
பீகார் சட்டமன்ற தேர்தலை அவர்கள் உதாரணமாக சுட்டிக் காட்டினர். அங்கு ஜே.டி.யு., பாரதிய ஜனதா, லோக் ஜனசக்தி போன்ற கட்சிகள் கருத்து வேறுபாடுகளை தாண்டி ஒன்று சேர்ந்ததால், இமாலய வெற்றி பெற முடிந்தது. அதேபோல், தமிழக தேர்தலிலும் பலமான ஒரு மெகா கூட்டணி தேவை என்று வலியுறுத்தப்பட்டது.
இரு துருவங்களாக இருந்த நிதீஷ் குமார், சிராக் பாஸ்வான் ஆகியோரை இணைத்து வெற்றி கண்டது போல், தமிழகத்திலும் அ.தி.மு.க.வின் முன்னாள் முக்கிய தலைவர்களான பன்னீர்செல்வம், செங்கோட்டையன், தினகரன் போன்றோரை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும். இந்த இணைப்பு நடந்தால், அ.தி.மு.க. தலைமையில் பலமான மெகா கூட்டணி அமையும். இதன்மூலம் தி.மு.க. ஆட்சியை அகற்றி விடலாம்” என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் ஈ.பி.எஸ்.ஸிடம் உறுதியாக எடுத்து பேசியதாக தகவல் வெளியானது.
ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் இந்த அழுத்தமான கோரிக்கை மற்றும் தர்க்கப்பூர்வமான உதாரணங்களை ஈ.பி.எஸ். கவனமாகக் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் அறிவுறுத்தலுக்கு பழனிசாமி அளித்த பதிலில், “அந்த மூன்று பேரையும் என்.டி.ஏ. கூட்டணியில் சேர்ப்பதற்கு எனக்கு ஆட்சேபனை இல்லை” என்று தெரிவித்திருப்பது, அவர்களை வெளியே வைக்க வேண்டும் என்ற தனது முந்தைய நிலைப்பாட்டில் இருந்து அவர் இறங்கி வந்திருப்பதை காட்டுகிறது.
எனினும், “அவர்களை மீண்டும் அ.தி.மு.க.வின் தனிப்பட்ட கட்சிக்குள் இணைப்பது குறித்து நான் தனிப்பட்ட முறையில் முடிவெடுக்க முடியாது. செயற்குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து ஆலோசித்து, இறுதியாக பொதுக்குழுவில் ஒப்புதல் பெற வேண்டும்” என்று அவர் கூறியதாக தகவல் வெளியானது.
ஈ.பி.எஸ்.ஸின் இந்த மறைமுக சம்மதமும், ஆர்.எஸ்.எஸ்.ஸின் தீவிர அழுத்தமும் இணைந்து, அ.தி.மு.க.வில் இனி வேற லெவலில் அரசியல் நகர்வுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் 10ஆம் தேதி நடக்கவிருக்கும் பொதுக்குழுவில், ஓ.பி.எஸ். மற்றும் டி.டி.வி. தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் இணைப்பது குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அ.தி.மு.க. நிர்வாகிகள் கருதுகின்றனர். இந்த இணைப்பு, தி.மு.க.வை வீழ்த்தும் பக்கா திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
