இந்தியா – பாகிஸ்தான் இடையே சமீபத்தில் நிகழ்ந்த மோதலில் இந்திய விமானப்படையின் ரஃபேல் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகவியலாளர் ஒருவர் வெளியிட்ட கூற்றை, பிரெஞ்சு கடற்படை கடுமையாக மறுத்துள்ளது. இந்த பொய் செய்தியை பரப்பிய பாகிஸ்தான் ஊடகவியலாளர் மீது பிரெஞ்சு கடற்படை வெளிப்படையாக நடவடிக்கை எடுத்திருப்பது மிகவும் அரிதான நிகழ்வாகும்.
பாகிஸ்தானைச் சேர்ந்த ஜியோ டிவி செய்தி நிறுவனமும் அதன் நிருபருமான ஹமீத் மிர் வெளியிட்ட கட்டுரை குறித்து, பிரெஞ்சு கடற்படை தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கத்தில் ஒரு மறுப்பை வெளியிட்டது:
பிரெஞ்சு கடற்படை அந்த கட்டுரையை தவறான மற்றும் உண்மைக்கு புறம்பான தகவல்கள் கொண்டது என்று குறிப்பிட்டு, #FakeNews என்ற குறியீட்டை சேர்த்திருந்தது.
நவம்பர் 21 ஆம் தேதி வெளியான அந்த கட்டுரையில், பிரெஞ்சு கடற்படை தளபதி கேப்டன் லானே, பாகிஸ்தானின் வான் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தியதாகவும், இந்திய ரஃபேல் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதை அவர் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்பட்டிருந்தது. பிரெஞ்சு கடற்படை வெளியிட்டுள்ள மறுப்பில், தவறாக பெயரிடப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டியுள்ளது. கட்டுரையில் தளபதியின் பெயர் ஜாக்கி லானே என்று குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், அவரது உண்மையான பெயர் கேப்டன் இவான் லானே ஆகும் என்றும் குறிப்பிட்டு இதில் இருந்து அந்த கட்டுரையில் கூறப்பட்டிருந்த அனைத்து தகவல்களும் தவறானவை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தோ-பசிபிக் பாதுகாப்பு மாநாட்டில் கேப்டன் இவான் லானே கலந்து கொண்டபோது, பாகிஸ்தானிய ஊடகவியலாளர் அவரை தவறாக மேற்கோள் காட்டி இந்த கட்டுரையை வெளியிட்டார். கேப்டன் லானே இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்து உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை என்று பிரெஞ்சு கடற்படை தெளிவுபடுத்தியது. இந்திய ரஃபேல் ஜெட்கள் சீன அமைப்புகளால் ஜாம் செய்யப்பட்டது குறித்த யூகங்களுக்கு அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
மேலும், கேப்டன் லானேவின் பணி ராணுவ நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்குவது அல்ல; அவர் பிரெஞ்சு ரஃபேல் மரைன் விமானங்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ள கடற்படை விமான தளத்துக்குத் தலைமை தாங்குவதுடன் அவரது பொறுப்புகள் வரையறுக்கப்பட்டவை என்றும் பிரெஞ்சு கடற்படை சுட்டிக்காட்டியது.
பாகிஸ்தான், மே மாதத்தில் இந்தியாவுடன் ஏற்பட்ட மோதலுக்கு பிறகு, இந்திய ரஃபேல் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக எந்த ஆதாரமும் இல்லாமல் தொடர்ந்து கூறி வருகிறது. இந்தியாவின் எதிர்க்கட்சிகளும் இதுகுறித்து ஆதாரமில்லாமல் குற்றஞ்சாட்டி வருகிறது.
இந்தியாவோ, தாம் குறைந்தபட்சம் ஐந்து பாகிஸ்தான் போர் விமானங்களையும், ஒரு பெரிய விமானத்தையும் சுமார் 300 கிமீ தொலைவில் இருந்து சுட்டு வீழ்த்தியதாக உறுதியாக கூறுகிறது.
பிரெஞ்சு கடற்படையின் இந்த வெளிப்படையான மறுப்பு, சர்வதேச அளவில் பாகிஸ்தானின் தவறான தகவல் பரப்புதல் இயந்திரத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
